கல்லறைகள் கருத்தரிக்கும் “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்”!

கல்லறைகள் கருத்தரிக்கும் “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்”!

கல்லறைகள் கருத்தரிக்கும் “துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்”!

மீண்டும் தாயக மண் மீட்கப்படும். அதே துயிலும் இல்லங்கள் மீண்டும் நிறுவப்படும். அவை மத வேறுபாடற்ற, சாதி வேறுபாடற்ற, கோயில்களாகும். மறைந்த போராளிகளின் உயிர்கள் அந்தக் கோயில் தெய்வங்களாகும்.

இரட்டை வாய்க்கால், விசுவமடு, முள்ளியவளை, கிளிநொச்சி, வன்னிவிளாங்குளம், ஆலம்குளம், ஈரப்பெரியகுளம், முளங்காவில், ஆட்காட்டிவெளி, பண்டிவிருச்சான், அளம்பில், உடுத்துறை, கோப்பாய், சாட்டி, கொடிகாமம், ஈச்சம்குளம், எள்ளாம் குளம், புதுவையாறு, மணலாறு, புடிமுகாம், தரவை, தாண்டியடி, சுண்டலடி, வாகரை, ஆலங்குளம், திருமலை, மாவடி முன்மாதிதி, கஞ்சிகுடிச்சாறு, பெரியகுளம், தியாகவனம், கோட்டைமாவடி என்கின்ற எங்கள் மாவீரர்களின் கோவில்கள் நிச்சயம் கருத்தரிக்கும், மயானங்கள் புதைகுழிகள் துயிலும் இல்லங்கள்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இறந்த உடல்களை அடக்கம் செய்யும் இடங்கள் என்ற வகையில் மயானங்கள் – புதைகுழிகள் – துயிலும் இல்லங்கள் மூன்றுக்கும் ஒரே அர்த்தமே. ஆனால் ஒவ்வொன்றும் தனித்துவம் உடையவை. அவைகளின் தாற்பரியங்களும் வேறுபட்டவை.

மயானங்கள் – புதைகுழிகள் – துயிலும் இல்லங்கள் மூன்றும் வெவ்வேறுதான். ஏனெனில், உண்மையில் துயிலும் இல்லங்கள் ஈழத் தமிழரின் கோயில்கள்.

மயானங்கள் :

இயற்கையாகவோ அன்றி இயல்பான சூழலில் அனர்த்தமாகவோ இறந்தவரை அடக்கம் செய்யும் இடம் அல்லது ஈமக்கிரியைகள் செய்யும் இடமே மயானம். தீயிட்ட உடலின் சாம்பலைக் கடலில் கரைத்து இயற்கையுடன் இணைப்பது, அடக்கம் செய்த இடத்தில் சமாதியோ அல்லது சிலுவையோ அமைத்து திவசங்களின் போது அந்த இடத்தைக் கோயிலாகக் காண்பது, இஸ்லாமிய மதத்தவர் போல ஒன்றுமே நிறுவாமல் இயற்கையுடன் இணைப்பது – பள்ளிவாசலில் சிலைகள் படங்கள் எதுவும் இல்லை அனைத்துமே இயற்கையுடன் – இறைவனுடன் – உடலைச் சங்கமமாக்கும் சம்பிரதாயம், மரபு. தமிழினத்தில் பல மதங்கள் இருந்தாலும் அவை யாவும் இச்சமயத் தத்துவத்தில் ஒத்துப் போகின்றன.

புதைகுழிகள் :

போர் விதிகளை வரையறை செய்துள்ள சாசனமான, ‘ஜெனீவா ஒப்பந்தம்”, இரண்டாம் உலகப் போரின் பின்னர் அனைத்துலக நாடுகளாலும் ஏற்றுக் கைச்சாத்திடப்பட்டது. இதில் மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள், அகதி முகாம்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவை தாக்கப் படக் கூடாதவையாகவும், பொதுமக்கள், உதவி நிறுவனங்கள், நோயாளிகள் போன்ற பலர் தாக்கப் படக்கூடாதவர்களாகவும் வகைப்படுத்தி விதிகளாக ஆக்கப்பட்டுள்ளன. போர்க் கைதிகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது கூட விதியாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் அனைத்தினது மீறல்களையும் கடந்த 50 ஆண்டுகளாகத் தம்மை ஆளும் அரசினாலும் மற்றவர்களாலும் சந்தித்த, இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கின்ற ஒரே இனம் என்ற வரலாற்றுச் சாதனைக்கு இலங்கைத் தமிழினம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும். இந்த விதிகள் அனைத்தினது மீறல்களையும் செய்தவர்கள் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைத்து – பூசி மெழுகி – உடல் அடக்கம் செய்யும் இடம் தான் புதைகுழிகள். துரையப்பா விளையாட்டரங்கு, செம்மணி, கைதடி இன்னும் எத்தனையோ?

ஏன்றோ ஒருநாள் இவை அனைத்தும் தோண்டப்படும். அன்று உண்மை அம்பலமாகும் மயானத்துக்குப் போனவர்கள் நாலு பேருக்கு நன்றி சொன்னால் போதும். ஆனால் புதைகுழிக்குள் போனவர்கள் படைப் பிரிவினர்களுக்கும் அவர்களுக்கு அதிகாரம் இட்டவர்களுக்கும் பதில் சொல்லும் வரை போகவே மாட்டார்கள். உடல் தானே புதைக்கப்பட்டது. உயிரில்லையே.

துயிலும் இல்லங்கள் :

போர்கள் நடந்து முடிவில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நினைவுத் தூபிகள் போரிட்ட நாடுகளின் நகரங்களில் முக்கிய இடங்களில் நிறுவப்படும். அவற்றில் போரில் உயிர் நீத்தவர்களின் பட்டியல் செதுக்கப் பட்டிருக்கும். ஆனால் போர் நடந்து முடியும் முன்னரே போரில் மரணித்த மீட்கப் பட்ட வீரர்களின் உடல்களைப் புதைத்தும், உடல்கள் மீட்கப்படாத மரணித்த வீரர்களை நினைத்தும் வேறு வேறு கிராமங்களில் தேர்ந்தெடுத்த இடங்களில் தூபிகளை அமைத்து – எம் வீரர்கள் மரணிக்கவில்லை. அவர்கள் இந்த இல்லங்களில் துயில்கிறார்கள். அவர்களின் உடல்கள் இங்கே விதைக்கப்பட்டிருக்கின்றன – என்ற ஒரு புதிய சித்தாந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கினர். இந்தச் சித்தாந்தத்தை விளக்கிட ‘விரித்திட விரித்திடப் பொருள் பலவாய் வெளிவந்தன வந்தன வந்தனவே” என்று பாரதியின் ‘தம்பி கழற்றிடக் கழற்றிட துணி புதிதாய் வளர்ந்தன வளர்ந்தனவே” பாஞ்சாலி சபத வரிகளிடம் அடி எடுக்கலாம் எனத் தோன்றுகிறது.

உடல்கள் விதைகள் என்றால் விதைத்த சில நாட்களில் அவை முளைத்துவிடும். அதாவது ஒரு போராளி மரணத்தைத் தழுவும் போது பல போராளிகளல்லாதோர் மனங்களில் அந்த விதை வேர் விடுகிறது. போராளிகள் முளைப்பார்கள். ஓரணு உயிரினம் பலவாக Multiple Fission of cells என்ற வகையில் பெருகுவது போல. இது மேலே சொன்ன சித்தாந்தத்தின் ஒரு விரிவு. அருச்சுனன் அபிமன்யுவுக்குச் சுபத்திரையின் கர்ப்பத்தில் இருக்கும் போதே வியூகங்களை உடைத்துச் செல்வதைக் கற்பித்தது போல, எத்தனையோ தமிழ்த் தாய்மாரின் கர்ப்பத்திலேயே ஒரு போராளி மரணத்தைத் தழுவும் போது, அவன் வித்துடல் துயிலும் இல்லங்களில் தகுந்த மரியாதையுடன் விதைக்கப் படும்போது, பல போராளிகள் வேர் விடுவார்கள். இது மேலே கூறிய சித்தாந்தத்தின் வேறொரு விரிவு.

எம் இன விடுதலைக்கு இந்த இளம் வயதில் போராளிகள் வாழ்வை அனுபவிக்காது உயிரைக் கொடுத்தார்களே! நாம் என்ன செய்தோம்? ஏன்ற வினாவை துயிலும் இல்லங்களுக்குச் செல்பவர்களின் உயிர்களில் கரைத்துவிடுகிறது. வேர் விடுகிறது. போராளிகள் மரணிக்கவில்லை. என்றால்தானே மறைந்த போராளிகளின் உயிர்கள் அங்கு செல்பவர்களின் உயிர்களுடன் உறவாட முடியும். இது மேலே கூறிய சித்தாந்தத்தின் பிறிதொரு முடிவு.

மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தினரால் சிதைக்கப்படுகின்றன. என்ற செய்தி ஒரு புறம், கோயில்கள் இடிக்கப்படுகின்றன என்ற வேதனை மறுபுறம். இச்செய்கையின் விளைவு செய்தவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறதே என்ற அவர்களின் அறியாமையைப் பார்த்த பரிதாபம். மறைந்த போராளிகளின் விதைகளில் முளைத்த மரங்கள் வெட்ட வெட்டத் துளிர்ப்பவை. அந்த மரங்கள் வேரோடு சாய்த்தாலும் நிலத்திலிருந்து முழுமையாகப் பிடுங்கப்படாத தும்பு வேர்களிலிருந்தும் முளைப்பவை. ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி” ஆனால், போராளிகளோ இருந்தால் ஆயிரம் பொன். இறந்தாலோ பல்லாயிரம் பொன். நினைவுகள் சிதைக்கப்பட்டால் கோடி பொன் என்பது புதுமொழி. இல்லை இல்லை. மேலே கூறிய சித்தாந்தத்தின் இன்னுமொரு விரிவு.

ஒரு கோயில் கட்டுவதன் தாக்கத்தை விட அதை இடிப்பதன் தாக்கம் பல மடங்கு கூடியது. ஈழத் தமிழ் நெஞ்சங்கள் மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை இராணுவத்தினரால் சிதைக்கப்படுகின்றன. என்ற செய்தியைக் கேட்டுக் கொதிக்கின்றன. மீண்டும் அந்த மண் மீட்கப்படும். அதே துயிலும் இல்லங்கள் மீண்டும் நிறுவப்படும். அவை மத வேறுபாடற்ற, சாதி வேறுபாடற்ற, கோயில்களாகும். மறைந்த போராளிகளின் உயிர்கள் அந்தக் கோயில் தெய்வங்களாகும்.

மயானங்கள் – புதைகுழிகள் – துயிலும் இல்லங்கள் மூன்றும் வெவ்வேறானவை. ஏனெனில் துயிலும் இல்லங்கள் – ஈழத் தமிழரின் கோயில்கள். மாவீரர் துயிலும் இல்லங்களை மனங்களில் குடிவைப்போம் சிங்களத்தால் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் தமிழர்களின் உறங்கு நிலை மாறும் வரை மாவீரர் துயிலும் இல்லங்களை மனங்களில் குடிவைப்போம். கல்லறைகள் இல்லாவிட்டாலும்.. எங்கள் இதய அறைகளில் உங்களுக்கு விளக்கு ஏற்றுவோம்!

நாங்கள் அழிந்து போனவர்கள்தான்..
ஆனால்..
முற்றாக அல்ல!
எங்கள் மாவீரர் கல்லறைகளை
மாடுகள் அழித்து விட்டன..
பன்றிகள் கிண்டி விட்டன..
அதனால்..
கல்லறைகளில் விளக்கு
ஏற்ற மாட்டோம் என்பது உண்மை அல்ல..
எங்கள் இதய அறைகளில் உங்களுக்கு
இம்முறை ஏற்றுவோம் தீபங்கள்!
ஒவ்வொரு வருடமும் உங்களை
ஒரு கணம் எண்ணி.. கண்ணீர் சிந்துகிறோம்
என்பது உண்மைதான்..!
ஆனால்..
எப்போதும் நாம் கண்ணீர் சிந்திக்
கொண்டிருக்க மாட்டோம்..!
எதிரிகள்..குருதி சிந்தி
அழிவதை ஒருநாள்
உங்களுக்கு காட்டுவோம்..
அப்போது..இன்றுபோல் அந்த..
கார்த்திகை மலர்கள்..
எங்கள் மண்ணின் தேசிய மலர்கள்..
குப்பென்று மலர்ந்திருக்கும்..
அப்போது உங்கள்..
விழிகளை திறந்து
பாருங்கள் எங்கள் உறவுகளே!

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: