திருப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடியில் மேற்குத்தொடர்ச்சி மலையோரம் பாயும் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கல்லாபுரம். கி.பி. 13-ம் நூற்றாண்டில் கொங்கு மன்னன் விக்கிரமசோழன் பெயரைக் குறிக்கும் வகையில், ‘விக்கிரமசோழநல்லூர்’ என்றும் கல்லாபுரம் அழைக்கப்பட்டுள்ளது. 13-ம் நூற்றாண்டுக்கு முன்பே கல்லாபுரம் என்ற பெயரைக் கொண்ட இக்கிராமம், இன்று வரை அதே இயற்பெயரைக் கொண்டிருப்பது வியப்புக்குரியது. விக்கிரமசோழனின் ஆட்சிக்காலத்தில் ‘விக்கிரமசோழ நல்லூர்’ எனும் சிறப்புப் பெயர் பெற்றபோதும், இன்று வரை அதன் இயற்பெயரை இழக்கவில்லை.
கல்லாபுரத்தை ஒட்டி, 1957-ல் அமராவதி அணை கட்டப்பட்டது. 90 அடி ஆழம், சுமார் 10 கி.மீ. சுற்றளவு, 4 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், கணியூர், கடத்தூர், மடத்துக்குளம், சோழமாதேவி உள்ளிட்ட ராஜவாய்க்கால்கள் (பழைய வாய்க்கால்) மூலமாக நீர் பாசன வசதி நடைபெற்று வருகிறது. அமராவதி பாசனம் மூலமாக, ஆண்டுக்கு 2 முறை நெல் நடவு நடைபெற்றுவரும் கல்லாபுரம் பகுதி எப்போதும் பசுமையாக காணப்படும். இங்கு சுமார் 10 அடி உயரத்தில் தூண்களால் தாங்கியபடி செல்லும் நீண்ட பாலம் போன்ற கட்டுமானம் உள்ளது. ஆனால், அது பாலம் அல்ல, பாசனத்துக்கு நீரை எடுத்துச் செல்லும் வாய்க்கால். தரைமட்டத்தில் இருந்து புவிஈர்ப்பு விசைக்கேற்ப உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. கல்லாபுரத்தில் தரைவழிச் செல்லும் வாய்க்கால், தாழ்வான பகுதியைக் கடந்து செல்வதற்காக இவ்வாறு தரைமட்டத்தில் இருந்து உயரமாகவும், பின்னர் சமதளத்தில் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலின் கீழும், இடது மற்றும் வலது புறமும் கண்களுக்கு எட்டிய தூரம் வரை நெல் வயல்களும், வானுயர்ந்த மலைகளும் தென்படுகின்றன.
இதுகுறித்து திருப்பூர் வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குநர் சு.ரவிக்குமார் கூறும்போது, ‘300 ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியை ஆண்ட நாயக்கர் மன்னர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற வாய்க்கால்கள், புகழ் பெற்ற ரோம் நகரிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. முழுவதும் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆயிரக்கணக்கான கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இடது, வலது கரைகள், வாய்க்காலின் கீழ் பாகம் என அனைத்தும் கற்களைக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், இன்றளவும் நீர் கசிவு இல்லை. பண்டைய தமிழர்களின் கட்டுமானத்துக்கு சான்றாக கல்லாபுரம் கல் வாய்க்கால் உள்ளது’ என்றார்.