பழந்தமிழர்கள், கோவில்கள், அரசர்களின் அரண்மனைகள், கோட்டை கொத்தளங்கள், வீடுகள், வீதிகள், நகர் ஒழுங்கமைப்பு ஆகியவற்றை அமைப்பதில் கலை நுணுக்கமும் தனித்தன்மையும் கொண்டிருந்தனர்.
‘கடலில் மூழ்குவதற்கு முன்பு இருந்த பூம்புகார் நகரம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் லண்டன் மாநகரின் அமைப்போடு ஒத்திருந்தது என்பது ஆய்வாளர் சதாசிவ பண்டாரத்தாரின் கருத்து.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
சுருங்கை, சுரந்துபடை, முன்றில், இடைகழி, அங்கணம், செய்குன்று முதலியவை கட்டடங்கள் குறித்த பழஞ்சொற்கள். சுருங்கை என்பது, நிலத்தடி பாதையைக் குறிக்கும் (சுரங்கப்பாதை).
‘பெருங்கை யானை நிரை இனம் பெயரும்
சுருங்கை வீதி மருங்கிற்போகிக்
கடிமதில் வாயில் காவலின் சிறந்த’
என்னும் சிலப்பதிகாரப் பாடலில், மதுரை மாநகர் நிலத்தடி பாதையைக் கொண்டிருந்தது என்று குறிப்பிடுகிறது. அந்தச் சுருங்கை வீதியில் யானை முதலிய படைகள் நுழைந்து மதிலின் வாயிலைக் கடந்து போகும் எனக் கூறப்பட்டுள்ளது.
உறையூர் அரசனுடைய மாளிகை பெரியதாக இருந்தது என்பதை,
“பிறங்கு நிலை மாடத்து உறந்தையோன்”
(புறம் 69) என்கிறது புறநானூறு.
கோவில்களில் கருவறை, மகா மண்டபம், விமானம், கோபுரம், கொடிமரம் இவையும் பழந்தமிழரின் கட்டடக் கலை ஒழுங்கை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
திண்ணை, உள் வீடு, மாடம், விளக்கு மாடம், மாடப்பிறை உள்ளிட்டவை வீட்டின் அமைப்பைக் குறிப்பிடும் சொற்கள்.
நாளங்காடி (பகலில் இயங்கும் கடைவீதி), அல்லங்காடி (இரவுக் கடைவீதி), அகநகர், புறநகர், பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம், சதுக்கம் போன்ற நகர்ப் பிரிவுகள் பழங்காலத்தில் இருந்துள்ளன. (சிலப்பதிகாரம்)
‘எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
மண்ணகம் ஒரு வழி வகுத்தனர் கொண்டு’
கட்டடக்கலை வல்லுநர் ஆய்ந்து சொல்லிய இலக்கணத்தில் இருந்து வழுவாமல் அரங்கு அமைக்கும் முறை இருந்துள்ளது. அதற்கான மனையடி சாஸ்திர நூலும் இருந்துள்ளது.
தாமரைப் பூவைப்போல வடிவமைக்கப்பட்ட நகர் மதுரை என்று பரிபாடல் கூறுகிறது. தாமரை மலரின் மையப் பகுதியாகக் கோவிலும், பூவின் இதழ்களாகத் தெருக்களும் அமைந்துள்ளன. கோவிலைச் சுற்றி ஆடி வீதி. சித்திரை வீதி, ஆவணிமூல வீதி, மாசி வீதி, வெளி வீதி என இதழ்களின் அடுக்குபோல தெருக்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. இப்பெயர்கள் கோவிலில் திருவிழா நிகழும் நாள், கோள், நட்சத்திரம் முதலியவற்றோடு தொடர்புபடுத்தி அமைக்கப்பட்டுள்ளன.
காஞ்சி நகரம் மயிலின் அமைப்பைக் கொண்டு விளங்கியது எனக் கூறுகிறது, பழைய வெண்பா.
சரி, பெரிய பெரிய கட்டடங்கள், மாளிகைகள் மட்டும்தான் இருந்ததா? குடிசைகளும் இருந்தன. குடிசைக்குப் பெயர் குரம்பை.
‘புல்வேய்க்குரம்பை’ புல் கொண்டு வேயப்பட்ட குரம்பை என்னும் குடிசை வீடுகள் இருந்ததை, சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.