சேக்காடு ஏரியை பாதுகாத்த சோழ மன்னன்: கல்வெட்டு தகவல்!

சேக்காடு ஏரியை பாதுகாத்த சோழ மன்னன்: கல்வெட்டுத் தகவல்!

ஆவடி அருகேயுள்ள சேக்காடு ஏரியைக் காக்க, 1,000 ஆண்டுகளுக்கு முன், சோழ மன்னன் எடுத்த நடவடிக்கை குறித்த கல்வெட்டு கிடைத்துள்ளது. இதில், பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் இருப்பதால், கல்வெட்டை முழுமையாக ஆய்வு செய்து, தொல்லியல் துறை, முழு தகவல்களையும், மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

ஆவடி அடுத்த சேக்காடு பெரிய ஏரி, அதையொட்டி சித்தேரி என, இரு ஏரிகள், 294 ஏக்கர் பரப்பில் உள்ளன. இந்த ஏரிகளின் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பிலும், மடைகள் சேதமடைந்தும், ஏரி சுருங்கி, துார்ந்து போயும் காணப்படுகின்றன. கடந்த ஆண்டு, பொதுப்பணித்துறை, 16 லட்சம் ரூபாய் செலவில், இந்த ஏரியை துார் வாரியது.

தற்போது, இந்த ஏரி, போதிய பராமரிப்பின்றி, ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கி அழியும் நிலையில் உள்ளது. ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் ஆட்சியிலும், 72 ஆண்டுகளுக்கு முந்தைய ஆங்கிலேயர் ஆட்சியிலும், இந்த ஏரி, நன்கு பராமரிக்கப்பட்டு, விவசாயம் செழித்ததற்கான ஆதாரங்கள், தற்போது கிடைத்துள்ளன. சேக்காடு பெரிய ஏரியின் கரையில் உள்ள, சேராத்தம்மன் கோவிலுக்கு முன், பழமையான கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு எழுத்துகளைப் படித்தால், ஆயுள் குறையும் என்பன போன்ற நம்பிக்கைகளால், கிராம மக்கள், பய பக்தியுடன், குங்குமம், சந்தனம் பூசி, கல்வெட்டை வழிபட்டு வருகின்றனர்.

இக்கல்வெட்டை, தொல்லியல் ஆய்வாளர்கள் படித்த போது, 1,000 ஆண்டுகள் பழமையான சோழர்கள் காலத்து கல்வெட்டு என, தெரிய வந்தது. சோழ பேரரசு, கி.பி.,10ம் நுாற்றாண்டில், தென்னிந்தியா, இலங்கை, மலேஷியாவின் கூடாரம் வரை பரவி இருந்தது. இப்பகுதிகளை, ஒன்பது மண்டலங்களாக பிரித்து, ஆட்சி செய்து வந்த சோழர்கள், த

மிழகத்தின் வட பகுதியை, ‘ஜெயங்கொண்ட தொண்டை மண்டலம்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். தொண்டை மண்டலம், நிர்வாக ரீதியாக, 24 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு, அதில், புலியூர் கோட்டம், புழற்கோட்டம் ஆகியவை, சென்னையை உள்ளடக்கியது என்பதற்கு, ஏற்கனவே கிடைத்த கல்வெட்டுகள் மற்றும் செப்பேடு ஆதாரங்கள் உள்ளன. இதை மெய்ப்பிக்கும் வகையில், ஆவடி, சேக்காட்டில் கிடைத்த கல்வெட்டு, புலியூர் கோட்டத்தைச் சேர்ந்தது என, அந்த கல்வெட்டைப் படித்த, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பிற்கால சோழர் ஆட்சி காலத்தில், சிற்றரசராக விளங்கிய, தெலுங்கு சோழனான, விஜய கண்ட கோபாலனின், 16வது ஆட்சிக் காலத்தில், ஏரிக்கரை நிலத்தையும், ஏரியில் மீன்பிடி உரிமையையும், கோவிலுக்கு தானமாக வழங்கியதை குறிக்கும் கல்வெட்டு தான் இது. ஏரியில் வளரும் மீன்களையும், அதன் வளங்களையும் பயன்படுத்தி,கோவில் திருப்பணி மேற்கொள்ளச் செய்தது, ஏரியை பாதுகாக்க, சோழர்கள் கையாண்ட யுக்தி’ என, தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்தச் சோழர் காலத்திய கல்வெட்டு, சமதளமற்று இருப்பதால், தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை, கல்லின் நான்கு புறமும், தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக தொல்லியல் துறை, கல்வெட்டில் உள்ள எழுத்துகளை படியெடுத்து, அதில் உள்ள செய்திகளை, முழுமையாக வெளியிட வேண்டும் என, தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போல், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், ஏரி பராமரிக்கப்பட்டதற்கான ஆதாரமாக, ஏரியின் மடையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு கிடைத்துள்ளது. அதில், சேக்காடு பெரிய ஏரி மற்றும் சித்தேரியைச் சேர்ந்த, ஒரே மடையில் இருந்து, 325 ஏக்கர் பரப்பில், பாசன நிலங்கள் பயன் பெற்றன என, குறிப்புகள் உள்ளன. நீர்நிலைகளை பாதுகாக்கவும், தமிழர்களின் தொன்மையைக் கண்டறியவும், சேக்காடு பெரிய ஏரி மற்றும் சித்தேரியை பாதுகாக்க, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘சார்னகைட், கோன்டர் லைட்’ என, இருவகையான பாறை கற்கள், தமிழகத்தில் அதிகமாக உள்ளன. அதில், இங்கு உள்ள இந்த கல்வெட்டு, ‘கோன்டர் லைட்’ வகையைச் சேர்ந்தது. இக்கல்லில், ‘கார்னட்’ என்ற மினரல் காணப்படுகிறது. இதை நாம், ‘செமி பிரீஷியஸ் ஸ்டோன்’ என்கிறோம். இந்த வகையான கல், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அதிகமாக கிடைக்கிறது.

ஸ்வஸ்திஸ்ரீ மதுராந்தக சோழனான, விஜயகண்ட கோபாலன்…’ எனக் கல்வெட்டு எழுத்துகள் துவங்குகின்றன. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, புலியூர் கோட்டம் என்றெல்லாம் வருகிறது. ஏரியை பராமரித்து, ‘பாசிப்பாட்டம்’ எனப்படும், மீன்பிடி வருவாய் மற்றும் நிலங்கள், கோவிலுக்கு தேவதானமாக அளிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. ஏறக்குறைய, 1,000 ஆண்டுகளுக்கு முன், ஏரியை பராமரிக்க, சோழ மன்னன் எடுத்த நடவடிக்கை, வியப்பாக உள்ளது. இந்த ஊர் கல்வெட்டில், ‘சேற்காடு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சேறு’ என்பது வளமான இடம் எனப் பொருள். அதாவது, சேறு நிறைந்த விளைநிலமாக, இந்தப் பகுதி இருந்தது என்பதற்கான குறிப்பாக, இதை பார்க்க முடிகிறது.

இது, 12 அல்லது 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஒரு துண்டுக் கல்வெட்டு எனக் கூறலாம். இக்கல்வெட்டு தொடர்பான எந்தக் குறிப்புகளும், இதுவரை தொல்லியல் துறையில் இல்லை. சோழர்கள் ஆட்சியில், புலியூர் கோட்டத்திற்குட்பட்ட பகுதி என, தெளிவாக கல்வெட்டு கூறுகிறது.ஏரியின் மீன்பிடி வருவாய், பாசன நிலங்கள் வருவாய் ஆகியவை அருகில் உள்ள அகஸ்தீஸ்வரமுடையார் கோவிலுக்கு, தேவதானமாக வழங்கப்பட்டது என்பதை, இக்கல்வெட்டு குறிக்கிறது. ஏரிக்குள், பழமையான தாழிகளின் உடைந்த சிறு பகுதிகள், நிறைய கிடைக்கின்றன. இதனால், இப்பகுதியில், பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான, தொன்ம அடையாளங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: