தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக மேலும் ஐந்து கல்வெட்டுகள் அறிவிக்கப்பட்டிருப்பதை தொல்லியல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். தமிழக அரசானது மதுரை மாவட்டத்தில் முதலைக்குளம், அரிட்டாபட்டி தமிழி கல்வெட்டுகள், சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி தமிழி கல்வெட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டம் தொண்டூர், நெகனூர்பட்டி தமிழி கல்வெட்டுகள் என ஐந்து கல்வெட்டுகளை அரசின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவித்துள்ளது. இதில் மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மட்டுமே 3 கல்வெட்டுகள் இடம்பிடித்துள்ளன. மதுரை மண்டல தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் 16 நினைவு சின்னங்கள் உள்ளன.
மதுரையில் திருமலை நாயக்கர் அரண்மனை, பத்துத்தூண்கள், கோவலன்பொட்டல், வரிச்சியூர் மலையில் உதயகிரீஸ்வரர், அஸ்தகிரீஸ்வரர் கோயில்கள், இங்குள்ள முருகன் கோயில் கல்வெட்டு படுக்கைகள், மேலூரில் அரிட்டாபட்டி, அய்யாப்பட்டி சிவன் கோயில்கள், திருவாதவூர், கருங்காலக்குடி கல்வெட்டுகள், வலையபட்டி திருமலை நாயக்கர் மண்டபம், மீனாட்சிபுரம் ஓவாமலை கல்வெட்டு, கொங்கர் புளியங்குளம் பிராமிக் கல்வெட்டு, ஆனைமலையில் லாடன் கோவில், பிராமிக் கல்வெட்டு, தீர்த்தங்கரர் சிற்பங்கள் என 16 இடங்கள் நினைவு சின்னங்களாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இப்போது மதுரை மண்டலத்தின் நினைவு சின்னங்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது.
பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள இவ்வூரில் குன்றின் சரிவில் உள்ள பாறையில் களப்பிரர் காலத்தைச் சேர்ந்த 3 புதிய கல்வெட்டுகளை 1979ல் மேலப்பனையூர் ஆசிரியர் கரு.ராஜேந்திரன் கண்டுபிடித்தார். மழை, வெயில் போன்றவற்றால் கல்வெட்டு தொடர்ந்து அழிந்து வந்தது. மன்னர் அசோகனின் பாறைக் கல்வெட்டுக்கு இணையான சிறப்பு கொண்ட களப்பிரர் வரலாற்று ஆவணமான பூலாங்குறிச்சி கல்வெட்டுகளை பாதுகாக்க வேண்டும் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திருச்சுழி எம்எல்ஏவாக இருந்த இன்றைய அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம், இக்கல்வெட்டுகளை கண்டுபிடித்த ஆய்வாளர் கரு.ராஜேந்திரன், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் வே.ராஜகுரு, புதுக்கோட்டை தொல்லியல் கழக நிறுவனர் மங்கனூர் மணிகண்டன் ஆகியோர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், தமிழக வரலாற்றின் மிக முக்கிய ஆதாரமான பூலாங்குறிச்சி வட்டெழுத்து கல்வெட்டுகளை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இவர்கள் கூறுகையில், ‘எங்கள் கோரிக்கையை ஏற்று பூலாங்குறிச்சி கல்வெட்டுகளைப் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றனர். மதுரை அரிட்டாபட்டியில் இரு கல்வெட்டுகளை பாதுகாக்கப்பட்டதாக அரசு அறிவித்திருப்பதற்கு, இக்கிராம மக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மாவட்டத்தின் தொல்லியல் ஆர்வலர்களும் அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
மதுரை தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘மதுரையில் மீனாட்சி கோயில் அருகே உள்ள ராணி மங்கம்மாள் அரண்மனை கட்டிடம் உள்ளிட்ட மேலும் பல இடங்களை தொல்லியல் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். இவ்வரிசையில் நரசிங்கம்பட்டியில் நாயக்கர் கால அரிய ஓவியங்கள், சிவகங்கை அருகிலுள்ள திருமலையில் கி.மு. 5ம் நூற்றாண்டு ஓவியங்கள், கி.மு. 2ம் நூற்றாண்டு கல்வெட்டுகள், சமணர்படுகைகள், 9ம் நூற்றாண்டு குடைவரைக் கோயிலில் ஆய்வு நடத்தி நினைவு சின்னங்களாக அறிவித்திட வேண்டும்’ என்றனர்.
நன்றி : தினகரன்