கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே குட்டூர் கிராமத்தில் புதிய கற்கால மற்றும் பெருங்கற்கால தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள், பானை ஓடுகள், குயவர்கள் பானை செய்யவும் மெருகேற்றவும் பயன்படுத்தும் சுடுமண் கட்டி தட்டும் கருவிகள், விலங்கின் எலும்புத்துண்டுகள் மற்றும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள், பருப்பு உடைக்கும் கல் கருவிகள், தானியம் அரைக்கப் பயன்படும் கருவிகள், கவண் கற்கள் ஆகியவை கிடைத்தன.
மேலும் ரசகோட்டப்பானை ஓடுகள், கறுப்பு பானை மூடி, நீண்ட பிடியுடன்கூடிய சிவப்பு பானை ஓடுகள், பலவித அலங்கார வேலைப்பாடு கொண்ட சிவப்பு பானை ஓடுகள் ஆகிய பானை ஓடுகளையும் கண்டுபிடித்தோம்.
விவசாயிகள் நிலத்தை உழுது சீர்ப்படுத்தி செம்மைப்படுத்தும் பணியை மேற்கொள்வதால், பெரும்பான்மையான கருவிகள் சிதைந்த நிலையிலே கிடைக்கப் பெற்றன. பெரும்பான்மையாகக் குயவர்கள் பயன்படுத்தும் தொழில் கருவிகள் கிடைத்திருப்பதால், இவை அனைத்தும் குயவர் சமுதாயத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும்.
மேலும், இரண்டு பண்பாடுகளுக்குரிய தொல்லியல் எச்சங்கள் கிடைத்திருப்பதால் இப்பகுதி மக்கள் புதிய கற்காலத்தில் இருந்து பெருங்கற்காலப் பண்பாட்டிற்கு முன்னேறியவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. அதோடு, இப்பகுதியில் முறையான அகழாய்வுப் பணி மேற்கொண்டால் புதிய கற்காலத்தில் இருந்து சங்ககாலம் வரை தொடர்ச்சியான வாழ்வியலையும், இப்பகுதி மக்கள் வாழ்வியல் ரீதியாக முன்னேற்றம் அடைந்த படிநிலைகளையும் அறியலாம்.