தமிழறிஞர் ஔவை துரைசாமி வரலாறு!

தமிழறிஞர் ஔவை துரைசாமி வரலாறு!

தமிழறிஞர் ஔவை துரைசாமி வரலாறு!

தமிழறிஞர் ஔவை துரைசாமி. தமிழ் மொழி மேலிருந்த பற்றுதலின் காரணமாகத் தான் பார்த்து வந்த உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் பணியில் இருந்து விலகி, அதன்பின் தமிழ் கற்று தமிழறிஞராக உயர்ந்த பெருமைக்குரியவர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஔவையார் குப்பம் என்னும் சிற்றூரில், சுந்தரம் பிள்ளை – சந்திரமதி தம்பதிக்கு மகனாக 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் பிறந்தார். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் திண்டிவனத்திலிருந்த அமெரிக்க ஆர்க்காடு நற்பணி உயர்நிலைப் பள்ளியில், பள்ளியிறுதி வகுப்புவரை பயின்று சிறப்பாகத் தேறினார். பின்பு, வேலூர் ஊரீசு கல்லூரியில் இடைநிலை வகுப்பில் சேர்ந்து பயின்றார். ஆனால் குடும்ப வறுமையினால் கல்வியைத் தொடர வாய்ப்பில்லாமல் போயிற்று. குடும்பத்திற்கு உதவ “உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர்” பணியில் சேர்ந்தார். அப்பணியில் தொடர மனம் இல்லாமல் ஆறே மாதத்தில் அப்பணியிலிருந்து விலகினார்.

உரைவேந்தரின் குடும்பம் தமிழில் ஈடுபாடு உடையக் குடும்பம். தந்தையார் செய்யுள் இயற்றும் ஆற்றல் உடையவர். எனவே உரை வேந்தருக்குத் தமிழில் நல்ல ஈடுபாடு இருந்தது. அ.ஆ. உயர்நிலைப் பள்ளியில் பயின்ற தமிழாசிரியர் சீர்காழி கோவிந்தசாமி ரெட்டியார் அவர்கள் தமிழறிவு ஊட்டியவர். அவர்களிடம் இருந்த சூளாமணி, ஐங்குறுநூற்றுக் கையெழுத்துப் படியை வாங்கி உரைவேந்தர் ஆராயும் திறன்பெற்றிருந்தார்.

பின்பு தமிழை முறையாகப் பயில வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டார். கரந்தைத் தமிழ்ச்சங்கப் பள்ளியில், தமிழ்வேள் உமாமகேசுவரனால் ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். ஆசிரியப்பணி புரிந்து கொண்டே, தமிழ்ப்பாடம் பயின்று 1930 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக “வித்துவான்” தேர்வில் வெற்றி பெற்றார்.

தொடக்கக் காலத்தில் துப்புரவு ஆய்வாளராகவும், பின்னர் கலவை, இராணிப்பேட்டை (காரை) தொடக்கப்பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாறினார். 1929 முதல் 1941 வரை காவேரிப்பாக்கம், செய்யாறு, செங்கம், போளூர் ஆகிய இடங்களில் உயர்நிலைப்பள்ளித் தமிழாரியராகப் பணிபுரிந்தார். தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச்செல்வி, செந்தமிழ் முதலிய இதழ்களில் தமிழ் இலக்கிய, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார். 1942 இல் திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்ந்தார். 1943 முதல் எட்டு ஆண்டுகளுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையில், விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1951 இல் மதுரை தியாகராசர் கல்லூரியில் பேராசிரியராகச் சேர்ந்தார்.

மணிமேகலைக் காப்பியத்திற்குப் புத்துரை எழுதும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திடீரென்று இயற்கை எய்தி விட்டதை அடுத்து, “கரந்தை கவியரசு” வேங்கடாசலம் பிள்ளையின் விருப்பத்திற்கிணங்க, மணிமேகலைக் காப்பியத்தின் இறுதி நான்கு காதைகளுக்கும் விளக்கவுரை எழுதிக் கொடுத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் போது, சைவ சமய இலக்கிய வரலாறு, ஞானாமிர்தம் போன்ற அரிய நூல்களை எழுதினார். அந்நூல்கள் பல்கலைக்கழகத்தின் வெளியீடுகளாக வெளியிடப்பட்டன.

எழுதி வெளியான நூல்கள்

  • சேரமன்னர் வரலாறு
  • திருவோத்தூர் தேவாரத் திருப்பதிகவுரை
  • திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை
  • ஐங்குறுநூறு உரை
  • புறநானூறு உரை (2 பகுதிகள்)
  • பதிற்றுப் பத்து உரை
  • நற்றிணை உரை
  • ஞானாமிர்தம் உரை
  • சிவஞானபோத மூலமும் சிற்றுரையும்
  • சிலப்பதிகாரம் சுருக்கம்
  • மணிமேகலை சுருக்கம்
  • சீவகசிந்தாமணி சுருக்கம்
  • சூளாமணி சுருக்கம்
  • சிலப்பதிகார ஆராய்ச்சி
  • மணிமேகலை ஆராய்ச்சி
  • சீவகசிந்தாமணி ஆராய்ச்சி
  • யசோதரகாவியம் – மூலமும் உரையும்
  • தமிழ் நாவலர் சரிதை – மூலமும் உரையும்
  • சைவ இலக்கிய வரலாறு
  • நந்தா விளக்கு
  • ஔவைத் தமிழ்
  • தமிழ்த்தாமரை
  • பெருந்தகைப் பெண்டிர்
  • மதுரைக்குமரனார்
  • வரலாற்றுக் காட்சிகள்
  • சேர மன்னர் வரலாறு
  • சிவஞானபோதச் செம்பொருள்
  • ஞானவுரை
  • திருவருட்பா- உரை (ஒன்பது தொகுதிகள்)
  • பரணர் – (கரந்தை)
  • தெய்வப்புலவர் திருவள்ளுவர் – (கழகம்)
  • Introduction to the story of Thiruvalluvar
  • தமிழ்ச் செல்வம்

அச்சில் வராத நூல்கள்

  • ஊர்ப்பெயர்-வரலாற்றாராய்ச்சி
  • புதுநெறித் தமிழ் இலக்கணம் (2 பகுதிகள்)
  • மத்த விலாசம் (மொழிபெயர்ப்பு)
  • மருள்நீக்கியார் நாடகம்
  • புது நெறித்தமிழ் இலக்கணம்
  • ஊழ்வினை
  • தமிழ்த் தாமரை
  • ஆர்க்காடு

சிறப்புகள்

  • 1964 ஆம் ஆண்டு மதுரை திருவள்ளுவர் கழகம் “பல்துறை முற்றிய புலவர்” என்ற பாராட்டுப் பத்திரம் வாசித்தளித்துச் சிறப்பித்தது.
  • இராதா தியாகராசனார் தம் ஆசிரியப் பெருந்தகையின் உயர் பண்புகளைப் பாராட்டி “உரைவேந்தர்” எனும் பட்டம் வழங்கி தங்கப் பதக்கம் அளித்தார்.
  • 1980 ஆம் ஆண்டு தமிழக ஆளுநர் பிரபுதாசு பி.பட்வாரி “தமிழ்ப் பேரவைச் செம்மல்” எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
  • தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில், “தமிழ்த் தொண்டு செய்த பெரியார்” எனும் பட்டமும், கேடயமும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: