தந்தத்தில் அணிகலன்; செங்கல் கட்டுமானம்! – பண்டைய தமிழர்களின் தொல்லியல் சான்றுகள்!

தந்தத்தில் அணிகலன்; செங்கல் கட்டுமானம்! – பண்டைய தமிழர்களின் தொல்லியல் சான்றுகள்!

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்துள்ளது குருவம்பட்டி கிராமம். இங்கு, பண்டைய தமிழர்கள் வாழ்ந்த தொல்லியல் சான்றுகள் மற்றும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

குருவம்பட்டி பகுதியில் பல வரலாற்றுச் சின்னங்களைக் காண முடிகிறது. உலக வரலாற்றில் தமிழகத்துக்குத் தனி இடமுண்டு. குறிப்பாக, தமிழகத்தில் கொடுமணல், அழகன்குளம், ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற பகுதிகளில் அகழ்வாய்வு மூலம் கிடைத்துள்ள சான்றுகள், தமிழர்களின் பண்டைய நாகரிகத்தின் தன்மையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

அதைப்போலவே, குருவம்பட்டியின் கிழக்கே பழைமை வாய்ந்த சோழர் கால சிவலிங்கம், சோழர் கால நீர்ப்பாசன அடைவு தூண் மற்றும் கிணறு, ஐயனார் சிலை உள்ளிட்டவை காணப்படுகின்றன. இவை அனைத்தும் மிகவும் பழைமையான தொல்லியல் சான்றுகள்.

தொல்லியல் ஆய்வாளர்கள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில், முற்காலத்தில் பழைமையான தமிழர் நாகரிகம் இருந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமான சான்றுகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய கறுப்பு, சிவப்பு மண் பாண்டங்களின் உடைந்த பாகங்கள் மற்றும் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட பெண்கள் அணிந்த வளையல்கள், சங்கு வளையல்கள், பவளமணி, வெண்ணிறப் பவளம், மக்கள் உடை நெய்வதற்குப் பயன்படுத்திய நூல் கோக்கும் மணிகள் போன்றவையும் கிடைத்துள்ளன.

இந்தச் சான்றுகள் மூலம், இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் நெசவுத் தொழில் செய்து வந்துள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது. இங்கு காணப்படும் இரும்புக் கழிவுகள் மூலம், இப்பகுதியில் முற்காலத்தில் இரும்பு உருக்கு ஆலை இருந்திருக்கலாம் என்பதைக் காட்டும் விதமாக உள்ளது.

இங்கு மண் பானைகள் மற்றும் கிண்டி எனப்படும் நீர் குடுவையின் உடைந்த பாகங்களும் கிடைத்துள்ளன. மேலும், மனித உருவம் புடைப்புச் சிற்பமாகச் செய்யப்பட்ட மண் பாண்டத்தின் சிதைந்த பாகம் கிடைத்துள்ளது. இதன் மூலம், இங்கு வாழ்ந்த மக்கள், மண்பாண்டத் தொழிலை கலைநயத்தோடு செய்யும் தொழில் நுட்பம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் கிடைத்துள்ள ஓடுகள் சிலவற்றில் தமிழ் பிராமி எழுத்துகளும், பானை ஓட்டில் ஓவியக் குறியீடு தராசு உருவமும் வரையப்பட்டுள்ளது. சில பானை ஓடுகள் மிகவும் வழவழப்பாகவும் மெல்லியதாகவும் செய்யப்பட்டுள்ளது. இவை இப்பகுதியில் பரவிக்கிடக்கின்றன.

முற்காலத்தில் மக்கள் நதிக் கரையிலேயே தமது வாழ்விடங்களை அமைத்து வாழ்ந்துள்ளனர். வைகை ஆற்றில் கீழடி உள்ளதுபோல், இந்தக் குருவம்பட்டி காவிரி ஆற்றின் வடகரையில் உள்ளது. நதிக்கரைகளில் நாகரிகங்கள் பெருமளவு வளர்ந்துள்ளதை உறுதி செய்யும் வகையில் தொல்லியல் சான்றுகள் உள்ளன.

இங்கு கிடைத்துள்ள கறுப்பு, சிவப்பு மண்பாண்ட ஓடுகள் அறிக்கையின் வகை ரோமானிய மண்பாண்டங்களுடன் ஒப்பிடக்கூடிய வகையில் இருப்பதால் முற்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் ரோமானியர்களோடு வணிகத் தொடர்பு கொண்டு இருந்திருக்கலாம்.

கிடைத்துள்ள சான்றுகளின்படி இப்பகுதி மக்கள் முற்காலத்தில் நகர நாகரிகமாக வாழ்ந்திருக்கலாம். மிகப்பெரிய அளவில் தொழிற்கூடங்களும் முறையாகக் கட்டமைக்கப்பட்ட வீடுகளும் இருந்திருக்கலாம். இங்குள்ள பள்ளி அருகே பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் பெரிய அளவிலான செங்கல் கட்டுமான அமைப்பு கொண்ட சுவர் அதைத் தெரியப்படுத்துவதாக உள்ளது.

பண்டைய தமிழர்களோடு, கிரேக்கர்களும், ரோமானியர்களும் கடல்வழி வணிகம் செய்து இங்கிருந்து மிளகு, தந்தம் போன்றவற்றை பண்டமாற்றாக வாங்கிச் சென்றதை சங்கநூல்கள் மூலம் தெரியவருகின்றன. திருச்சி மாவட்டத்திலுள்ள உறையூர் சிறந்த ஆடை நெசவுத்தொழில் உற்பத்தி மையமாக இருந்துள்ளதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அந்த வகையில் திருச்சியையொட்டிய புதுக்கோட்டை, கரூர், உறையூர் போன்ற இடங்களில் பண்டைய ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை தமிழர்களின் அயல்நாட்டு வணிகத் தொடர்பை உறுதி செய்வதாக அமைந்துள்ளன. என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: