தீரன் சின்னமலை | Deeran Sinnamalai | லண்டன் ஆதவன் TV – Video

தீரன் சின்னமலை | Deeran Sinnamalai | லண்டன் ஆதவன் TV

தீரன் சின்னமலை | Deeran Sinnamalai | லண்டன் ஆதவன் TV

குட்டக் குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக, அவமானத்துடன் வாழ்ந்த தமிழரைத் தலை நிமிர்த்தி தன்மானத்துடன் வாழ வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும் – தேசியத் தமிழர்களின் தலைவன் பிரபாகரனின் சிந்தனைகளில் உதித்த வரிகள் இவை.

தமிழகத்தில் 18ம் நூற்றாண்டின்போதே ஆங்கிலேயனுக்கு எதிரான அடிமை சங்கலியை உடைத்தெறிய பல்வேறு தமிழ் தலைவர்கள் ஆயுதமேந்தி போராடிய வரலாறு இங்குள்ளது. அவர்கள் எம்முன்னே இன்று மாவீரர்களாக வீர வணக்கத்துடன் போற்றப்பட்டு வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர்கள்…

– ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக வீர முழக்கமிட்ட பூலித்தேவன்
– ஆங்கிலேய படையை எதிர்த்த முதல் இந்திய பெண் வீரமங்கை வேலு நாச்சியார் – அவரது படையில் உலகின் முதல் பெண் தற்கொடை போராளி, குயிலி.
– மருது பாண்டியர்கள் என அழைக்கப்பட்ட மருது சகோதரர்கள் – சின்ன மருது, பெரிய மருது.

மேலே குறிப்பிட்ட அனைவரும் குறுநில மன்னர்களாக ஆட்சி அதிகாரத்தோடு இருந்து வந்தனர். இவர்கள் தங்களது படைபலத்தைக் கொண்டு வெள்ளையனை எதிர்த்து போராடினர்.

இவர்களிலே முற்றிலும் மாறுபட்ட எவ்வித ஆட்சி அதிகார இன்றி, மக்களோடு போராட்டத்தை களம் அமைத்த தமிழர்கள், வரலாற்றி இருவர்.

– ஒருவர் 21ம் நூற்றாண்டின் தமிழர்களின் தலைமகன் எங்கள் அண்ணன் தேசியத் தமிழர் தலைவர் பிரபாகரன்.
– மற்றொருவர் 18ம் நூற்றாண்டின் வாழ்ந்த வேளாள இனத்தின் மண்ணின் மைந்தன் தீரன் சின்னமலை.

தீரன் சின்னமலை – தமிழகத்தில் இன்றைய ஈரோடு மாவட்டம் – காங்கேயம் வட்டம் – சென்னிமலை-க்கு அன்மையில் உள்ள மேலப்பாளையத்தில் இரத்தினசாமி கவுண்டருக்கும் – பெரியாத்தாள் அம்மாவும் ஏப்ரல் 17, 1756-ல்
பிறந்தார்.

இவருடன் பிறந்தவர்கள் நால்வர்.

அண்ணன் – குழந்தை சாமி

தம்பிமார்கள் – பெரியதம்பி கிலேதார் – குட்டிசாமி

தங்கை – பர்வதம்.

தீரன் சின்னமலை – யின் இயற்பெயர் தீர்த்தகிரி

இவர்களது குடும்பம் பழைய கோட்டை சர்க்கரை, மன்றாடியார், பட்டக்காரர் என்ற சிறப்புப் பட்டங்களை பெற்றவர்கள்.

தீர்த்தகிரி இளைஞராக இருந்த போதே மல்யுத்தம், வில் பயிற்சி, வால் பயிற்சி, சிலம்பாட்டம், தடி வரிசை, குதிரையேற்றம் போன்ற போர் பயிற்சிகளில் சிறந்து விளங்கினார்.

ஒரு முறை பிறந்த மண்ணில் தன் வயதையொத்த இளைஞர்களோடு சுற்றிக் கொண்டிருந்த போது, அவ்வழியாக மைசூரை ஆண்டு வந்த மன்னர் ஹைதர் அலியின் ஆட்கள் வண்டிகளில் பொருட்களோடு இவர்களை கடந்து சென்றனர். அதை பார்த்த தீர்த்தகிரி – யின் இளைஞர் பட்டாளம் மன்னரின் ஆட்களை தடுத்து நிறுத்தி, வெளியாட்களாக இருக்கிறீர்கள். எங்கு வந்து பொருட்களுடன் செல்கிறீகள் என வினவினர். அதற்கு தாங்கள் மன்னர் ஹைதர் அலியின் ஆட்கள் எனவும், தங்கள் ஆட்சிக்கு கீழ் உள்ள கொங்கு நாட்டு மக்களிடம் வரி வசூல் செய்து, அதை மன்னரிடம் ஒப்படைக்க போவதாகவும் சொல்ல, சினம் கொண்ட தீர்த்தகிரி – எங்கோ இருந்து வந்து, எங்கள் மக்களிடம் வரி வசூல் செய்ய நீங்கள் யார்? என கேள்வி கேட்டு வசூலான வரியை தங்களிடம் கொடுக்க வேண்டும். அதை மக்களிடமே சேர்க்கிறோம் என சொல்லி, இதை மீறினால், தாங்கள் தாக்க வேண்டி வரும் என எச்சரித்தனர். தீர்த்தகிரி – யின் இளைஞர் பட்டாளத்தை பார்த்து பயந்துபோன மன்னர் ஹைதர் அலியின் ஆட்கள், நீங்கள் எல்லாம் யார் என சொன்னால்தான் மன்னன் தங்களை தண்டனை கொடுக்காமல் விட்டு விடுவார் என்றதும் –

தீர்த்தகிரி, இரு கைகளையும் நீட்டி – இந்தப்பக்கம் சென்னிமலை, அந்தப்பக்கம் சிவன் மலை. தான் இடையே ஒரு சின்னமலை என போய் சொல்லுங்கள் என பதிலுரைத்தார்.

உங்களும் மன்னருக்குமான பிரச்சனையை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என கூறிய சென்ற மன்னர் ஹைதர் அலியின் ஆட்கள், வசூலான வரியை தீர்த்தகிரி – யின் இளைஞர் பட்டாளத்திடம் கொடுத்து விட்டு ஒடினர்.

கைப்பற்றிய வரிகளை தீர்த்தகிரி, மக்களிடமே திரும்ப ஒப்படைந்தார். மக்களும் இவரை அன்று முதல் சின்னமலை என வீர முழக்கமிட்டனர்.

மைசூர் சென்ற மன்னர் ஹைதர் அலியின் ஆட்கள், அரண்மனையில் மைய மண்டபத்தில் இச்செய்தியை தெரிவித்தனர். அப்பொழுது, அரண்மனை மைய மண்டபத்தில் அமர்ந்திருந்த மன்னர் ஹைதர் அலியின் மகன் திப்பு, இதை கேட்டு வியந்து ஆச்சரியப்பட்டார்.

ஹைதர் அலி பிரெஞ்சுகாரர்களுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டதால், ஆங்கிலேயருடன் சுமுக உறவுக்கு இடங்கொடுக்கவில்லை. தனது இறுதிக்காலம் வரை போரிட்டு முரண்பாடுகளோடே இறுதியில் மாண்டும் போனார்.

ஹைதர் அலி-க்கு பின் அவரது மகன் திப்பு சுல்தான் மன்னராக பதவியேற்று கொண்டது முதலே, ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவது என்ற கொள்கையை கடைபிடித்திருந்தார்.

உடன்பாடுள்ள சக மன்னர்களோடு கைகோத்த திப்பு சுல்தான், வீரன் சின்னமலையையும் ஒரு தளபதியாக ஏற்றுக் கொண்டு போரில் தங்களுடன் இருக்குமாறு கேட்டு கொண்டார். தளபதியான சின்னமலை தன்னிடம் போர் பயிற்சி பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொங்கு இளைஞர் படையோடு திப்புவுக்கு உதவியாக போர்களத்தில் உறுதுணையாக நின்று போர் புரிந்துள்ளார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.

போரில் உதவ பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் திப்பு பேச்சுவார்த்தை கூட நடத்தினார். இப்பேச்சு வார்த்தையில், ஒரு முறை சிவகங்கை சீமையின் தளபதியும் சின்னமலையின் மெய்க்காப்பாளரான, அகமுடையர் கருப்பு சேர்வையும் பங்கெடுத்துக் கொண்டது இங்கு குறிப்பிட்டாக வேண்டும். மாவீரன் நெப்போலியன், திப்பு-விற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதை, திரு. ராசு அவர்கள் பதிப்பித்துள்ளதை பார்க்க முடிகிறது. சின்னமலை-க்கு பிரெஞ்சுக்காரர்களின் தொடர்பால், கொங்கு நாட்டின் பகுதியான ஓடாநிலையில், அவர்களின் துணையோடு பீரங்கிகளும், ஆயுதங்களும் ஆங்கிலேயனை திப்பு – வோடு சேர்ந்து எதிர்ப்பதற்காக தயாரிக்கப்பட்டன என்பது கூடுதல் செய்தி. இந்நிலையில், திப்பு – விற்கு போர்க்களத்தில் உதவு போவதாக உறுதியளித்த, மாவீரன் நெப்போலியன், எகிப்தில் தோற்று போனதால், திப்பு கைவிடப்பட்டார். இதனால், திப்பு மே 4, 1799-ல் தூரோகத்தால் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் சுட்டு விழ்த்தப்பட்டார்.

கொங்கு நாடு திரும்பிய சின்னமலை, அரச்சலூர் அருகே ஓடாநிலையில் கோட்டை ஒன்றை கட்டி அன்மித்துள்ள ஊர்களை இணைத்துக் கொண்டு பாளையக்காரராக ஆட்சி புரிந்தார். ஆங்கிலேயர்களை எதிர்க்க அருகில் உள்ள பிற பாளையக்காரர்களை ஒருங்கிணைத்துக் கொண்டார்.

சேலம் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஆங்கிலேயர்கள், தங்களுக்கு சொந்தமான கேரள பகுதிகளுக்கு செல்ல வேண்டுமாயின், சின்னமலையின் ஆட்சிகுட்பட்ட கொங்கு பகுதி வழியேதான் செல்ல வேண்டியிருந்தது. சின்னமலையின் பகுதிகளில் ஆங்கிலேயர்கள் செல்ல அனுமதிக்காது, அவ்வப்போது இடையூரு செய்து வந்தது சின்னமலையின் படை. இதனால் கோபமமுற்ற ஆங்கிலேயர்கள் 1801-ம் ஆண்டு கர்னல் மேக்ஸ் வெல், 10,000 பேரை கொண்ட படையை தலைமையேற்று ஈரோடு காவிரிக்கரையோரம் சின்னமலையோடு போர் புரிய வந்தபோது, ஓட, ஓட சின்னமலையின் படையினால் துரத்தியடிக்கப்பட்டனர்.

மீண்டும், 1802-ம் ஆண்டு அதே கர்னல் மேக்ஸ் வெல் தலைமையில் மேலும் அதிக படை பலத்தோடு கூடிய இராணுவம் ஓடாநிலைக்கு முன்னேற எத்தனித்தனர். இப்போரில், சின்னமலை கர்னல் மேக்ஸ் வெல்-லை நேரிடையாக போர்களத்தில் எதிர்கொண்டு, மேக்ஸ் வெல்-லின் தலையை தனது கூரிய வாளால் ஒரே சீவாக சீவி, தலை தனியே – முண்டம் தனியே விழச் செய்ததைப் பார்த்த ஆங்கிலேய படைகள், பின் வாங்கி தலை தெறிக்க வந்த வழியைப் பார்த்து ஓடியது. கர்னல் மேக்ஸ் வெல்-லின் தலையில்ல உடலை அவனது குதிரையிலேயே கட்டி திருப்பியும் அனுப்பினார் சின்னமலை. கர்னல் மேக்ஸ் வெல்-லின் தலையில் கரும் புள்ளி – செம் புள்ளி குத்தி கொங்கு நாடு முழுக்க ஊர்வலமாக எடுத்துச் சென்று தனது வீரத்தை நிறுவினார்.

ஆத்திரம் கொண்ட ஆங்கிலேய படை, திரும்பவும் 1804-ல் கர்னல் ஹாரிஸ் தலைமையில் 36 பிரங்கிகளை 72 எருதுகள் பூட்டி இழுத்து வர ஓடாநிலையை நோக்கி முன்னேறினார். ஓடாநிலை கோட்டையின் ஒரு கல் கூட மிஞ்சாத வகையில் தூள், தூளாக்கப்பட்டது. கோட்டைக்கு உள் சென்று பார்த்த போது சின்னமலை அன்றாடம் பயன்படுத்தும் செருப்புகள் மட்டுமே மிஞ்சியிருந்தது. சின்னமலையும் அவரது படைகளும் ஏற்கெனவே அங்கிருந்து மறைந்து விட்டிருந்தனர். மீதியிருந்த சின்னமலையின் செருப்புகளும் வித்யாசமாக தென்படவே, ஆராய்ந்தார் கர்னல் ஹாரிஸ். அப்பொழுது அதில் இரகசிய அறை போன்று வைக்கப்பட்டது கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியடைந்தார். அந்த செருப்பு குவியலில் இருந்த ஒரு செருப்பில், கர்னல் ஹாரிஸ் தலைமையில் 36 பிரங்கிகள் வருவதைப் பற்றிய குறிப்படங்கிய செய்தி ஒரு தாளில் மறைக்கப்பட்டிருப்பது தெரிந்து, செருப்பை யார் தைத்தது எனவும், அவரை இழுத்துவரவும் கட்டளையிட்டார் கர்னல் ஹாரிஸ்.

பொல்லான் என்ற செருப்பு தைக்கும் தொழிலாளி இழுத்து வரப்பட்டார். ஆனால், அவரிடமிருந்து ஒரு செய்தியைக்கூட பெற கர்னல் ஹாரிஸ்-சால் இயலவில்லை. பிறகு துண்டு சீட்டின் கையெழுத்து யாருடையது என ஆராய்ந்த ஹாரிஸ்-சால் நம்ப முடியவில்லை. அது அவரது அந்தரங்க ஆங்கிலேய படையின் பொறுப்பாளராக இருந்த சுபேதார் வேலப்பனுடையது என தெரிந்ததும், சின்னமலைக்கு ஒற்றர் வேலை பார்த்த வேலப்பனை இழுத்து வந்து கண்டம், துண்டமாக வெட்டி சாய்த்து தனது கோபத்தை தனித்துக் கொண்டார். அதற்கு மேல் அவரால் சின்னமலையையோ அவரது ஆட்களிடமோ நெருங்கக் கூட முடியவில்லை.

தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்ட பாளையக்காரர்கள் சிலரும் ஆங்கிலேயர்களை எதிர்த்த நிலையில் அவர்களை நம்பிய சின்னமலை, பழனி மலையை அடுத்துள்ள பாளையாக்காரர்களுக்குட்பட்ட அடர்ந்த காட்டுப் பகுதியான கருமலை-க்கு தப்பி சென்று தலை மறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்தவருக்கு, பாளையக்காரர்கள் உதவியும் செய்வார்கள் என நம்பினார்.

போரில் சின்னமலையை வெல்ல முடியாது என கணித்த ஆங்கிலேயர்கள், சூழ்ச்சி வலையில் விழ வைக்க எண்ணினர். பாளையக்காரர்களின் நம்பிக்கைகுரிய நல்லான் என்ற சமையல்காரர், ‘சாப்பிடும் போது கூட, எப்பப்பார்த்தாலும் எதற்கு ஆயுதங்களை வைத்துள்ளீர்கள் என கேட்டு, அவ்வாயுதங்களை வெளியில் வைத்து விட்டு வரும்படி சின்னமலையை கேட்டுள்ளார். நல்லானின் சொல் நம்பிய சின்னமலையும், அவரது தம்பிகளும் தங்களது ஆயுதங்களை வெளியே வைத்து விட்டு குகைக்குள்ளே சாப்பிட அமர்ந்த வேளையில், சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஆங்கிலேய மூன்றாம் படை இவர்களை சுற்றி வளைத்து கைது செய்து சிறைப்படுத்தியது.

பொல்லான் என்ற பெயரையுடைய செருப்புத் தைக்கும் தொழிலாளி நேர்மையாக இருந்தான். ஆனால், நல்லான் என்ற பெயரைக் கொண்டவன் துரோகத்தால் காட்டிக் கொடுத்தான்.

சிறைப்பட்ட சின்னமலையும் அவரது இரு தம்பிகளையும் மிகுந்த பாதுகாப்பிற்கிடையே, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று பொய்யான விசாரணை ஒன்றை நடத்தி ஜூலை 31, 1805-ஆம் ஆண்டு கோட்டைக்கு வெளியே இருந்த பொதுவெளியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் போட ஏற்றினர். இதைக் கேள்வியுற்ற சின்னமலையின் மெய்க்காப்பாளரான, கருப்பு சேர்வை தானே முன்வந்து, தன்னையும் அவர்களோடு சேர்த்து தூக்கிலிட வேண்டும் என்றார்.

ஆங்கிலேயன் கையால் தனக்கு தூக்கு கயிறு கூட மாட்ட விரும்பாத சின்னமலை, தானே தன் கழுத்தில் கயிறை மாட்டிக் கொண்டு மரக்கிளையிலிருந்து குதித்து மாண்டு போனார்.

கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே – சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

என்ற ஒளவைப்பாட்டியின் பாடலுக்கேட்ப தங்களை மேன்மக்களாகவே காட்டிய தீரன் சின்னமலை இறந்து போனார்.

இறந்த பின்பு இவர்களின் வரலாறு எவ்வகையிலும் வெளி வர கூடாது என ஆங்கிலேயர்கள் கடுமையாக இருந்தனர். அதனால், இவர்கள் மீது எவரும் பாடல்களையோ வேறு எந்த வகையிலோ செய்தி வெளிவராமல் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு மேல் கவனமாகப் பார்த்துக்கு கொண்டனர். இந்திய சுதந்திரத்திற்கு பின்னரும் லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில், இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் எந்தி போரிட்ட அனைவரது வரலாற்று ஆவணங்களும் வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு இப்பொழுதும் கூட தீரன் சின்னமலை குறித்த எந்தவொரு செய்தியும் காணப்படவில்லை. மறைக்கப்பட்டிருக்கிறது. இது எதனால் என நாம் சிந்திக்க வேண்டும்?

சுதந்திர இந்தியாவில், தீரன் சின்னமலை நினைவாக திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு போக்குவரத்துக் கழகமும், கரூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னை கிண்டியில் உருவச்சிலை ஒன்றை அமைத்துள்ளது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலைக் கோட்டையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு வேளாள மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர். இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு தமிழக அரசால், இவர் தூக்கிலிடப்பட்ட ஊரான சங்ககிரியில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது. அவ்வாறே கட்டி முடிக்கப்பட்ட மண்டபம் டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டது. அதே நாளில், கிண்டியிலுள்ள இவரது உருவச்சிலையும் புதுப்பிக்கப்பட்டு, இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் அன்று வெளியிடப்பட்டது.

தொகுப்பு – அக்னி, உலகத் தமிழர் பேரவை

Related Video Link : Athavan TV

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: