முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு அருகே உள்ள நெற்குணம் கிராமத்தில், முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இவ்வூர் செல்லியம்மன் கோவில் முன் உள்ள பலகை கல்லில் கல்வெட்டு இருப்பதை, கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு, ப.கோவிந்த பிள்ளை தகவல் அளித்தார். அதன்படி, முதுபெரும் கல்வெட்டு அறிஞர், சு.ராஜகோபால், கல்வெட்டு ஆய்வாளர், ப.பூபாலன், டாக்டர் உ.வே.சா., நுால் நிலையக் காப்பாட்சியர், கோ.உத்திராடம், கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தனர்.

இந்த கல்வெட்டு, முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சேர்ந்தது என்றும், நெற்குன்றத்துாரில் இருந்த ஏரிக்கு, சோழ சிற்றரசர் ஒருவர், பராமரிப்பு நிலம் வழங்கி, வரிச் சலுகை அளித்த செய்தியை, அந்த கல்வெட்டு தெரிவிக்கிறது.இன்றைய நெற்குணம் என்ற ஊர், கல்வெட்டில், நெற்குன்றம் என, அழைக்கப்பட்டுள்ளது.முதலாம் பராந்தக சோழனின், 24வது ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் இருக்கும் முக்கிய தகவல்கள்:சிங்கபுர நாட்டு கிழக்கு வழியில், நெற்குன்றத்தில் இருந்த ஏரி பராமரிப்புக்காக, நிருபதுங்கமங்கலப் பேரரையன் என்பவரது மகன், நம்பிமல்லன் என்பவர் நிலம் கொடுத்தார். ஏரியை பராமரிக்க கொடுக்கப்படும் நிலம், பொதுவாக, ஏரிப்பட்டி என, அழைக்கப்படும். இந்நிலம் மூன்று பகுதிகளாக, மருதஞ்செறு, கொடுமாடி, கழுவல் என, மூன்று பெயர்களில் இருந்தது.ஏரி பராமரிப்புக்காக கொடுக்கப்பட்ட இந்நிலங்கள் வரி இல்லாமல் கொடுக்கப்பட்டவை. நெற்குன்ற ஊரார், வரி இல்லாத நிலம் என, ஏற்றுக் கொண்டனர்.பின்னாளில் வரி விதித்தால், அவர்கள் ஏழு நரகங்களில் கீழான நரகம் செல்வர் என்றும், கொடுக்கப்பட்ட நிலத்திற்கு வில்லங்கம் செய்பவர்கள். அபகரிப்பவர்கள், ஏழு நரகங்களில் கீழான நரகம் செல்வர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலத்தை வழங்கிய நம்பிமல்லன், வரி நீக்கியதோடு, கூடுதலாக, ஏரிப் பாசனத்தில் உள்ள நிலங்கள் வழியான ஆனைவாய், மன்றுபாடு முதலிய வரி வருவாய்களும் கிடைக்கச் செய்துள்ளார்.இவ்வாறு, அதில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.கல்வெட்டை ஆராய்ந்த, அறிஞர், சு.ராஜகோபால் தெரிவித்த தாவது:இப்பகுதியில் சோழர் ஆட்சி துவங்கிய நிலையில், பொறிக்கப்பட்ட கல்வெட்டு, ஏற்கனவே இருந்த நிருபதுங்க மங்கலப்பேரரையன் என்ற, இப்பகுதி பல்லவரின் சிற்றரசர், சோழர் காலத்திலும் சிற்றரசராகச் செல்வாக்குடன் தொடர்கிறார்.அவரது மகனும் சிற்றரசராகத் தொடர்வதோடு, இப்பகுதி வரி விதிப்பு, வரிச் சலுகை அதிகாரங்களும் பெற்று விளங்கியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: