விழுப்புரம் மாவட்டத்தில், கி.பி., ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பல்லவர் கால ஜேஷ்டாதேவி சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், உப்பு வேலுார் கிராமத்தில், பூமுடி ஐயனார் கோவில் அருகில், கி.பி., ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஜேஷ்டாதேவி சிற்பத்தை, தொல்லியல் ஆய்வாளர்கள், ப.பூபாலன், கோ. உத்திராடம் ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இந்தச் சிற்பம், நீண்ட இருக்கை மீது, இரு கால்களையும் அகட்டி தொங்கவிட்டு, அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. ஜேஷ்டாதேவியின் இரு கைகள், தொடை மீது வைத்தபடி அமைந்து உள்ளன.
தேவியின் தலையில் வட்டமான மகுடமும், உருண்டையான மாலையும்; காதில் குண்டலங்களும், தோள்வளையும் அலங்கரிக்கின்றன. தேவியின் வலப்புறத்தில், மாந்தி அமர்ந்த கோலத்தில், கால்களைக் குத்திட்டு, இரு கரங்களைத் தொடையின் மீது வைத்த நிலையில் காணப்படுகிறாள்.
மாந்தியின் இடப்புறத்தில், காக்கைக்கொடி காட்டப்பட்டுள்ளது. தேவியின் இடப்புறத்தில் மாட்டுத்தலையும், மனித உடலும் கொண்ட மாந்தனின் உருவம் உள்ளது. இவ்வுருவம், வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்ட நிலையில் உள்ளது.
இது குறித்து, கோ.உத்திராடம் கூறியதாவது: இச்சிற்பம், பல்லவர் காலத்தை சேர்ந்ததாக இருந்தாலும், இவ்வுருவத்தின் அமைப்பைப் பார்க்கும் போது, கிராம பாணியில் செதுக்கப்பட்டுள்ளதாகக் கருதலாம். இப்பகுதியில், ஜேஷ்டாதேவி சிற்பங்கள், முன்னுார், ஓமந்துார், ஓங்கூர், பந்தாடு ஆகிய ஊர்களில் கிடைத்துள்ளன.