பாவேந்தர் பாரதிதாசன்!

பாவேந்தர் பாரதிதாசன்!

பாவேந்தர் பாரதிதாசன்!

பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 – ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


வாழ்க்கைக் குறிப்பு :

புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.

தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் “எங்கெங்குக் காணினும் சக்தியடா” என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் “கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் ‘புரட்சிக்கவி” என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.

மறைவு :

பாரதிதாசன் 21.4.1964 அன்று காலமானார்.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள் :

  • புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
    போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
  • தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

பாரதிதாசனின் ஆக்கங்கள் :

பாரதிதாசன் தனது எண்ணங்களை கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய வடிவங்களில் வெளிட்டார். அவற்றுள் சில :

  1. அம்மைச்சி (நாடகம்) 
  2. உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு (1948) 
  3. உரிமைக் கொண்டாட்டமா?, குயில் (1948) 
  4. எது பழிப்பு, குயில் (1948) 
  5. கடவுளைக் கண்டீர்!, குயில் (1948) 
  6. கழைக்கூத்தியின் காதல் (நாடகம்) 
  7. கலை மன்றம் (1955) 
  8. கற்புக் காப்பியம், குயில் (1960) 
  9. சத்திமுத்தப் புலவர் (நாடகம்) 
  10. நீலவண்ணன் புறப்பாடு 
  11. பிசிராந்தையார், (நாடகம்) பாரி நிலையம் (1967) 
  12. பெண்கள் விடுதலை 
  13. விடுதலை வேட்கை 
  14. வீட்டுக் கோழியும் – காட்டுக் கோழியும், குயில் புதுவை (1959) 
  15. ரஸ்புடீன் (நாடகம்)
    இவை தவிர திருக்குறளின் பெருமையை விளக்கிப் பாரதிதாசன் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

தலை சிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான ‘பாவேந்தர்’ பாரதிதாசன் (Bharathidasan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :

1. புதுச்சேரியில் (1891) பிறந்தார். இயற்பெயர் கனக சுப்புரத்தினம். திருப்புளிச்சாமியிடம் ஆரம்பக் கல்வி கற்றார். பிரெஞ்சு மொழியும் கற்றார். மகா வித்வான் பு.அ.பெரியசாமி, புலவர் பங்காரு பத்தரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்கள், சித்தாந்த, வேதாந்தப் பாடங்களை கற்றுத் தேர்ந்தார்.

2. கல்வே கல்லூரியில் பயின்றவர், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 10 வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். ஒரு திருமண விழாவில் இவர் பாடிய பாரதியாரின் பாடல் அங்கு வந்திருந்த பாரதியாருக்கு இவரை அறிமுகம் செய்து வைத்தது. அவர் மீது கொண்ட பற்றால், தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.

3. தமிழ் ஆசிரியராக 1909-ல் பணியில் சேர்ந்தார். 37 ஆண்டுகள் பணியாற்றினார். பாரதியார், வவேசு, அரவிந்தர் உள்ளிட்ட பல விடுதலை வீரர்கள் காவலில் இருந்து தப்ப உதவியதோடு, அவர்களுக்கு அடைக்கலமும் அளித்தார்.

4. புதுச்சேரியில் ஒருமுறை சூறாவளிக் காற்றில் சிக்கி 5 கி.மீ. தூரத்துக்கு தூக்கி எறியப்பட்டு, ஒருநாள் முழுவதும் அலைந்து திரிந்து பிறகு வீடு வந்து சேர்ந்தார். இந்த அனுபவத்தை ‘காற்றும் கனகசுப்புரத்தினமும்’ என்ற கட்டுரையாக வடித்தார் பாரதியார். அதை மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்தாராம் அரவிந்தர்.

5. ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி, புதுச்சேரி வந்த போது அவரை போலீஸுக்கு தெரியாமல் கட்டுமரத்தில் ஏற்றி நடுக்கடல் வரை கொண்டு சென்று வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தார். கைத்தறி துணிகளை தெருத் தெருவாக விற்றார். தேச சேவகன், புதுவைக் கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்தபோதினி, சுதேசிமித்திரன், புதுவை முரசு, குயில் உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

6. திரைப்படத் துறையில் 1937-ல் பிரவேசித்தார். கதை, திரைக்கதை, வசனம், பாடல், படத் தயாரிப்பு என அனைத்து களங்களிலும் முத்திரை பதித்தார். தான் எழுதியதில் மற்றவர்கள் திருத்தம் செய்வதை விரும்பமாட்டார்.

7. பாடப் புத்தகங்களில் ‘அ அணில்’ என்று இருந்ததை ‘அ அம்மா’ என்று மாற்றியவர். பல்வேறு புனைப் பெயர்களில் பாடல், கட்டுரை, நாடகம், கவிதை தொகுப்பு, கதைகளை எழுதிவந்தார். ‘இலக்கியக் கோலங்கள்’, ‘இளைஞர் இலக்கியம்’, ‘குடும்ப விளக்கு’, ‘பாண்டியன் பரிசு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘குமரகுருபரர்’ போன்றவை இவரது முக்கியப் படைப்புகள்.

8. நகைச்சுவை உணர்வு மிக்கவர். நன்கு பாடுவார். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார். சிலம்பம், குத்துச்சண்டை, குஸ்தி பயின்றார். வீடு என்று இருந்தால் கோழி, புறா, பசு மூன்றும் இருக்க வேண்டும் என்பார். அவற்றை தானும் வளர்த்து வந்தார்.

9. புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராக 1954-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969-ல் இவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்துக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்தது. 1990-ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கியது.

10. புரட்சிக் கவிஞர், பாவேந்தர் என்று கொண்டாடப்படுபவரும், 20-ம் நூற்றாண்டின் இணையற்ற படைப்பாளிகளில் ஒருவருமான பாரதிதாசன் 1964 ஏப்ரல் 21-ம் தேதி 73-வது வயதில் மறைந்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: