ஐம்பெரும் காப்பியங்களுள் “கம்பராமாயணம்” ஏன் இடம்பெறவில்லை ?

ஐம்பெரும் காப்பியங்களுள் "கம்பராமாயணம்" ஏன் இடம்பெறவில்லை ?

ஐம்பெரும் காப்பியங்களுள் “கம்பராமாயணம்” ஏன் இடம்பெறவில்லை ?

ஐம்பெரும் காப்பியங்களுள் “கம்பராமாயணம்” ஏன் இடம்பெறவில்லை? கால மாறுபாடும் நோக்க வேறுபாடுமே காரணம் ! ஐம்பெருங் காப்பியங்களின் நோக்கம் வேறு, கம்பராமாயணத்தின் நோக்கம் வேறு. இந்த அடிப்படை உண்மையை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இராமாயணம், மகாபாரதம் என்பன இரு பெரும் இதிகாசங்கள். இவற்றில் “ஆதிகாவியம்” எனப்படும் வால்மீகி இராமாயணக் கதைப் போக்கை, அப்படியே பின்பற்றாமல், தமிழ்ப் பண்பாட்டைப் போற்றி மலர்ந்ததே கம்பராமாயணம். இதிகாசம் வேறு, காப்பியம் வேறு என்று தெரிந்து, தெளிதல் வேண்டும்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.

தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரியபுராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவைகள் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன.

சிலப்பதிகாரமும், சீவகசிந்தாமணியும் பலதார மணத்தை ஏற்றுக் கொள்ளும் காப்பியங்கள். ஆனால் கம்பன் காவியமோ, “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற உயரிய பண்பாட்டையும், ஆண்களுக்கும் “கற்பு” என்ற விழுமிய பண்பு உண்டு என்பதையும், புனிதமான மனித நேயமே மனிதனை தெய்வமாக உயர்த்தும் என்ற உயர்ந்த நோக்கத்தையும், உலகமெலாம் ஒரே குடும்பமாக, சகோதர நேயத்துடன் வாழ வேண்டும் என்ற சீரிய நோக்கத்தையும் மையமாகக் கொண்டு எழுந்தது.

மனிதன், மனித நேயத்துடன் செயல்பட்டால், “மனிதன் தெய்வமாகலாம்” என்பதே கம்பன் காவியம் தரும் விழுமிய நோக்கம். சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரட்டைக் காப்பியங்கள், கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தோன்றியவை. எனவே, அவற்றுடன் 9ஆம் நூற்றாண்டில் தோன்றிய கம்பராமாயணத்தை இணைப்பது பொருத்தமானதாக அமையாது. மேலும், காவிய நோக்கிலும், கருப்பொருள் நோக்கிலும் சீவகசிந்தாமணியும், கம்பராமாயணமும் முரண்பாடு மிக்கவை. சிலப்பதிகாரம் சமணக்காப்பியம், மணிமேகலையோ பெளத்தக் காப்பியம். எனவே சமண, பெளத்த காப்பியங்களோடு கம்பராமாயணத்தை ஒப்பிடவே முடியாது. எனவே, கால வேறுபாடு, நோக்க வேறுபாடுள்ள ஐம்பெருங்காப்பியத்துள் இதிகாசமாகிய கம்பராமாயணத்தை ஒப்பிடவே கூடாது. அதனால்தான், ஐம்பெருங் காப்பியங்களுள் கம்பராமாயணம் இடம்பெறவில்லை.

இதிகாசம் வேறு ; காப்பியம் வேறு !

ஐம்பெருங் காப்பியங்கள் என்ற வழக்கை முதன் முதல், கி.பி.14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயிலைநாதரின் நன்னூல் உரையில் காண்கிறோம். “ஐம்பெருங்காப்பியம், எண்பெருந்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்று எழுதுகிறார் மயிலைநாதர். ஐம்பெருங்காப்பியம் என்று மயிலைநாதர் குறிப்பிடுகிறாரே தவிர, எவை ஐம்பெருங்காப்பியங்கள் என்று குறிப்பிடவில்லை. தமிழ்விடு தூது பாடிய கவிஞரும் “கற்றார் வழங்குபஞ்ச காப்பியமும் என்று பாடுகிறாரே தவிர, ஐம்பெருங்காப்பியங்கள் எவை எனக் குறிப்பிடவில்லை. கி.பி.19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கந்தப்ப தேசிகரே, தாம்பாடிய திருத்தணிகை உலாவில்,

“சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான்
கந்தர மணிமே கலைபுனைந்தான் – நந்தா
வளையா பதிதருவான் வாசகனுக் கீந்தான்
திளையாத குண்டல கேசிக்கும்”.

என்று பாடி, ஐம்பெருங்காப்பியங்கள் எவை என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இலக்கிய வரலாற்றையும், வடமொழி இலக்கிய வரலாற்றையும் ஆழமாகக் கற்றால் ஒன்றை அறியலாம். அதாவது, இதிகாசம் வேறு; காப்பியம் வேறு. ஒப்பாய்வின் முன்னோடி பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை, “காவிய காலம்” என்ற நூலில், “இதிகாசம் வேறு, காப்பியம் வேறு” என்பதை நன்கு புலப்படுத்துகிறார். அனேக அறங்களோடு, வீரத்துக்கும் போருக்கும் மட்டும் கூடுதலான முக்கியத்துவம் கொடுத்துப் பாடப்படுவது இதிகாசம். தமிழில் உள்ள கம்பராமாயணம், வடமொழியில் உள்ள மாபெரும் இதிகாசமாகிய வால்மீகி இராமாயணத்தின் வழிநூலாகும். வழிமுறை இதிகாசம் என்றும் இதை அழைப்பர். உலகக் காப்பியங்களையும் இதிகாசங்களையும் நன்கு கற்ற வ.வே.சு.ஐயர், “கம்பராமாயண இரசனை” என்ற தம் நூலில், “கம்பராமாயணத்தின் பெருமை எல்லாம் இவ் யுத்த காண்டத்தில்தான் காணப்படும் என்று குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

கம்பராமாயணத்தில் முதல் 5 காண்டங்களின் பாடல்கள் 6,358; கடைசியாக உள்ள யுத்தகாண்டத்தின் பாடல்கள் 4,310 என்பதை நினைவில் கொண்டால், கம்பனின் இராமாயணம் இதிகாசம் என்பதை உணரலாம். எனவே, இலக்கிய நெறி அல்லது வகைநிலை காரணமாக (வழிமுறை), இதிகாசமாகிய கம்பராமாயணத்தை ஐம்பெருங்காப்பியங்களுள் சேர்க்கவில்லை. இத்தொகுப்பு நெறியை வடமொழி இலக்கிய வரலாற்றோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். வடமொழியிலும் சிறப்பு மிக்க ஐந்து காவியங்களைத் தொகுத்து “பஞ்சகாவியம்” என்றனர்.

இத்தொகுப்பில்,
ஹர்ஷ கவியின் நைடதம்
பாரவியின் கிராதார்சுநீயம்
காளிதாசரின் இரகுவம்சம்
குமாரசம்பவம்
மாககவியின் சிசுபாலவதம்
உள்ளனவே தவிர, வால்மீகி இராமாயணம் இடம் பெறவில்லை.

காரணம், ஆதிகவியின் இராமாயணம், இதிகாசம் என்ற இலக்கியவகையைச் சேர்ந்தது என்பது தான். வடமொழி பஞ்சகாவியத் தொகுப்பை மனதில் கொண்டு, தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியத் தொகுப்பைச் சிந்தித்தால், கம்பராமாயணம், இதிகாசம் என்ற இலக்கிய வகை நிலை என்பதன் காரணமாகவே சேர்க்கப்படவில்லை என்பது புலனாகும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: