நாகரிக நகரம் கண்டுபிடிப்பு – கீழடி!

நாகரிக நகரம் கண்டுபிடிப்பு!

நாகரிக நகரம் கண்டுபிடிப்பு!

மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆய்வு நடத்த திட்டமிட்ட அதிகாரிகள், அது தொடர்பான பணிகளில் உடனடியாக தீவிரமாக இறங்கினார்கள். அங்குள்ள பல விவசாயிகளையும் சந்தித்துப் பேசி, அந்த இடத்தில் ஆய்வு நடத்துவது தொடர்பாக அவர்களுடன் ஒப்பந்தம் போட்டு பணியைத் தொடங்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி அங்கே ஆய்வுப்பணிகள் தொடங்கின. இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் அதிகாரிகள் மட்டத்தில் தொல்பொருள் ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணன், துணைக்கண்காணிப்பாளர்கள் எம். ராஜேஷ், என்.வீரராகவன் ஆகியோர் மட்டுமே அதிகாரிகள் ஆவார்கள். இந்த அதிகாரிகள் அங்கேயே தங்கி, இடைவிடாமல் ஆய்வை மேற்கொள்வதற்கு வசதியாக அங்கே இரண்டு குடில்கள் அமைக்கப்பட்டன.

ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய இடம், ஊருக்குள் இருந்து வெகு தொலைவில், தென்னந்தோப்புக்குள் இருக்கிறது என்பதால், அதிகாரிகளும் அங்கு பணிபுரியும் மற்றவர்களும் அடிக்கடி வெளியே சென்றுவர முடியாது என்பதால், ஆய்வில் ஈடுபடும் அனைவருக்கும் அங்கேயே சமையல் செய்து உணவு வழங்குவதற்கும் ஒரு குடில் தனியாக அமைக்கப்பட்டது.

சென்னை பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களும், கிருஷ்ணகிரியில் உள்ள அரசினர் கலைக்கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவர்களும் இந்த ஆய்வில் ஈடுபட முன்வந்தார்கள்.

இந்த ஆய்வின்போது பெரிய இயந்திரங்களைப் பயன்படுத்தாமல், கைகளைக் கொண்டே மண்ணை சிறிது சிறிதாக தோண்டிப் பார்க்கத் தீர்மானிக்கப்பட்டது. இந்தப் பணிக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களையே கூலி ஆட்களாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

அவர்கள், தொல்பொருள் ஆய்வில் தேர்ந்தவர்கள் அல்ல என்ற போதிலும், தங்கள் பகுதியில் பழங்கால தமிழர்களின் நாகரிக நகரம் புதைந்து கிடக்கிறது; அதை நாமும் பார்க்கலாம் என்ற ஆர்வத்துடன், அதே சமயம் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில் மிக்க கவனத்துடன் மண்ணைத் தோண்டும் பணியில் ஈடுபட்டார்கள்.

2015-ம் ஆண்டு மார்ச் மாதம் பணியைத் தொடங்கிய போது முதலில் 42 குழிகளைத் தோண்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு முதலில் தோண்டிய சில குழிகளில் பெரிய அளவில் பழங்கால நாகரிகச் சின்னங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனாலும் அதிகாரிகள் மனம் தளரவில்லை.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்விடங்கள்;

அடுத்தடுத்து மேலும் பல குழிகளைத் தோண்டியபோது அங்கே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்விடங்கள் புதைந்து கிடப்பது ஒவ்வொன்றாகத் தெரிய வந்தது. தொல்பொருள் ஆய்வு அதிகாரிகள் தேடி வந்த வரலாற்றுப் புதையல் அங்கே இறுதியாக கிடைத்தே விட்டது.

கடந்த 150 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இதேபோல தொல்பொருள் ஆய்வுகள் நடத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால் அந்த இடங்கள் எல்லாம், பழங்கால தமிழர்களின் மயான பூமிகளாகவே இருந்தன.

இறந்தவர்களை புதைத்த முதுமக்கள் தாழிகள், அவர்கள் பயன்படுத்திய சில கருவிகள், மண்பாண்டங்கள் ஆகியவை மட்டுமே அந்த இடங்களில் நடைபெற்ற ஆய்வுகளில் கிடைத்து இருந்தன.

சிந்து சமவெளியான மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆய்வுகளில், அங்கே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மனிதர்களின் வாழ்விடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

நாகரிகத்துடன் வாழ்ந்த அந்த மக்கள் குடியிருந்த வீடுகள், அவர்கள் பயன்படுத்திய கழிவு நீர் போக்கிகள், தெருக்கள் போன்றவற்றின் எச்சங்கள் அந்த ஆய்வில் தோண்டி எடுக்கப்பட்டன. அந்த உறுதியான ஆதாரங்கள் காரணமாகவே சிந்துசமவெளி நாகரிகம் உலக அளவில் பெருமையுடன் பேசப்படுகிறது.

ஆனால், தமிழர்கள் சிந்து சமவெளி நாகரிக காலத்துக்கும் முந்தியவர்கள் – சிந்து சமவெளி நாகரிகத்துக்கே வழிகாட்டியாக இருந்தவர்கள் என்ற போதிலும், அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழர்கள் வாழ்ந்த பழங்கால இடங்களின் கட்டிடங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், தமிழர்களின் நாகரிக வரலாற்றுக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்காமலேயே இருந்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


அந்தப் பெரும் குறை, கீழடியில் நடைபெற்ற ஆய்வுகள் மூலம் தீர்ந்துவிட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நாகரிக வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்பதற்கான அசைக்க முடியாத ஆதாரங்களாக, அந்தக்கால தமிழர்கள் வாழ்ந்த இடங்களின் எச்சங்கள் முதல் முறையாகக் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டன.

கீழடியில் தோண்டிய இடங்களில் எல்லாம் பழங்கால தமிழர்களின் நாகரிக வரலாற்றுச் சின்னங்கள் ஏராளமாகக் கிடைத்ததால், அங்கே இரண்டு கட்டங்களாக ஆய்வுகள் நீடித்தன.

முதல் ஆய்வு 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையும், இரண்டாவது கட்ட ஆய்வு, 2016-ம் ஆண்டு ஜனவரி 18-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் இறுதி வரையும் நடைபெற்றது.

இரண்டு ஆய்வுகளிலும் சேர்த்து மொத்தம் சுமார் 100 குழிகள் அங்கே தோண்டப்பட்டன.

பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் அந்தக்குழிகளில் இருந்து கிடைத்தன என்றபோதிலும், அந்த ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிக முக்கியமானவை அங்கே இருந்த கட்டிட அமைப்புகள் தான். அந்த கட்டிட அமைப்புகள், அங்கே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாகரிகம் மிக்க மக்களைக் கொண்ட ஒரு நகரம் இயங்கி வந்தது என்பதை உறுதிப்படுத்தின.

சுடு மண்ணால் செய்யப்பட்ட செங்கல்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள், அந்த கட்டிடங்களின் மேலே அமைக்கப்பட்ட செங்கல்களால் ஆன கூரைகள், வழுவழுப்பான செங்கல் ஓடுகளால் ஆன தரை தளங்கள், கழிவு நீர் செல்வதற்கான வடிகால்கள், தண்ணீரை சேமித்து வைப்பதற்கான அமைப்புகள், ஏதோ பரபரப்பான தொழில் நடைபெற்றது என்பதற்கு ஆதாரமான உலைகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட உறைகளைக் கொண்ட கிணறுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டதே இந்த ஆய்வின் மிகப் பெரிய சாதனையாகப் போற்றப்படுகிறது.

இவை அனைத்துமே ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தியவை ஆகும்.

அவற்றின் சரியான காலம் என்ன என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக சோதித்துப் பார்த்து முடிவு செய்யப்படவில்லை என்றாலும், அங்கு கிடைத்த எழுத்துக்கள் அடங்கிய மண்பாண்டங்களைக் கொண்டு பார்க்கும்போது, அவை சங்ககாலம் அல்லது சங்க காலத்துக்கு சற்று முந்திய காலத்தைச் சேர்ந்தவை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

சங்ககாலம் ;

சங்ககாலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் பெருமைகள் பல்வேறு இலக்கியங்களில் இடம்பெற்று இருக்கின்றன. ஆனால், அவற்றுக்கெல்லாம் கண்கூடான ஆதாரம் இதுவரை கிடைக்காமலே இருந்தது.

சங்ககால இலக்கியங்களில் கூறப்பட்டு இருக்கும் நாகரிக வாழ்வுக்கு உண்மையிலேயே சொந்தக்காரர்கள் தமிழர்கள் என்பதற்கான உறுதியான ஆதாரத்தைக் கீழடி ஆய்வு தான் முதல் முறையாகத் தந்து இருக்கிறது. சங்ககாலத்தின்போது தமிழர்கள் கட்டிடங்களை கட்டி வாழத்தெரியாதவர்களாக இருந்தார்கள் என்ற கூற்றை, கீழடி ஆதாரங்கள் நொறுக்கித் தள்ளியுள்ளன.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள், நேர்த்தியான செங்கல்களைப் பயன்படுத்தி, உறுதியான வாழ்விடங்களை அமைத்து இருந்தார்கள் என்பதோடு, நாகரிக வாழ்வுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து செல்வச்செழிப்புடன் வாழ்ந்தார்கள் என்பதும், அவர்கள் வெளிநாட்டினருடன் வாணிபத்தில் ஈடுபட்டார்கள் என்பதும் இப்போது கீழடியில் கிடைத்து இருக்கும் ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் ஒரு முக்கியமான அம்சத்தையும் கீழடி காட்டிக்கொடுத்து இருப்பதாக நம்பப்படுகிறது. இப்போது பெருநகரமாக விளங்கும் மதுரை, சமீப காலத்தில் உருவாக்கப்பட்டது தான்.

ஆதி காலத்தில், ‘மதுரை’ என்ற நகர் பல காலகட்டங் களில் பல இடங்களில் இருந்ததாக 13-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டு இருக்கிறது. எனவே, சங்ககால இலக்கியங்களில் கூறப்பட்டு இருக்கும் பழங்கால மதுரை எங்கே இருந்தது என்ற ஒரு வினா நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வந்தது. சங்ககால இலக்கியங்களான பரிபாடல், மதுரைக் காஞ்சி, நெடுநெல்வாடை போன்றவற்றில் அந்தக்கால மதுரை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

அந்தக் குறிப்புகள் தற்போது கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட சிலவற்றுடன் ஒத்துப்போவதாகவும், எனவே இந்தப் பகுதியே பழங்கால மதுரை இருந்த இடமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பழங்கால இலக்கியங்களில் மதுரையை பற்றி சொல்லும்போது ‘மணலூர்’ என்ற பெயரும் இடம் பெறுகிறது. தற்போது கீழடியில் ஆய்வு நடைபெற்ற இடமான பள்ளிச் சந்தைத் திடல் என்பது மணலூர் கண்மாயின் மேற்குப் பகுதியில் இருக்கிறது.

மேலும் அங்குள்ள பழங்கால கிராமங்களான கொந்தகை, கீழடி, மணலூர் ஆகிய மூன்று கிராமங்களையும் ஒரு வட்டமாகக் கருதினால், அந்த வட்டத்திற்கு நடுவே தான் பள்ளிச் சந்தைத் திடல் இருக்கிறது. இதன் காரணமாகவும், இப்போது ஆய்வு நடந்த இடம், பழங்கால மதுரையாக இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்தக் கருத்துக்கள் எல்லாம் இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: