தூத்துக்குடி மாவட்டம் சங்கம்பட்டி கிராமத்தில் தொல்லியல் ஆய்வில் பிற்கால சோழர் கால நடுகல் மற்றும் சதிகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகில் உள்ளது சங்கம்பட்டி கிராமம். பிற்கால சோழர் கால நடுகல் மற்றும் சதிகல், பேராசிரியை மற்றும் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பிரியா கிருஷ்ணன், தொல்லியல் ஆர்வலர் வினோத் ஆகியோரது ஆய்வால் கண்டறியப்பட்டது.
தென்னகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் பிரியா கிருஷ்ணனிடம் இந்த ஆய்வு குறித்து கூறுகையில், “சதிகல் என்பது போரில் கணவர் வீரமரணம் எய்தியதும் மனைவி தீப்பாய்ந்து உடன் கட்டை ஏறுவது ஆகும். உடன் கட்டை ஏறுதல் என்பது அந்தக் காலத்தில் விரும்பியும், விரும்பாலும் நடைமுறையில் இருந்து வந்த ஒரு பழக்கமாகும். அடுத்ததாக போருக்குச் சென்று அல்லது ஊருக்காக வீர மரணம் அடைந்த வீரனுக்காக நடுகல் எடுத்து வழிபடுவது பண்டைய காலம் முதலில் இருந்து வந்த பழக்கமாகும்.
இந்த இரண்டு வகையான நடுகற்களும் இக்கிராமத்தில் அருகருகே உள்ளது. இன்றளவும் வழிபாட்டில் உள்ளது. நுணுக்கமான வேலைப் பாடுகளுடன் காணப்படுகிறது. சதிகல்லில் உள்ள வீரன் மிக அழகான அணிகலன்கள் அணிந்து இடையில் நீண்ட ஆடை அணிந்து கையில் வில் ஏந்தி நிற்கிறார். இவர் உயர்ந்த பதவியில் இருந்தவராகவோ அல்லது சிற்றரசராகவோ இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. அவர் அருகில் அவரது மனைவியார் காதணி அணிந்து கழுத்தணி அணிந்து வலக் கையில் அல்லி மலர் வைத்திருக்கிறாள்.
இருவரின் நடுவில் ஒரு ஆண் உருவமும், அதன் கீழே அதே போன்று வீரனும் அவனது மனைவியும் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலத்தில் ஊன்றி வைத்துள்ளதால் பார்க்க இயலவில்லை. மேலே சில மனித உருவங்களும் காணப்படுகின்றன. அடுத்த நடுகல்லில் இரண்டு வீரர்கள் எதிரெதிர் மோதிகொள்ளும் அழகான காட்சி. வில்லும் வாளும் கொண்டு போர் செய்யும் அற்புதமான காட்சி.
இவர்களின் உருவத்தை வைத்துப் பார்க்கும் போது சாதரண வீரர்களாக இருந்திருக்க வேண்டும். இவர்களை தேவர் உலகம் அழைத்து செல்லும் விதமாக மேலே தேவ மகளிர் அழைத்து செல்லும் காட்சியோடு அழகாய் அமைந்திருக்கிறது. தமிழகத்தில் கிடைத்த எத்தனையோ நடுகற்களில் இது சற்று நுணுக்கமான மிக அழகிய வேலை பாடுகளுடன் இருக்கிறது. பண்டைய தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் இது போன்ற நடுகற்களை பாதுகாக்க வேண்டும்’ என்று கூறினார்.