“திராவிடர் கழகமா? – தமிழர் கழகமா?” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்!

27.08.1944 அன்று சேலத்தில் நடைபெற்ற 16-வது நீதிக்கட்சி மாநாட்டில் கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

‘திராவிடர் கழகம்’ என்னும் பெயர் மாற்றத்திற்கு அண்ணல் தங்கோ, கி.ஆ.பெ.விசுவநாதம், சவுந்தர பாண்டியனார், மு.தங்கவேலு ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு நடைபெற்றதற்கான புறச்சான்றுகள் எதுவுமில்லையென்றும், கி.ஆ.பெ.வி.க்கும், பெரியாருக்குமிடையே நிலவிய முரண்பாடு கட்சித் சீரமைப்பு தொடர்பானதேயன்றி, “திராவிட நாடு” கேட்டதிலோ, “திராவிடர் கழகம்” பெயர் மாற்றியதலோ அல்லவென்றும் பெரியார் இயக்கங்கள் திரும்பத் திரும்ப கூறி வருகின்றன.

இது உண்மையல்ல, சேலம் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே கி.ஆ.பெ.வி. “திராவிட நாடு” கருத்தியலில் மாறுபாடு கொண்டுள்ளதையும், “தமிழ் நாடு”என்பதில் உறுதியாக இருந்துள்ளதையும் அறிஞர் அண்ணா அவர்கள் கி.ஆ.பெ.வி.க்கும், சவுந்தர பாண்டியனாருக்கும் எழுதிய இரண்டு கடிதங்கள் உறுதிப்படுத்துகின்றன.

15.01.1942இல் சென்னையில் ஜஸ்டிஸ் இளைஞர் மாநாட்டிற்கு கி.ஆ.பெ.வி.யைத் தலைமை தாங்கும்படி அண்ணா கடிதம் ஒன்றின் மூலமாக கேட்டுக் கொண்டார். கி.ஆ.பெ.வி.யின் கொள்கை நிலைப்பாட்டை உணர்த்தும் அண்ணாவின் கடித வரிகள் பின்வருமாறு:

“திருவாரூர் மாநாட்டில் திராவிட நாடு பற்றிய தீர்மானம் நிறைவேறியிருப்பதால் அதனை எதிர்ப்பது முறையல்ல, திராவிட நாடு பிரிவினை என்பது தமிழ்நாடு தமிழருக்கே என்பதற்கு முரண் அல்ல. இக்கருத்தில் தங்களுக்கு விருப்பமில்லாவிடில், தமிழ் நாடு தனி மாகாணம் ஆவதன் அவசியம் பற்றி தலைமை உரையில் விளக்குங்கள்”

12.08.1944இல் W.P.சவுந்தரபாண்டியனார் அவர்களுக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் கி.ஆ.பெ.வி.யை சந்தித்து வரக்கூடிய சேலம் மாநாட்டில் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளும்படி அண்ணா கடிதம் ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

அது பின் வருமாறு:

“அன்புடைய தலைவருக்கு, வணக்கம். தங்கள் கடிதம் கண்டேன். மகிழ்ந்தேன். KAP அவர்கள் வருவது பற்றி மிக்க சந்தோசமே, மாநாட்டுக்கு முன்பு அவரை வரவழைத்துத் தாங்கள் கட்சியின் இன்றைய நிலையைக் கூறுதல் அவசியம் என்று கருதுகிறேன். ஏனெனில், அவருடைய முன்னைய குற்றச்சாட்டுகளுக்கும், இன்றுள்ள கட்சியின் பிரச்சனைக்கும் இடையே பலப்பல மாறுதல்கள் உண்டாகி விட்டன எனவே பழையதைக் கிளறிக் கொண்டு எதிர்காலத் திட்டத்தை இடருடையதாக்கிக் கொள்ளக் கூடாது என்று கருதுகிறேன்.

குறிப்பாக, அவர் :

1) கட்சிக்காக தரப்பட்ட நிதி,
2) கட்சியின் பத்திரிக்கை,
3) கட்சித் தலைவரின் ஏகபோக உரிமை
4) அமைப்பு முறை இல்லாமை என்பவைகளையே வற்புறுத்துபவர்
5) “தமிழ்நாடு தனி நாடாதல் வேண்டும், திராவிட நாடு அல்ல என்று கூறுவார். K.A.P. தவிர மற்றவர்கள் திராவிட நாடு என்ற குறிக்கோளோ, வரலாறு, இனப் பண்பு, முதலியவற்றுக்கு ஏற்றது என்பதையும் திராவிட நாடு என்னும் திராவிட கூட்டாட்சி என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள்.

நிற்க. நண்பர் KAP அவர்கள் இந்தப்படியே விஷயங்களை யோசிப்பதைவிட இன்றும், இனியும் செய்ய வேண்டியதை யோசிக்க வேண்டும்,” கி.ஆ.பெ.வி. கொள்கை முரண்பாடு இல்லாதவராக இருந்திருப்பின், அண்ணா மேற்படி கடிதத்தில் தெரிவித்திருக்கும் “திராவிட நாடு” கோரிக்கையை ஏற்றுக் கொண்டு திராவிடர் கழகத்திலே இருந்திருக்க முடியும். தான் ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாக நின்ற காரணத்தால்தான் “தமிழர் கழகம்” எனும் அமைப்பை தோற்றுவித்தார். தமிழர்களிடம் கொள்கை முழக்கம் பரப்பிட அதன் துணையாக ” தமிழர் நாடு” இதழைத் தொடங்கினார்.

திராவிடர் கழகத்திலிருந்து ஏன் விலகினீர்கள்? என்ற கேள்விக்கு அவ்வேட்டில் தெளிவாகவே கி.ஆ.பெ.வி. பதிலுரைத்தார்.

“நான் திராவிடர் கழகத்தில் இருக்கவுமில்லை. விலகவுமில்லை. அவர்கள் தான் ‘தமிழ் வாழ்க’ என்பதிலிருந்து ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதிலிருந்து ‘தமிழ்க்கொடி’ தூக்குவதிலிருந்து விலகிப்போனவர்கள்.” என்று விடையிறுத்தார்.

கி.ஆ.பெ.வி. தமிழர் கழகம் பெயரிலும், ம.பொ.சி. தமிழரசு கழகம் என்ற பெயரிலும் இயக்கம் தோற்றுவித்து செயல்பட்டு வந்ததை பெரியார் எதிர்த்தார். சென்னை கோகலே மண்டபத்தில் திரு.சி.டி.டி. அரசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், “தமிழர் என்பதும் தமிழர் கழகம் என்பதும் தமிழரசுக் கட்சி என்பதும் தமிழர் ராஜ்ஜியம் என்பதும் தமிழ் நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள்” என்று பெரியார் பேசியதோடு நிறுத்திக் கொள்ளாது பிற இடங்களில் தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்றும் கடுஞ்சொற்களை பயன்படுத்தி எழுதியும் பேசியும் வந்தார்.

அதற்கு பதிலுரையாக பின் வருமாறு தனது ஏட்டிலே கி.ஆ.பெ.வி. எழுதினார்.

“இதனால் தமிழ், தமிழர், தமிழரசு, தமிழ் நாடு, என்று கூறக்கூடாதென்றும், திராவிடம், திராவிட நாடு, திராவிடர் கழகம், திராவிட அரசு என்றே கூறவேண்டுமென்றும், அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது தமிழ் நாட்டுப் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள்கையாக இருந்து வருகிறது. காரணம் ஆந்திரா, மலையாள, கன்னடிய மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும் திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியையும், நாட்டையுமே கூறி வரும் போது தமிழ் நாட்டு மக்கள் மட்டும் தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக் கூடாது? இதற்கு மாறுபட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்க வில்லை.

அவ்விதமாய் இருந்தாலும் கருத்தும், கொள்கையும் உடையவர்களை பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்று கூற வேண்டியது அவசியம் தானா என்பதையும் பெரியாரே எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு கழகத்தின் தலைவர் வாயிலிருந்து கடுஞ்சொற்கள் வருவது நேர்மையானது தானா என்பதை பொது மக்களே கருதிப் பார்க்க வேண்டும்.”

மேலும், பெரியார் ஆந்திரா, கேரளா, கன்னடிய நாடுகளுக்குச் சென்று ஆந்திரர் என்றும், கேரளர் என்றும், கன்னடியர் என்றும், தம்மைச் சொல்லிக் கொள்பவர்களிடம் போய் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள் என்றும் கூறத் தயாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.

1949இல் பெரியாரை விட்டு, அண்ணாதுரையும் விலகி திராவிட முன்னேற்றக் கழகம் அமைப்பைத் தோற்றுவித்து நடத்தி வந்தார். கி.ஆ.பெ.வி.யிடம் அணணாவின் தி.மு.கழகம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. கி.ஆ.பெ.வி. சொன்ன பதில் இது தான்: “கழகத்தை நடத்துவோர் வெற்றிப் பாதையில் விரைந்து செல்ல விரும்பினால், ‘திராவிட’ என்ற சொல் மாறி ‘தமிழர்’ என்ற சொல் அமைந்து ‘தமிழர் முன்னேற்றக் கழகம்’ என அது திகழ வேண்டும்” என்றார்.

பெரியாருக்கும் கி.ஆ.பெ.விக்கும் நடந்தது கொள்கை முரண்பாடு தானே தவிர, தனிநபர் முரண்பாடு அல்ல. பெரியாரிடம் தனிப்பட்ட முரண்பாடு கொண்டிருந்தால் கி.ஆ.பெ.வி. அண்ணாவோடு தி.மு.க.வில் இணைந்து பணியாற்றியிருக்க முடியும்.

ஆனால் அவ்வாறு செய்யாமல் அண்ணாவின் திராவிடத்தையும் எதிர்த்து நின்று அவர் தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதி குலையாமல் இருந்துள்ளார். இதன் மூலம் பெரியாருக்கும் கி.ஆ.பெ.வி.க்கும் நிகழ்ந்தது கொள்கை முரண்பாடு தான் என்பதை அண்ணாவின் இரு கடிதங்களும், அண்ணாவின் இயக்கம் குறித்து கி.ஆ.பெ.வி.யின் பதிலும் இதனை திட்டவட்டமாக உறுதிப்படுத்துகிறது.

குறிப்பு : KAP என்பது ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களை குறிக்கிறது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: