சாதி, மொழி, சமயம் குறித்த பார்வை!

சாதி, மொழி, சமயம் குறித்த பார்வை!

சாதி, மொழி, சமயம் குறித்த பார்வை!

தமிழர் சமயம் :

இந்து சமயம் அல்லது சைவ சமயம் எதுவாக இருந்தாலும் தமிழர் சமயம் குறித்த சரியான பார்வை இக்காலம் வரை எங்கும் பார்க்கப்படவில்லை. சமய விளிம்புகளின் இரு கோடிகள் மட்டுமே இது வரை பேசப்பட்டுள்ளன. முரட்டுத் தனமான நம்பிக்கைகள் ஒரு பக்கமும் அதே முரட்டுத்தனமான மறுப்புகள் ஒரு பக்கமும் காணப்பட்டன, காட்டப்பட்டன.

ஏதோ சில நூல்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளே சமயங்களுக்கான பொதுத் தளம் என்பது பிழையல்ல. ஆனால் இது எல்லாச் சமயங்களுக்கும் பொருந்தாது. பலவாகிய இந்திய சமயங்கள் அனைத்தையும் ஆராய்வது இந்த இடத்தில் வேண்டாம் என்பதால் இரண்டே இரண்டு சிந்தனைக் கட்டுமானங்களை மட்டும் தேவைப்பட்ட அளவுக்கு பார்த்துக் கொண்டால் சமயம் குறித்த சரியான பார்வை ஒன்று கிடைக்கும்.

முதலாவது இந்து சமயம் என்ற பொதுப் பெயரில் வைதீகம் விரித்திருக்கும் அகன்ற வலை. இருக்கு முதலிய வேதங்களின் அடிப்படையில் அமைந்த வைதீகப் பண்பாடு வேள்வி, வருணாசிரமம், சமற்கிருதம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராமணீய வாழ்க்கை முறையைக் குறிக்கிறது. பிறப்பால் வரும் சாதிமையைப் போற்றுவது வருணாசிரமம். இதுவே பிராமணீயத்தின் அடித்தளம்.

பிராமணீயம் இந்தியப் பெருநிலம் முழுவதும் பரவியது. உலகியல் செல்வம் அனைத்தும் பெறலாம் என்னும் வேட்கையை முன்னிறுத்தியதால் வேத வேள்வி தமிழ் அரசர்களையும் செல்வந்தர்களையும் விரைந்து கவர்ந்தது. இதன் வழித் தமிழ் நாட்டு அரண்மனைகளின் செங்கோல்களை வைதீகம் கைப்பற்றியது.

மற்றொன்று தமிழர் உருவாக்கிய மெய்ப் பொருள் சிந்தனை. மரபு சார் ஊர்த்தெய்வங்கள் பலவும் நம்பிக்கைத் தளங்களில் ஊன்றி நின்றன. குல தெய்வம் அல்லது இல்லுறை தெய்வம், காவல் தெய்வங்கள், வீரர்களுக்கான நடுகல் வழிபாடு போன்றவை தமிழரின் மரபு சார் மதங்கள் ஆகும். தொல்காப்பியம் குறிக்கும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலத்திணைகளுக்கும் முறையே முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை ஆகியவை தமிழரின் தொன்மைத் தெய்வங்கள். இவற்றுள் இந்திரன், வருணன் என்பவை வைதீகத்தின் சாயல் பெற்றுத் திரிந்த பெயர்கள்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


பிறவா யாக்கை பெரியோன் :

சங்க காலத்தில் மரபு சார் சிறுதெய்வங்கள் பலவும் வழக்கில் இருந்த போது சிவபெருமான் ‘பிறவா யாக்கை பெரியோன்’ என இளங்கோவடிகளால் குறிப்பிடப்பெற்றார். சிவபெருமானின் தோற்றப் பொலிவைக் குறிக்கும் தொடர்கள் பலவும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. நம்பிக்கை சார்ந்த சிறு தெய்வங்களின் வழிபாடு மலிந்திருந்த காலத்தில் அறிவு சார்ந்த சிவ வழிபாடு சான்றோர் சிந்தனையில் வளர்ந்து சித்தாந்தம் என்ற மெய்யறிவுத் துறையாக அமைந்தது.

கடவுளுக்குக் கடவுள் தேவையில்லை, சடப் பொருள்களுக்கு அறிவும் உணர்வும் இன்மையால் அவற்றுக்கும் கடவுள் தேவையில்லை. ஆகவே சடப் பொருள்களைக் கருவி கரணங்களாகக் கொண்டு உலகைத் துய்க்கும் அறிவும் உணர்வும் உடைய உயிர் என்னும் பொருள் இருக்கத்தான் வேண்டும் என்பது உயிர் உண்மையை நிறுவும் வாதம். இல்லது தோன்றாது என்னும் வாதத்தால் உள்ளதாகிய மூலப் பொருள் ஒன்றிலிருந்தே உலகம் தோன்றியிருக்க வேண்டும் என்பது மாயையை நிறுவும் வாதம்.

உலகின் இருப்பை ஆராய்ந்து அவன், அவள், அது என்னும் அவயவப் பகுப்புடையதாய் இருக்கும் இவ்வுலகம் சடமாதலால் தானே தோன்றி, நின்று அழியாது என்றும் எல்லா உலகங்களையும் முற்றாக அழிக்கும் ஆற்றல் உள்ளவனே உலகைப் படைப்பவனாயும் உலகுக்கு ஆதியாயும் இருப்பான் என்றும் கடவுள் இருப்பைச் சைவம் நிறுவுகிறது.

ஆணவம் ஒன்று ; வினை மற்றொன்று :

உயிர், மாயை, கடவுள் தவிர வேறு இரண்டு பொருள்களும் கடவுளால் படைக்கப்படாமல் என்றும் உள்ள பொருள்களாக உள்ளன. என்றும் உள்ள உயிர்களின் இயல்பாகிய அறிவு, இச்சை, செயல் ஆகிய ஆற்றல்களை மறைத்து அவற்றுக்கு அறியாமையை ஏற்படுத்தியிருக்கும் ஆணவம் என்பது ஒன்று. ஆணவத்தை அகற்றுவதற்கு உயிர்களைச் செயல்படுத்திப் பக்குவப்படுத்தும் வினை மற்றொன்று. அறிவு சார்ந்த இந்த வாதங்களால் உயிர், மாயை, கடவுள், ஆணவம், வினை ஆகிய பொருள்கள் தோற்றம் அழிவு இன்றி என்றும் இருப்பவை என்று கூறுவது சித்தாந்தம். கடவுளின் இருப்பைப் பதி உண்மை என்றும் கடவுளின் சிறப்பைப் பதி இலக்கணம் என்றும் சித்தாந்தம் விரித்துப் பேசியது.

என்றும் உள்ள உயிர்களுக்கு என்றும் உள்ள மாயையிலிருந்து உடல், உலகங்கள், உயிர்க்கான நுகர்ச்சிப் பொருள்களை இறைவன் படைத்துக் கொடுக்கிறான். படைத்தவற்றை உயிர்கள் நுகர்ந்து பக்குவப்படும் வரை காக்கின்றான். உயிர்கள் பிறந்தும் இறந்தும் பக்குவப்படும் வரை தன்னை மறைக்கின்றான். பிறப்பு இறப்பிலிருந்து இளைப்பாறும் பொருட்டு படைத்தவற்றை அழிக்கின்றான். பக்குவப்பட்ட உயிர்களை இடையறா இன்பத்தில் நிலைக்க அருளுகின்றான். இவ்வாறு படைத்தல், காத்தல், மறைத்தல், அழித்தல், அருளல் என்னும் ஐந்தொழிகளை உயிர்கள் பொருட்டு இறைவன் செய்தபடி இருக்கின்றான் என்பது சித்தாந்தம்.

இருபத்தெட்டு சைவ ஆகமங்களைத் தனக்கு வேதமாய்க் கொண்டது சிவனைப் போற்றும் சைவம். ஆகமங்களின் செயல் முறை நூலாக அமைவது பன்னிரு திருமுறைகள். இவ்விரண்டு நூல்களின் வழியில் அமைந்தவை பதினான்கு மெய்கண்ட சாத்திரங்கள். இவற்றுள் ஆகமம் விதி நூல், திருமுறை செயல் நூல், மெய்கண்ட சாத்திரங்கள் சைவத்தின் இலக்கண நூல்கள். மற்றோர் முறையில் கூறினால் சைவத்தின் வேதம் ஆகமம், மெய்யறிவு நூல் மெய்கண்ட சாத்திரங்கள், மெய்யுணர்வு (பத்தி) நூல் திருமுறைகள்.

சைவம் இமயம் முதல் குமரி வரை பல அடைமொழிகளைக் கொண்டு விரிந்தது. என்றாலும் தென் தமிழ் நாட்டில் நுண்ணிய தத்துவத் துறையாக செம்மைப்பட்டது. இதன் வளத்தை இந்தியச் சிறு மதங்கள் யாவும் பங்கிட்டுக் கொண்டன. கணபதியைப் போற்றும் காணாபத்தியம், முருகனைப் போற்றும் கெளமாரம், சக்தியைப் போற்றும் சாக்தம் ஆகிய மதங்கள் யாவும் முறையே சிவனின் பிள்ளைகள் என்றும் மனைவி என்றும் உறவு முறைகளால் தம் நிலையை உறுதிப்படுத்திக் கொண்டன.

உறவு முறைகளை வலிமைப் படுத்த ஏராளமான புராணங்கள் உருவாக்கப்பட்டன. தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன. ஆரிய பிராமணர்களின் தொழில் வளம் கருதி உருவாக்கப்பட்ட கிரியைகள் அறிவுக்கு ஒவ்வா நம்பிக்கைகளை உருவாக்கின. இன்றும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

தனிப்பெரும் சமயமான சைவம் தென்னிந்தியச் சிறு சமயங்கள் உயிர்த்து உறுதி பெற உதவிய காலத்தில் வைதீகம் சைவம் உட்பட அனைத்துச் சமயங்களையும் வாரி விழுங்கித் தன் வயிற்றில் அடக்கிக் கொண்டது. இதனால் வேதங்களை ஏற்காத சமணம், பெளத்தம் அவைதீகம் என்றும் மற்றவை அனைத்தும் வைதீகம் என்றும் ஆரிய மயப்பட்டன. இக்காலத்தில் தமிழரின் பழஞ்சமயங்களான கிராமத்துத் தெய்வங்கள் வைதீகத்தின் கைகளுக்குத் தப்பித் தம் மரபுகளைக் காத்துக் கொண்டன. சிற்றூர்களைக் கடந்து விரிந்த சமயங்கள் வைதீகத்தில் கலந்து உரு மாறின. முருகன் சுப்ரமணியன், கந்தன் என்றும் திருமால் விஷ்ணு என்றும் மாற்றம் கண்டனர். நிலத்திணை கடந்து பொதுக் கடவுளாய் இருந்த சிவன் உருத்திரன் ஆனான். தமிழர் அமைத்த கோயில்களில் பிராமணர் பூசகராயும் சமற்கிருதம் பூசனை மொழியாகவும் ஆனது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அரசர்களே இதற்கெல்லாம் வழி கொடுத்து வணங்கி நின்றனர்.

ஆரிய மயப்பட்ட சைவ சமயத்தை மீட்டுப் புத்துருவாக்கம் செய்யும் முயற்சியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வர் பெருமக்கள் அரும்பாடு பட்டனர். சமண, பெளத்த மதங்களின் வலிமையை எதிர்கொள்ள இயலாத நிலையில் வைதீகத்தைப் பகைத்துக் கொள்ளாமல் அதே வேளையில் சைவத்தையும் தமிழையும் மீட்கும் போராட்ட முறையை மேற்கொண்டனர். சமற்கிருத மொழியைத் தேவபாஷை என்று கூறும் பிராமண மரபில் வந்த திருஞானசம்பந்தர் தன்னைத் தமிழ்ஞானசம்பந்தர் என்று வலிந்து பல பாடல்களில் குறிப்பிட்டார். வைதீக நெறிக்கு ஒவ்வாத உருவ வழிபாட்டு மரபை மீட்டார். தமிழால் சிவபெருமானைப் பாடும் பதிகங்கள் இயற்றினார். இவர் வழியில் திருநாவுக்கரசர் மேலும் உறைத்தெழுந்தார்.

கிரியைகள் மட்டும் வழிபாடு ஆகிவிடாது, உண்மை அன்பே வழிபாடு என்றார். ‘ நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன்’ என்றார். ‘சாத்திரங்கள் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்’ என்று சமூக நீதியுரைத்த திருநாவுக்கரசர் ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்று முடியரசை எதிர்த்த முதல் குடியரசர் ஆனார்.

‘அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்

ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்

அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே (6.95.10)

என்று சாதிமை கடந்த பத்திமையை அப்பர் முன்னைலைப்படுத்தினார்.

இவர்கள் வழியில் வந்த சுந்தரர் இல்லறத்தினின்றும் இறைவன் திருவடியைச் சென்றடைய முடியும் என்று வாழ்ந்து காட்டினார்.

‘சாதி குலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதம் இலி நாயேனை…’

என்று சாதி, குலம், பிறப்பால் மக்களை உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனக் கூறுவதை இழிந்த பண்பு எனச் சாடினார் மாணிக்கவாசகர்.

இவ்வாறு நால்வர் பெருமக்களும் ஏனைய சைவச் சான்றோரும் ஆரிய வருணாச்சிரமத்தைக் கண்டிக்கும் போராட்டத்தின் மறுதலையாகச் சைவம் குறிக்கும் ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ (10.2072) என்ற மனித குல ஒருமைப்பாட்டை வலியுறுத்தினர். ஆரிய மாயை என்று கூறி வைதீகம் கலந்த தமிழர் சமயங்களைப் புறக்கணிக்கும் தமிழ்ச் சிந்தனையாளர் ஆரியமும் வைதீகமும் நீங்கிய தமிழர் சமயங்களை அடையாளம் கண்டு மீட்டெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். இவற்றுள்ளும் சைவம் தமிழர் வளப்படுத்திய தத்துவக் களஞ்சியம் என்பதை உணர்ந்து அதனைப் போற்றிக் கைக்கொள்ள வேண்டும்.

தமிழருக்குச் சமயமே இல்லை :

‘தமிழருக்குச் சமயமே இல்லை’ என்ற முரட்டு வாதம் தமிழரின் சமயம் இருந்த இடத்தில் அந்நிய மதங்களுக்கு ஆட்சி பீடங்களை அமைத்திருக்கிறது. தமிழர் சமயங்களைச் சார்ந்தோரைப் பார்த்து ‘கடவுள் இல்லை, இல்லவே இல்லை’ என்போர் அந்நிய மதங்களைச் சார்ந்துவிட்ட தமிழரையும் தமிழரை மதம் மாற்றும் அந்நியரையும் பார்த்து அப்படிச் சொல்வதில்லை என்பதால் கடவுள் மறுப்பாளர் வந்தாரை வாழ வைப்பதை மறைமுகப் பணியாகச் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்த்த வேண்டியுள்ளது.

தமிழரின் மரபு சார்ந்த சமயங்களை வைதீகப் பிடியிலிருந்து மீட்கும் முயற்சியில் தோற்றுப் போனவர்கள் தமிழருக்குச் சமயமே இல்லை என்று மறுதலிப்பது தமிழரின் பண்பாட்டு வரலாற்றை ஊனப்படுத்திவிடும். குறிப்பாகச் சைவ சமயத்தையும் சைவ சித்தாந்தத்தையும் மறுதலிப்பது ஆய கலைகள் அறுபத்து நான்கையும் அறிந்த தமிழனுக்குக் கடவுள் பற்றிய சிந்தனை மட்டும் இல்லை என்று கூறுவதாய் முடியும். இப்பார்வையினின்று மாறி வைதீகப் பிடியிலிருந்து சைவத்தை மீட்க வேண்டும். மீட்டால் சைவம் அறிவார்ந்த சமயமாகச் சமய உலகைத் தலைமை கொள்ளும் என்பது உறுதி.

  •  ஆறு. நாகப்பன்

மொழி :

பௌத்த மொழிக் கோட்பாடு என்று பேசுபவர்கள் அனைவரும் பாலி மற்றும் சமஸ்கிருத மொழிகளை அடிப்படையாகக் கொண்டே விவாதிப்பதால், தமிழை மையமாகக் கொண்டு விவாதத்தில் ஈடுபடும் இவருடைய சிந்தனைகள் ‘பௌத்தம்’ என்று அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து நிச்சயமாய் வேறுபட்டு நிற்கிறது. எனவே, மொழியின் தோற்றம் குறித்தும், ஒழுங்கமைப்பு குறித்தும் இவர் முன்வைக்கக்கூடிய கருத்துகளை ‘தமிழ் பௌத்த மொழிக் கோட்பாடு’ என்று சொல்வதே சரியாக இருக்கமுடியும்.

எல்லா சமயங்களையும் போலவே மொழியின் தோற்றத்தை இறைவனோடு தொடர்பு படுத்தியே தமிழின் பௌத்த இலக்கண நூலான வீரசோழியமும் பேசுகிறது. ‘ஆயுங்குணத்து அவலோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டே இம்புவனிக்கு இயம்பிய தண் தமிழ்’ என்பது தான் வீரசோழிய பாயிரத்தின் குறிப்பு. இதற்குப் பாரம்பரியமாக உரை எழுதக்கூடியவர்கள், அவலோகிதன் என்ற புத்தர் அகத்தியருக்கு தமிழ் மொழியைக் கற்றுத் தந்து நாடெங்கும் போய் பரவச் செய்தார் என்று எழுதுகின்றனர். இதனை, சற்றும் பொருட்படுத்தாத அயோத்திதாசர் வீரசோழியப் பாயிரம், வீரசோழியப் பதிப்புரை – சிவஞானயோகியார், முன் கலை திவாகரம், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மிக முக்கியமாக பதஞ்சலியார் ஞானம் போன்ற பனுவல்களிலிருந்து தருவித்த ஆதாரங்களைக் கொண்டு பௌத்தத்திற்கும் மொழியின் தோற்றத்திற்குமான புதிய கதையாடலொன்றை உருவாக்குகிறார்.

இப்புதிய கதையாடலின் படி, பௌத்தம் தோன்றுவதற்கு முன்பு வரை எல்லா மொழிகளையும் மக்கள் ‘ஒலிவடிவாகவே பேசி வந்தார்கள். அக்கால் ஆதிபகவனாகும் புத்தபிரான் ஓதிவைத்த ஆதிவேதமொழி, ஆதிமறை மொழி என்னும் திரிபீட வாக்கியங்களாம் மூவரு மொழிகளை வரிவடிவின்றி ஒலிவடிவ சுருதியாக…’ போதித்து வந்தார். அதனைக் கேட்ட சிலர், கேட்ட மாத்திரத்தில் விளங்கிக் கொண்டு அதன் மீது சிந்திக்கலானார்கள். ஆனால், ‘…சிலர் கேட்டும் அவரவர்கள் மனதிற் படியாமல் சுருதி மயக்கங்கண்டனர்’. இதனால், புத்தர் ‘…சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷையாம் தமிழையும் வரிவடிவமாக இயற்றி … தாம் நிலை நாட்டி வரும் சங்கத்தோர் யாவருக்கும் கற்பித்து சத்தியதன்மமானது மேலும் மேலும் பரவுவதற்காக அகஸ்தியருக்கு திராவிட பாஷையை கற்பித்து…தென்புறத்திற்கு அனுப்பி தானும் அந்தந்த இடங்களுக்குச் சென்று வரிவடிவமாம் பாஷையை ஊன்றச் செய்து மெய்யறமாம் புத்த தன்மத்தையும் பரவச் செய்தார்’

மொழியின் தோற்றம் குறித்த தகவல்களுக்கு, வரி வடிவ உருவாக்கம் நடைபெற்றதாக சொல்லும் அயோத்திதாசர் அது மூன்று மொழிகளுக்கும் ஒரே சமயத்தில் நடைபெற்றது என்று சொல்திலிருந்து நாம் சில முடிவுகளை வருவிக்க முயற்சிக்கலாம். முதலாவதாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மொழியியல் – இந்தியவியல் என்ற பின்புலத்தோடு செய்யப்பட்டிருந்த ‘திராவிட மொழிகள் – இந்திய ஐரோப்பிய மொழிகள் என்ற எதிர்வு நிலையை’ கிஞ்சித்தும் நம்பியிருக்கவோ மதித்திருக்கவோ இல்லை என்பது விளங்குகிறது. இரு வேறு மொழிக் குடும்பங்கள் என்ற வித்தியாசத்தை ‘திராவிட இனம் – ஆரிய இனம்’ என்ற இன எதிர்வாகக் கட்டமைக்கும் வாதத்தின் படி, சமஸ்கிருதத்தை ஆரியர்கள் என்ற பிராமணர்களின் (வேஷ) மொழியாக விளக்குவதை அடியோடு மறுக்கும் அயோத்திதாசர், ஆரியர்களின் வருகைக்கு முன்பே இங்கு பாலி, தமிழ், சமஸ்கிருதம் என்னும் மூன்று மொழிகளும் வழங்கி வந்ததாய் தெரிவிக்கிறார். ஆரியர்கள் குறித்து வரைந்து வைத்துள்ள சித்திரங்களை ஒத்துக் கொள்ள மறுக்கும் அவர், ‘நாணமற்ற ஒழுக்கத்தையும், கொடூரச் செயலையும், மிலேச்ச குணத்தையும்…’ உடையவர்கள் பிராமணர்கள் என்று எழுதுகிறார். இதன் காரணமாகவே, பிராமணர்களை ‘..சேந்தன் திவாகர தேவர், தனது முன் கலை நூலிலும், மண்டல புருடன் தனது பின் கலை நூலிலும் மிலைச்சரென்றும், மிலேச்சரென்றும், ஆரியரென்றும் இவர்களை அழைத்திருக்கிறார்கள்.

இரண்டாவதாக, பிற சமயவாதிகள் செய்தது போல், மொழியை உருவாக்கித் தந்ததே புத்தர் தான் என்று சொல்வதில் அயோத்திதாசருக்கு உடன்பாடு இருக்கவில்லை. அப்படி இருக்கவும் முடியாது என்பது அவருடைய கருத்தாக இருக்க வேண்டும். ஆனாலும், அவலோகிதன் என்ற புத்தர் ஜனகர், வாமதேவர், நந்தி, ரோமர், கபிலர், பாணினி, அகத்தியமுனி போன்றோருக்கு மொழியை போதித்து உலகெங்கும் போய் பரவச்செய்தார் என்ற வரலாற்றுக் குறிப்பை ஒதுக்கித் தள்ளவும் வழியில்லை. இந்த இக்கட்டிலிருந்து மீண்டு வருவதற்கு உருவாக்கப்பட்டதே ‘சகட பாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷையாம் தமிழினையும் ஆதியாக வரிவடிவில் போதித்தவரும் புத்தபிரானேயாகும். இவ்விரு பாஷைகளை இயற்றியது கொண்டே அருங்கலை நாயகனென்றும், அருங்கலை விநோதனென்றும் மற்றும் பெயர்களை அளித்துள்ளார்கள்’ (ப. 544, அ.சி. 2) என்ற கதையாடலாகும். திரிபேத வாக்கியங்களை ஒலி வடிவில் கேட்டவர்கள் மனதில் இருத்த முடியாமல் மயக்கம் கொண்டார்கள்; அதனை முன்னிட்டே வரிவடிவம் உருவாக்கப்பட்டு திரிபேதங்கள் அனைத்தும் கற்களில் வெட்டி வைக்கப்பட்டன என்ற விளக்கத்தில் வெளிப்படக்கூடிய பகுத்தறிவு அயோத்திதாசரிடம் மேலோங்கி தெரியக்கூடிய குணமாகும்.

மொழி குறித்து பேசும் அயோத்திதாசர் தமிழ் மொழியின் ஒழுங்கமைப்பு என்ற பொருளில் ஏராளமான கருத்துகளை தெரிவிக்கிறார். இது நாள் வரையில் தமிழ் என்று பேசியவர்கள் சொல்லியிராத பல புதிய தகவல்களை இவரிடம் நாம் கேட்க முடிகிறது. தகவல்கள் மட்டுமல்லாது புதிய கருத்தாக்கங்களையும் உருவாக்குகிறவராகத் தோற்றமளிக்கின்றார். அவரது கருத்துப்படி ஒவ்வொரு மொழிக்கும் இரண்டு முக்கியமான முகங்கள் உண்டு, அதனுடைய இலக்கண முகமும், இலட்சண முகமும். மொழியின் இலக்கண முகம் நமக்கெல்லாம் பரிச்சயமானது – மொழியை பயன்படுத்துவதற்கான சட்ட திட்டங்களும், வழிமுறைகளும்! தமிழுக்கான பயன்பாட்டு விதிமுறைகள் தொல்காப்பியம், நன்னூல், வீரசோழியம் போன்ற இலக்கண நூற்களில் சொல்லப்பட்டுள்ளன.

தமிழ் மொழியின் இலட்சணங்கள் :

மொழியின் இரண்டாவது முகம் என்று சொல்லக்கூடிய இலட்சணம் தான் நமக்குப் புதியது. தமிழுக்கு ஐந்து விதமான இலட்சணங்கள் (பஞ்சலட்சணம்) இருப்பதாக அயோத்திதாசர் கருதுகிறார். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று சொல்லக்கூடிய இந்த ஐந்து இலட்சணங்களும் பௌத்த தத்துவத்தோடு நெருக்கமான உறவுகளை உடையது. தமிழ் மொழியின் எழுத்துகள் உருவாக்கப்பட்டதற்கு பின்னணியில் தர்க்கமொன்று செயல்படுவதாக அவர் கருதுகிறார். அதே போல் சொற்களின் உருவாக்கம், பொருளின் உருவாக்கம், யாப்புகளின் தன்மை, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள அணிகளின் இயல்பு என்று அனைத்து விதமான இலட்சணங்களுக்கு பின்பும் விரிவான தர்க்க ஒழுங்குகள் உள்ளன. மொழிக்கான வரிவடிவத்தை உருவாக்கிய போது அதன் இலட்சணங்களையும் பௌத்தம் உருவாக்கியிருந்தது. தமிழ் மொழி என்பது இலக்கணமும் இலட்சணமும் இணைந்தது என்பதே மரபான நம்பிக்கை. இலக்கணத்தை மட்டும் கற்றுக் கொண்டு தமிழின் இலக்கியப் பனுவல்களை விளங்கிக் கொள்ளலாம் என்று நினைப்பது தவறாகவே முடியும். தமிழ் மொழியின் ஐந்து இலட்சணங்களும் விளங்காதவர்களுக்கு பனுவல்களின் உண்மைப் பொருள் தெரியவருவதில்லை.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இலட்சணம் என்பது மொழியின் அகக்கட்டமைப்பு போல் ஏதோவொன்று என்று விளங்குகிறதேயொழிய அதன் முழு வடிவமும் புலப்படவில்லை. உண்மையிலேயே அது என்னது தான் என்பதை தெரிந்து கொண்டால் தான், அது தத்துவமா, தருக்கமா, பௌத்த விளக்கமா, உரை எழுதுவதற்கான முறையியலா என்று நம்மால் ஒரு முடிவிற்கு வரமுடியும். இந்த நிலையில் அயோத்திதாசர் சொல்ல விரும்பும் ஒரு செய்தி மட்டும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது – தமிழ் மொழி விதிமுறைகளால் மட்டுமே செய்யப்பட்ட இயந்திர மொழி அல்ல; அது தனக்குள்ளேயும் ஓர் அர்த்த ஒழுங்கமைப்பைக் கொண்டுள்ளது.

தமிழ் மொழியின் இலட்சணங்கள் குறித்த விவரிப்புகள், அதன் பெயர்க்காரணத்திலிருந்து தொடங்குகின்றன. தமிழ் மொழியை, ‘தமிழ்’ என்றும் ‘திராவிடம்’ என்றும் இரண்டு பெயர்களில் அழைப்பது வழக்கம். ‘தமிழ்’ என்ற பெயர் தென்பகுதியிலும், அதாவது தமிழ் வழங்கக்கூடிய பகுதியிலும், ‘திராவிடம்’ என்ற பெயர் வடபகுதியிலும் வழக்கிலிருந்தது. இதற்கும் காரணம் இருந்தது. தமிழ் எழுத்துகளில் சிலவற்றை அமுத எழுத்துகள் என்றும் வேறு சிலவற்றை நஞ்சு எழுத்துகள் என்றும் வகுத்திருக்கிறார்கள். குறிப்பாக யாப்பு இலட்சணம் இந்த அமுத, நஞ்சு எழுத்துகளைப் பற்றிக் கூறி இவற்றுள் நஞ்சு எழுத்துகளை முதல் எழுத்தாகக் கொண்டு பனுவல்களை உருவாக்குவது தவறு என்று சொல்லியிருக்கிறது (ப. 463, அ.சி. 2). அதன் படி, யா, யோ, ரா, ரோ, லா, லோ என்ற மூன்று ஒற்றெழுத்துகள், இரண்டளபடை, மகரக்குறுக்கம், ஆய்த எழுத்து – இவை அனைத்தும் நஞ்சு எழுத்துகள்; அ, இ, உ, எ, க, ஸ், த, ந, ப, ம, வ என்பவை அனைத்தும் அமுத எழுத்துகள். இந்த அமுத எழுத்துகளை முதலெழுத்தாகக் கொண்டு பனுவல்களைக் கட்டுவது தான் தமிழின் இலட்சணங்களுள் ஒன்று. இவ்வாறு தமிழில் அமுதமும் நஞ்சும் கலந்து இருப்பதால், தமிழில் அமுத எழுத்துகள் உண்டு என்று சொல்ல விரும்புபவர்கள் அதனை அமுதம், அமிழ்தம், தமிழ் என்று அழைத்தனர்; தமிழின் நஞ்சு எழுத்துகளை சுட்டிக்காட்ட விரும்பியவர்கள், விஷ மொழி, விட மொழி, தீராத விடம் உடைய மொழி, தீராவிடம், திராவிடம் என்று அழைத்தனர். இப்படியே அதற்கு தமிழ் (அமிழ்தம்) என்றும் திராவிடம் (தீரா விடம்) என்றும் பெயர்கள் வந்தன.

‘எழுத்து இலட்சணம்’ என்று சொல்லப்படும் தமிழ் எழுத்துகளின் ஒழுங்கமைவு பௌத்த தன்மத்தை அடியொற்றியது. மனிதன், உடலும் உயிருமான இரு வேறு தன்மைகளை உடையவன்; ஆனால், தோற்றத்தாலும் செயலாலும் ஒரே வடிவமாய் வெளிப்படுபவன். உடல் – உயிர் என்ற இரு தன்மைகள் இருப்பது கொண்டு தனக்கு அப்பால் வேறொரு பொருள் இருக்கக்கூடுமென்று அவன் மலைக்கக் கூடாது. ‘தானே தன் செயலால் சீர் கெடுவான்..தானே தன் செயலால் சீர் பெறுவான்… தானே தன் செயலால் துக்கமடைவான்..’ (ப. 566, அ.சி. 2). உயிர் என்பது ‘உள் மெய்’, அதாவது ‘உண்மெய்’; இது ‘அந்தர் அங்கத்தில்’ (அந்தரங்கம்) இருக்கிறது. உடல் என்பது ‘புற மெய்’, இது ‘பகிர் அங்கத்தில்’ (பகிரங்கம்) உள்ளது. இதனையே தமிழ் எழுத்து இலக்கணமான, உயிர் மற்றும் மெய் எழுத்துகள் என்ற வகைப்பாடு சுட்டுகிறது.

இவ்வகையாய் எழுத்துகள் இரண்டாவது இலட்சணமான சொற்களாய் ‘…திரண்டு இலக்கிய இலட்சணம் அமைந்த போது ஒரு சொல் வாக்கியம், இரு சொல் வாக்கியம், முச்சொல் வாக்கியங்களாக…’ மாறுகிறது (ப. 567, அ.சி. 2) என்று அயோத்திதாசர் ‘சொல் இலட்சணம்’ குறித்து பேசத் தொடங்குகிறார். மரபான மொழியியலும் சரி, நவீன மொழியியலும் சரி வார்த்தைகளை வாக்கியங்களாக ஒத்துக்கொள்வது இல்லை. சொல் என்பதை ‘உருபன்’ அல்லது ‘குறி’ என்று அழைக்கிற மொழியியல் அதற்கு அர்த்தம் உண்டு என்று ஒத்துக்கொள்கிறதே தவிர, அவ்வர்த்தங்கள் தர்க்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று ஏற்றுக்கொள்வதில்லை. சொற்களுக்கான அர்த்தங்கள், அதாவது ‘குறிப்பான்’கள், இடுகுறித்தன்மையை உடையவை என்பது தான் நவீன மொழியியலின் வாதம். ஆனால், அயோத்திதாசர், எழுத்துகளிலிருந்து சொற்கள் உருவாகும் முறையை ‘இலக்கியம்’ என்று அழைக்கிறார்; சொற்களை, வாக்கியங்கள் என்று அழைக்கிறார். அதாவது, சொற்கள் தன்னளவில் தொடர் நிலை உறவையோ அல்லது சேர்க்கை நிலை உறவையோ கொண்டிருக்கின்றன என்று விளக்குகிறார். அவரைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு சொல்லும் ஒரு வாக்கியம்; அதனுள் கிடைக்கோட்டு அல்லது குத்துக்கோட்டு உறவு ஓடிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

சாதி :

ஒவ்வொரு தமிழ் சொல்லும் ஒரு வாக்கியம், எனவே அது இலக்கியம் என்று அயோத்திதாசர் வாதிடுவதை விளக்குவதற்கு அதிகமாய் மெனக்கெடத் தேவையில்லை. அவர் புதிதாக விளக்கமளித்த சொற்களையே நாம் உதாரணங்களாய் எடுத்துக் கொள்ள முடியும். ‘சாதி’ என்ற சொல்லுக்கு, ‘சாதிக்கிற மொழியே சாதி’ என்று அவர் தரக்கூடிய விளக்கம் ஒரு சொல் வாக்கியத்திற்கான மிகச் சரியான உதாரணமாக இருக்க முடியும். சாதி என்ற சொல்லினுள் ‘ஒரு காரியத்தை செய்து முடிக்கும் வழிவகை’ என்றொரு வாக்கியம் ஒழிந்திருக்கிறது என்பது தான் அவரது வாதம். அதே போல், ‘அந்தரங்கம்’ என்ற சொல், இரு சொல் வாக்கியமாகும். ‘அந்தர்’, ‘அங்கம்’ என்றொரு தர்க்கம் அதனுள் செயல்படுகிறது என்பது அவரது விளக்கம். ‘பொம்மை’ என்பது, இரு சொல் வாக்கியம்; அதனுள் ‘பொய் மெய்’ என்ற வாக்கியம் தொழிற்படுகிறது. இவ்வகையாக சொற்களுக்கான அர்த்தங்களை கண்டறிவது தான் தமிழின் ‘சொல் இலட்சணம்’ என்று சொல்லும் அயோத்திதாசர், ‘…இரு சொல் வாக்கியத்தை ஒரு சொல்லே என்றும், பகுபதத்தை பகாபதமேயென்றும் பண்பு பிறழ்ந்து ஒருமை, பன்மை, தன்மை என்று வரைவதானால், பஞ்சலட்சண வாக்கியத்தின் கருத்தும் கெட்டு அதன் உரிய பொருளும் கெட்டு மலைவுற்று போகும்’ (ப. 567, அ.சி. 2) என்று எழுதுகிறார்.

ஜி. யு. போப்பின் திருக்குறள் விளக்கவுரையைப் பார்த்து மனம் வெதும்பிப் போகிற அயோத்திதாசர் ‘பௌத்தர்களின் இலக்கணோற்பவம் போப்பையருக்கு தெரியாதென்பது பௌத்தர்களது இலட்சணோற்பவம் போப்பையருக்கு தெரியாதென்பதேயாம்’ என்ற தலைப்பில் 1914, ஏப்ரல் 22 தேதியிட்ட தமிழன் இதழ் 7:46ல் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் தமிழ் மொழியின் இலட்சணங்களை விளக்கி எழுதிவிட்டு, ‘பஞ்சலட்சணமே விளங்காதோர்க்கு தருக்க லட்சண பாகுபாடுகளே விளங்காவாம். விளங்குவோர் பால் வாதிடுவதே விவேக விருத்தி, விளங்கார் பால் வாதிடுவதால் விவேகம் குறைவாம்’ (ப. 567, அ.சி. 2) என்று முடிக்கிறார். இத்தகைய ஐந்து இலட்சணங்களையும் அறிந்து கொள்வதற்கு என்ன வழி என்று கேட்டால் அதற்கும் பதில் அந்தக் கட்டுரையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது: ‘…பௌத்தர்களால் இரு நூறு வருடங்களுக்கு முன் வரைந்து வைத்துள்ள ஓலைப் புத்தகங்களிலும் சிலா சாசனங்களிலும் காணில் (இவை) பரக்க விளங்கும். பண்டை காலத்தார் கருத்தையும், பண்டை நூற்களையும், பண்டை சிலாசாசனங்களையும் ஆய்ந்துணராதவர்களுக்கு பஞ்ச லட்சணம் விளங்காவாம்’.

தமிழ் மொழியின் ஒழுங்கமைப்பாக செயல்படுவது பௌத்த தத்துவமே என்று கருதுகிற அயோத்திதாசர், மொழியை விளங்கிக் கொள்வதன் மூலம் பௌத்தம் சொல்லக்கூடிய நிர்வாண நிலையை அடைய முடியும் என்று சொல்வது அதன் உச்சபட்ச சிந்தனையாக அமைகிறது. மொழியின் அந்தாரார்த்தம் இவ்வுலகைப் புரிந்து கொள்வதற்கான வழிவகையாகவே செய்யப்பட்டுள்ளது என்பது தான் அவருடைய யோசனை. நஞ்செழுத்து – அமுதெழுத்து என்ற பாகுபாடு, மனிதனுக்குள்ளே தோன்றக்கூடிய ‘ஆசை – சாந்தம்’ என்ற இரு குணங்களின் உருவகமாக நின்று கொண்டிருக்கிறது. எவ்வாறு பனுவலை உருவாக்கும் போது நஞ்செழுத்தை தவிர்க்கிறோமோ அதே போல் வாழ்க்கையிலும் ஆசை என்ற நஞ்சை தவிர்த்து ‘அமுதமாகும் சாந்தத்தை பெருக்கி…உண்மெய்யில் நிலைத்து…’ நிற்பதே தமிழின் அடிப்படையான யோசனை.

மொழிக்கும் சிந்தனைக்குமான தொடர்புகளை பலரும் சொல்லியிருக்கிறார்கள். மொழி, கருத்துப் புலப்படுத்த சாதனம் மட்டும் அல்ல; அது சிந்திக்கும் கருவியாகவும் செயல்படுகிறது என்பதை 12ம் நூற்றாண்டை சார்ந்த ஃப்ரெஞ்ச்சு நாட்டு பொருள்கோளீயரான பியர் அபிலார்ட் ஐரோப்பிய தத்துவ மரபில் முதன் முறையாக அறிவிக்கிறார். இதன் தொடர்ச்சியாக அவர் சொல்லக்கூடிய இன்னொரு விஷயமும் நமக்கு உதவிகரமாக இருக்கக் கூடியது. சொல்லாடல்களின் வகைகளையும், தோற்றத்தையும் பற்றி பேசக்கூடிய அவர் இறுதியாக, ‘எல்லா சொல்லாடல்களும் அரசியல் சொல்லாடல்களே!’ என்றொரு விஷயத்தை பதிவு செய்கிறார். அதாவது, மொழி என்பதோ அதன் துணையோடு உருவக்கக்கூடிய சொல்லாடல்கள் என்பதோ எந்தவிதமான சார்புமின்றி நடு நிலைமையோடு செயல்படுகின்றன என்று சொல்வதற்கில்லை; அவை அனைத்திற்கும் பின்புலத்தில் தீர்மானமான அரசியல் நிலைப்பாடுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதே அபிலார்டின் கண்டுபிடிப்பு. கிறிஸ்தவ மத நூலான வேதாகமத்தை பனுவலாய்வு செய்த போது மேற்கண்ட முடிவுகளை எட்டுகிற அவருடைய சிந்தனை, பின்னால் 17ம் நூற்றாண்டு கார்ட்டீசிய சிந்தனையாளர்களான தெகார்தே மீதும் டெஸ்டாட் டூ ட்ரேஸி மீதும் ஏராளமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்று ஆய்வளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கருத்ததுருவம் என்று நாம் அழைக்கும் ideology என்ற கருத்தாக்கத்தை ட்ரேஸி உருவாக்குவதற்கு அபிலார்டின் மொழி பற்றிய சிந்தனைகளே அடிப்படைகளாக இருந்தன.

கருத்துருவம் என்பது மொழியின் மூலமே உருப்பெறுகிறது என்று ஐரோப்பிய மொழியியல் நம்புகிறது. பதினேழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து வந்திருந்த மொழி குறித்த இந்த சிந்தனை, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட வரலாற்றுப் பார்வையின் மூலம் சற்றே மறந்து போகப் பட்டிருந்தது. மொழியை வரலாற்றின் சுவடுகள் நிரம்பிய பொருளாகப் பார்க்கிற பார்வை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலும் கூட வேர்ச்சொல்லாய்வுகள் என்ற பெயரில் கோலோச்சி வந்தது. இந்தப் பார்வை மொழியின் ஒவ்வொரு சொல்லையும் ஒரு வரலாற்று ஆவணமாக உருவகித்தது. ஆதியிலிருந்து பயின்று வந்து கொண்டிருக்கும் மொழி, மனித சமூகம் கடந்து வந்த ஏராளமான வீழ்ச்சிகளையும் எழுச்சிகளையும் அருகிலேயே இருந்து பார்த்து வந்த சாட்சியாக இருக்கிறது. சாட்சியாக மட்டுமல்லாது, ஒவ்வொரு சூழலுக்கும் தகுந்தவாறு தன்னை தகவமைத்துக் கொண்டும் வந்துள்ளது. எனவே, மொழியின் தேகமெங்கும் கடந்த காலத்தின் பதிவுகள் தடயங்களாக மிஞ்சி நிற்பதற்கான வாய்ப்புகள் ஏராளம். ஒவ்வொரு சொல்லும் வரலாற்றின் பல்வேறு படிவங்களால் சூழப்பட்டுள்ளது. இந்தப் படிவங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்குவதன் மூலம் மொழியின் ஆதி வடிவை, வேர்களை நாம் அடைய முடியும் என்ற யோசனை, மொழியை திரைச்சீலை போலவோ அல்லது பிரதிபலிக்கும் கண்ணாடி போலவோ குறுக்கிப் பார்க்கும் தவறை செய்தது என்பது தான் குறியியலின் மூலமாக பெர்டினான் டீ சசூர் முன் வைத்த குற்றச்சாட்டு. இதன் தொடர்ச்சியாகவே, சொல்லின் பகுதிகளான குறிப்பானுக்கும் குறிப்பீட்டிற்கும் இடையே தர்க்க ரீதியான உறவு ஏதும் இல்லையென்றும், தொடர் நிலை – சேர்க்கை நிலை போன்ற தர்க்கங்களெல்லாம் சொற்கள் இணைந்து உருவாக்கும் வாக்கிய அமைப்பிலேயே உருவாகிறது என்றார்.

ஆனால், மொழி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சேகரமாயிருக்கும் மாதிரியில் ஒரு ஒழுங்கமைப்பு இருப்பதாகவும் (langue), அதில் மேற்கூறிய தொடர் நிலை, சேர்க்கை நிலை உறவுகள் செயல்படுகின்றன என்றும் அவர் தெரிவிக்கிறார். இந்த தர்க்கமே சொற்களின் மீது கருத்தியல் தடயங்களை (traces) ஏற்படுத்துகிறது என்ற சசூரின் யோசனையையே அதன் பின்பு ழாக் தெரிதா கட்டுடைத்தல் (deconstruction) என்ற பனுவல் விளையாட்டிற்கு அடிப்படையாகக் கொண்டிருந்தார். சொற்கள் எங்கெல்லாம் குழுமியிருக்கின்றனவோ அங்கெல்லாம் தர்க்கம் செயல்படுகிறது; இந்த தர்க்கமே மொழியைப் பயன்படுத்தி சிந்திப்பதற்கு நமக்கு உறுதுணையாக இருக்கிறது. மொழி, சிந்திக்கும் கருவி என்று அழைக்கப்படுவதன் காரணமும் இது தான். ஒரு வகையில் மொழி சிந்திப்பதற்கு பயனுள்ள கருவியாக இருக்கிறது என்றாலும், இன்னொரு புறம் அது மாற்று சிந்தனைக்கான கதவுகளை மூடியே வைத்திருக்கிறது என்பதும் உண்மை. மாற்று சிந்தனைக்கு முயற்சிக்கையில் மொழி தரக்கூடிய அனுகூலங்களை நாம் அடியோடு மறுத்து விட வேண்டிய கட்டாயம் இதனால் தான் ஏற்படுகிறது.

மொழியின் கட்டுக்கோப்பினுள் செயல்படுவதாக சொல்லப்படும் ஒழுங்கமைப்பு போன்ற ஒன்றாகவே, சொல்லக்கூடிய ‘இலட்சணம்’ என்பதை நான் புரிந்து கொள்கிறேன். தமிழ் மொழியின் ஒழுங்கமைப்பு என்பது பௌத்த தன்மமே என்று அவர் நிறுவ முயற்சிக்கிறார். பௌத்த தத்துவம் இந்த உலகை எவ்வாறு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறதோ, அது போலவே தமிழ் மொழி கட்டப்பட்டிருக்கிறது. நஞ்சோடும் அமுதோடும். ‘நான்’ அமுது அமுது என்று சொல்ல, ‘பிறர்’ நஞ்சு நஞ்சு என்று சொல்லும் யதார்த்தத்தோடு. நஞ்சை விலக்கி அமுதத்தை முன்வைத்து பனுவல்களைக் கட்டமைக்கும் முறையியலோடு. அப்பனுவல்களின் மெய்ப்பொருளை உணர்ந்து பேருவகை அடையும் வாய்ப்புகளோடும்.

சமயம் என்ற சொல்லின் பொருள் ‘காலம்’ என்று சொல்லி தனது விளக்கத்தை ஆரம்பிக்கிறார். ‘நீ என்ன சமயத்திலிருக்கிறாய்?’ என்ற கேள்வி அறப்பள்ளிகளில் தங்கியுள்ள சமண முனிவர்களைப் பார்த்து கேட்கப்படும் கேள்வி. பொது நிலையிலுள்ளவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியை பூர்வத்தில் யாரும் கேட்பதில்லை. பள்ளிகளில் தங்கியுள்ள முனிவர்களின் கடமைகள் மூன்றாக சொல்லப்படுகின்றன – விவேக விருத்தி, வித்துவ விருத்தி, ஞான விருத்தி. இதில் விவேக விருத்தி என்பது அறிவைப் பெருக்குவதாகும். இதற்காக ‘தமிழ் அட்சர இலட்சணங்களை விளக்கும் இலக்கண நூற்களையும், பல் பொருட்களை விளக்கும் இலக்கிய நூற்களையும், கலை நூற்களையும், கணித ஆராய்ச்சிக்குரிய சோதிட நூற்களையும், ஓடதி விருத்திக்குரிய வைத்திய நூற்களையும் வகுத்தல்’ (ப. 548, அ.சி. 2) முனிவர்களின் பணியாகும். இரண்டாவது கடமையான வித்துவ விருத்தியின் போது சிறுவர்களுக்கு தமிழ் பாஷையைக் கற்பித்து’ அவர்களை நல்வழிப்படுத்துவார்கள். மூன்றாவது கடமையான ஞான விருத்தியின் போது ‘தன்னை ஆய்வதே’ முக்கியமாக நடைபெறும். இந்த மூன்று கடமைகளையும் முனிவர்கள் நிகழ்த்த வேண்டியது கட்டாயம். விவேக விருத்தியின் போது செய்யப்படும் நூற்களை இயற்றும் காலத்தை அருக சமயம் என்றும், சிறுவர்களுக்குக் கற்பிக்கும் காலத்தை பௌத்த சமயம் என்றும், தன்னையே அறியும் காலத்தை சீவ சமயமென்றும் சொல்வது மரபு.

மதம் :

சமயத்திற்கு இணையான வார்த்தை என்று சொல்லப்படும் ‘மதம்’ என்ற சொல்லை, அவச்சொல் போலவே அவர் பயன்படுத்துகிறார். ‘மதக்கடை’ என்ற இரு சொல் வாக்கியமே மதம் குறித்த அவரது நிலைப்பாடாகும். ‘கல்லுகளாலும், பித்தளைகளாலும், களிமண்ணாலும், எலும்புகளினாலும் செய்துள்ள பலவகை சிலைகளைப் பரப்பி இந்த சாமி பெரியசாமி, அந்த சாமி சின்னசாமி, அந்த சாமி மோட்சத்திற்கு நேரே வழி காட்டும் சாமி, இந்த சாமி எதிரிகளையெல்லாம் கொல்லும் சாமி, அந்த சாமி உங்கள் நோய்களையெல்லாம் போக்கி விடும் சாமி, இந்த சாமி உங்கள் பாவங்களையெல்லாம் நீக்கி விடும் சாமி எனக்காட்டி தட்சணை தாம்பூலம் கொண்டு வாருங்கோளென்றும், உண்டிப்பெட்டிக்கு காசுகள் போட்டுக் கொண்டே வாருங்கோளென்றும் பேசும் இத்தகைய மதக் கடைகளும், மதக்கடை வியாபாரிகளும் உலகிலுள்ள எத்தேசத்திலும் விசேஷமாகக் கிடையாது. இந்து தேசத்தில் மட்டும் விசேஷமாகக் காணலாம்’ (ப.152-152, அ.சி. 2). எனவே மதம் என்ற சொல்லையும் அதன் மூலம் உருவாக்கப்படுகிற அடையாளத்தையும் ஒட்டு மொத்தமாய் மறுக்கிறவராக அயோத்திதாசர் காணப்படுகிறார். பௌத்தத்தை மதம் என்று அழைத்து, புத்தரை பெரிய சாமி அல்லது சின்ன சாமி என்று வியாபாரம் செய்பவர்களையும் அவர் மறுக்கிறார் என்பது இங்கு முக்கியம்.

சாதி – மொழி – சமயம் என்ற மூன்றில் எது ஒரு மனிதனின் அடையாளமாக இருக்க முடியும் என்ற கேள்விக்கு தெளிவான பதில் ‘மொழி’ தான் என்பதில் சந்தேகம் எதுவும் இருக்கவில்லை. தனது பத்திரிகைக்கு ‘தமிழன்’ என்று பெயர் சூட்டியதிலிருந்தே இதை நாம் யூகிக்க முடியும். ஆனால், அதே சமயம், தமிழ் என்ற அடையாளத்தை எவ்வாறு விளங்கிக் கொள்கிறார் என்பது தான் முக்கியமாகிறது. தமிழ் என்பது எல்லோரையும் இணைக்கும் கருவி என்று தட்டையாகவோ; பாரம்பரிய சின்னம் என்று உணர்ச்சிவசப்பட்ட நிலையிலோ; பிராமணர்களுக்கு (சமஸ்கிருதத்திற்கு) எதிரானது என்று எதிர்மறையாகவோ; தமிழ்த் தாய், பெண் என்று கற்பனையாகவோ; உயிர், மூச்சு, தெய்வம் என்று பக்தி வசப்பட்டோ புரிந்து கொள்ளப்படாமல் தத்துவார்த்த, கருத்துருவ நிலைப்பாட்டை அறிவிக்கும் அடையாளமாக முன்வைக்கப்படுகிறது என்பது தான் இங்கு முக்கியமாகிறது.

அயோத்திதாசர், பௌத்த தன்மம் என்று சொல்லக்கூடிய அனைத்தும் உலகாய்தத்தின் அடிப்படையாக இருப்பதை நாம் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும். எந்தவொரு அர்த்தமும் இந்த உலக நிகழ்வுகளிலிருந்தே பெறப்படுகிறது என்பதும், ஒருவன் செய்யக்கூடிய செயலே அவனது தன்மையைத் தீர்மானிக்கிறது என்பதும், உலகைக் கடந்து வேறொரு சக்தி எதுவும் நம்மை இயக்கவில்லை, அறிவை விருத்தி செய்வதன் மூலமே ஒருவன் முக்தி அடைய முடியும் என்ற தீர்க்கமும், பிறப்பினடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை மறுக்கிற தன்மையும், இவையனைத்தும் செழித்தது தான் பண்பாடு என்ற யோசனையும் அவரால் பௌத்தம் என்று சொல்லப்பட்டாலும், நவீன கருத்துருவ நிலையாகவே தோன்றுகிறது. தமிழ் என்ற அடையாளத்தை இவ்வாறு தனி மனித – சமூக விடுதலைக்கான கருத்தியல் தளமாக வரையறுப்பதோடு அதுவே ‘சாதிக்கும்’ அடையாளமாகவும் இருக்க முடியும்.

  • அயோத்திதாசர்
Tags: , ,

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: