காணக் கிடைக்காத காப்பியங்கள்!

 காணக் கிடைக்காத காப்பியங்கள்!


காணக் கிடைக்காத காப்பியங்கள்!

தமிழ் இலக்கியம் பழமைச் சிறப்புடையது. பரந்த நோக்குடையது. பண்பு அமைந்த பெட்டகமானது. பல நாடுகளின் பன்மொழிப் புலமையாளர் தம் பாராட்டுக்குரியது. போற்றுதற்குரியது. இது என்று பிறந்தது என்றுரைக்க முடியாமல் இதயம் விம்மச் செய்யும் விந்தையுடையது. பிற்காலத்து நூலோர் பழஞ் சிறப்புடைய பண்டைய நூல்களைப் பகுத்தும் தொகுத்தும் பார்த்து மகிழ்ந்தனர். அதையே மிகப் பிற்காலத்தார் தொடந்து போற்றி வருகின்றனர். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென் கீழ்க்கணக்கு, அகநானூறு, புறநானூறு என்ற பெருந்தொகை, ஐம்பெரும் காப்பியங்கள் என்றவாறு வகைப்படுத்தி வழங்குவதாயிற்று. தமிழ் இலக்கியங்களின் நெடிய வரலாற்றில் ஐம்பெருங் காப்பியங்கள் என்னும் வழக்கு நிலைபெற்று வருகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


வடமொழியாளர்களும் ‘பஞ்சகாவியம்’ என்று வழங்கும் மரபு உள்ளதென்பர். தமிழ் ஐம்பெருங்காப்பியங்கள் என்னும் வழக்கு இருப்பதைக் கூறுகிறது ஒரு பழம் பாடல்,

சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் கந்த மணிமேகலை புனைந்தான் – நந்தா வளையாபதி தருவான் வாசவனக்கு ஈந்தான் திளையாத குண்டல கேசிக்கும்

இப்பாடலில் முதலில் குறிக்கப் பெறுவன மூன்று :

1. சிந்தாமணி, 2. சிலப்பதிகாரம், 3. மணிமேகலை என்பன நம் கண்ணிற் காணவும், கற்கவும், துய்த்து இன்புறவும், கிட்டியுள்ளன. மற்ற இரு நூல்களான வளையாபதி, குண்டலகேசி என்பன இதுவரை முற்றாகக் கிடைக்கவில்லை என்று கற்றோர் கவலையுற்றுக் கழறுகின்றனர்.

யாப்பருங்கலம் எனும் இலக்கண நூலில் கடவுள் வாழ்த்துப் பாடலாக வருவதெனக் கூறப்பெறும் பாடல் ஒன்றுண்டு.

உலகம் மூன்றும் ஒருங்குடன் ஏத்துமாண்
திலகமாய திறல் அறிவன் அடி
வழுவுஇல் நெஞ்சொடு வாலிதன் ஆற்றவும்
தொடுவாள் தொல்வினை நீங்குக என்றுயான்

என்பதாகக் கூறுவார் முன்னோர். பெரும் புலவரும் பெரும் உரையாசிரியருமான நச்சினார்க்கினியர் மேற்கண்ட பாடல் வளையாபதி காப்பியத்தினுடையது என்று குறித்துள்ளார். இதனையும் கற்றோர் போற்றி வருகின்றனர். புறத்திரட்டு என்பதொரு நூல். அதில் 66 பாடல்கள் வளையாபதி நூலினை சேர்ந்ததென்று கூறப்பட்டுள்ளது. எழுபத்திரண்டு பாடல்கள் என்றும் எடுத்துக் காட்டப் பெறுகின்றன.

வளையாபதி :

திருக்குறள் பாடல்களை எடுத்தாளும் பான்மையை அறிஞர் எடுத்துக் காட்டுவர். அதனால் திருக்குறளுக்குப் பின்னர் தோன்றியதே வளையாபதி காப்பியம் என்பர். இக்காலத்தில் இச்சமயத்தார் எங்கும் பரவலாக வாழ்வதைக் காணலாம். சமண சமய வரலாற்றுச் சின்னங்களும் தடங்களும் எங்கும் காட்சியை விளங்கிக் கொண்டிருக்கின்றன. பழமையான சங்கப் பாடல்கள் சுருங்கக் கூறும் சொற்சித்திரங்கள்; தனிச் செய்திகள். காப்பியங்களோ பிற்காலக் கதைப் படைப்புகளாக பெருகி எழுந்தவை. சமயங்களைப் பரப்பும் சதுரப்பாடுகளாகச் சமைந்தவை. உலக வாழ்வு நிலையற்றது என்பது பழைய அருக சமயம். உயிர் வாழ்தல் கடவுள் என்னும் பெரும்பதம் நோக்கிச் செல்வதற்கே என்பது அச்சமயக் கொள்கை. சான்றோர் பலர் சர வரிசையில் சமணத்தைக் காத்து வந்தது வரலாறாய் விளங்குகிறது.

நிலையற்ற பொருள்களை நினையாமல் விலகி வாழச் சொல்வதே சமய நெறி. அன்பும் அறமும் வாழ்வில் நிலைக்கச் சொல்வது சமயம். கல்வியும் ஒழுக்கமும் கண்ணென ஓம்புமாறு வழி காட்டுவது அருக சமயம். உயிர் ஓம்புதல், உணவு உதவுதல் அவர்களின் உயர்ந்த உயிர் வாழ்வுத் தொண்டாகும். நல்வினை, தீவினைகள் என்று பாகுபடுத்திப் பண்பட்ட வாழ்வைப் பகர்வது அருக நெறி. வளையாபதி சமணக் காப்பியம் என்கின்றனர். எனினும் சிவன் பற்றிய கருத்துகளடங்கிய செய்யுள்களும் உள்ளன. முழுக் கதையிருந்தால் சிவக்கதை பற்றிய செய்திக்கு விடை தெரிந்திருக்கும். துண்டுப் பாடல்களால் தொடர் கதை தெரிய வாய்ப்பில்லை. சமயச்சாரமும், நிலையாமையும் தெரிவது மட்டும் வெளிப்படை. நாகாத்தல் நன்று. இன்றேல் சொல்லிழுக்குப்பட்டுச் சோர்வர் என்பார் திருவள்ளுவர். அதனையே வழி மொழியும் பாடலைக் காண்கிறோம்.

ஆக்கும் பகுக்கும் அருந்தளைவாய்ப் பெய்விக்கும்
போக்கப் படுக்கும் புலைநரகத்து உய்ப்பிக்கும்
காக்கப் படுவன இந்தியம் ஐந்தனுள்
நாக்கல்ல தில்லை நனி பேணு மாறே.

வளையாபதியில் நிலையாகக் கூறும் கூற்றும் காணத்தகும். நல்லோர் விலக்க வேண்டியவற்றை நல்லதொரு பட்டியலே தரப்பட்டுள்ளது. பொய்யன்மின் புறம்கூறன்மின் யாரையும் வையன்மின் வடிவல்லன் சொல்லி நீர் உய்யன்மின் உயிர்கொன்று உண்டு வாழுநாள் செய்யன்மின் சிறியாதொடு தீயன்மின் வித்தின்றேல் விளைவுண்டா? என்று வினா எழுப்பி விடை கூறுதலைப் பார்க்கிறோம்.

உய்த்து ஒன்றி ஏர்தந்து உழஉழுது ஆற்றவும் வித்தின்றிப் பைங்கூழ் விளைகுறல் என் ஒக்கும் மெய்த்தவம் இல்லான் பொருளோடு போகுங்கட்கு எய்த்து உழந்தேதான் இடர்படு மாறே

முற்பிறவிப்பயனே இப்பிறவியில் கிட்டும் எனும் கருத்து இங்கே வலியுறுத்தப் பெறுவதை அறிகிறோம். பிறர்க்கு துன்பம் தராமல் பெரிது வந்து நன்மை புரியுமாறு பேசுகிறது சமண சமயம். இதனை விளக்கும் பாடல்களே இதுவரை கிடைத்துள்ளன. அவை எழுபத்திரண்டும் கற்கக் கற்கச் சுவையும் பயனும் தருவன. கல்வியுலகம் இதனைத் தமிழ்ச் செல்வம் எனப் போற்றி வருகிறது.

குண்டலகேசி :

இந்தியத் துணைக் கண்டம் என்னும் பெரும் நிலப்பரப்பில் வடபுறம் பழைமைச் சான்றோரால் பிறந்த தென்பர். சமண சமயத்தை அடுத்த காலத்தில் கௌதம புத்தரால் தொடங்கிய இயக்கமே பௌத்தம் என்பர். கொலையுடன் கூடிய வேள்வி சார்ந்த பல முனைகள் உடைய வேதங்கள் கொண்ட தேவ வழிபாட்டை ஏற்காத நிலையில் புதிய வழி கண்டாராம் புத்தரான கௌதம சித்தார்த்தர். தென்னகம் அறியாத தெய்வ வழிபாட்டு முறைகள் வடபாலிருந்து பரவலாயின. அவா அறுத்தல், புலனடக்கம், அமைதியுடன் வாழ்தலே புத்த சமயம் புலப்படுத்திய நெறிகள். தொடக்கக் நிலையே தொடர்தல் என்பது எங்கும் எதிப்பார்க்க இயலாததாகவே வரலாறு காட்டுகிறது. அன்பும் அறநெறிகளும் கொண்டு அளவற்ற அவாக்களை அணுகாமல் தூய நெறியில் தொண்டாற்றத் தூண்டின புத்தரின் அறிவுரைகள். எண்ணற்ற விளக்கங்கள் காலப் போக்கில் கூடலாயின. புத்த சமயத்தைப் பரப்பும் வகையில் புனையப் பெற்ற காப்பியக் கதையே குண்டலகேசி என்பர் கற்றறிந்தோர். பத்தொன்பது செய்யுள்களே பார்வைக்கு கிடைத்ததாய் பழம் புலவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இதனையே இலக்கிய வரலாறாக ஏற்று வருகிறது தமிழுலகம்.

போர்த்தல் உடை நீக்குதல் பொடித்துகள் மெய்பூசல் கூர்த்த பனி ஆற்றுதல் குளித்து அழலுற நிற்றல் சார்த்தர் இடு பிச்சையார் சடைத்தலையர் ஆதல் வார்த்தை இவை செய்தவம் மடிந்து ஒழுகல் என்றான்.

என்பதொரு எழிற் பாடல். வேடம் புனைதலை வெறுக்கச் சொல்லும் கருத்தைக் காண்கிறோம். மனித உடலைப் பொய்யான தென்றும், ஒரு நாற்றம் கொண்ட தென்றும், புனையும் வழிகளால் ஆவதொன்றுமில்லை என்றும் பாடல்கள் நிலையாமையை நினைப்பூட்டுகின்றன. மனிதகுலம் ஒத்த நிலையுடையதென வரையறுத்தது புத்த சமயம். அதை வகை வகையாய் வரைந்து காட்டிய கதைகளே சமயம் பரப்பும் சாலைகளாயின. அரசமரத்தின் கீழமர்ந்து அறிவொளி கண்ட அன்பு வழி வளர்ச்சிப் போக்கில் வாதங்களால் பின்னலிட்டது. வாக்குவல்லார் வளப்படுத்தும் வழி முறையை வாய்த்தவையே கதைப் படைப்புகள். குண்டலகேசியும் ஒரு பெண் துறவியின் வாழ்வும் விளக்கவுரையும் என்பர். மணிமேகலைக் காப்பியமும் அதனைப் பாங்குறப் படைத்துக் காட்டியது. இவ்வழியில் குண்டலகேசி எனும் காப்பியமும் தொன்றியதா கலாம். எனினும் முழுதும் கிடைக்காதது பேரிழப்பே, குற்றமின்றி வாழக் குண்டலகேசியில் ஒரு செய்யுள்,

மண்ணுளார் தம்மைப் போல்வார்
மாட்டதே அன்று வாய்மை
நண்ணினார் திறத்தும் குற்றம்
குற்றமே நல்ல ஆகா
விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த
விழுமியோன் நெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டம் தன்மேல்
கறையை யார் கறையன்று என்பார்

ஆதலும் அழித்தாலும் பற்றிய அரியதொரு பாடலும் காண்கிறோம். மறிப மறியும் மலிர்ப மலிரும் பெறுப பெரும் பெற்று இழப்ப இழக்கும் அறிவது அறிவாக அழுங்கார் உவவார் உறுவது உறும் என்று உரைப்பது நன்று.

மணிமேகலையில் உள்ள புத்த சமயச் சாரமும் புத்தனின் வழியில் வளர்ந்த வேகமும் குண்டலகேசியிலும் இருந்திருக்கக் கூடும். இதனைக் கிடைத்துள்ள சில பாடல்களே சான்று கூறுகின்றன எனலாம். பல சமயச் சார்போடு பின்னிப் பிணைந்து வளர்ந்து செழித்த தமிழ் மொழியின் சொற்செல்வங்கள் அனைத்தும் அழியாமல் கிடைத்திருந்தால் மேலும் பல இன்ப நிலைகள்பெற்றிருப்போம். சமயம் பேசுவன எல்லாம் மனித வாழ்வறம் வளர்ப்பதை யாரும் மறுப்பாரிலர்.

செந்தமிழ்ச் செல்வங்களின் பட்டியலில் சிறப்பிடம் பெற்று விளங்கும் சிந்தாமணியும் சிலம்பும், மேகலையும் கண்டு நெஞ்சார உண்டு மகிழ்கிறோம். வளையாபதியும், குண்டலகேசியும் காப்பியங்கள் எனும் விருதுகளோடு விளம்பப்படுவதையும் மறவாமல் போற்றி வருகிறோம். அன்பும், அற வழிகளும் பாடிப் பண்படுத்தும் தமிழ்க் காப்பியங்களும் மனித குலத்துக்கு ஒளி வழிகாட்டி உயிரூட்டி வருவதே கண் கண்ட வெற்றி. ஐம்பெருங் காப்பியங்கள் ஐம்புலன்களையும் நெறிப்படுத்தும் அரிய உயிர்ச் சத்துக்ளாகும். அருகநெறியும் – புத்தர் வழியும் அன்பு வாழ்வில் நடத்தி இன்ப நிலையில் இறுத்துமா?

  • வெள்ளையாம்பட்டு சுந்தரம்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: