8ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையின் பீடம் தா.பேட்டை அருகே கண்டுபிடிப்பு!

8ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையின் பீடம் தா.பேட்டை அருகே கண்டுபிடிப்பு!

8ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையின் பீடம் தா.பேட்டை அருகே கண்டுபிடிப்பு!

முசிறி தாலுகா, தா.பேட்டை அருகே சக்கம்பட்டி கிராமத்தில் மெயின்ரோட்டில் சாலையோரம் கிடந்த 8ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையின் பீடபகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வெட்டு மற்றும் தொல்லியல்துறை ஆய்வாளர் பாபு கூறியதாவது: சமீபத்தில் தா.பேட்டை அருகே செல்லாண்டியம்மன் கோயில் அருகாமையில் கி.பி. 8ம் நூற்றாண்டை சேர்ந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தா.பேட்டை அடுத்த சக்கம்பட்டி கிராமத்தில் சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட இந்த பவுத்த பீடம் 8ம் நூற்றாண்டுக்கு பிற்பட்டதாக இருக்கலாம். இப்பகுதியில் சமணமும், பவுத்தமும் முற்காலத்தில் பரவியுள்ளது இச்சான்றின் மூலம் அறிய முடிகிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருச்சி போன்ற இடங்களில் பவுத்த சமய விகார்கள் இருந்துள்ளன என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இந்த பீடப்பகுதியின் அமைப்பு நீள் சதுர அமைப்புடனும் பீடத்தின் முன்பகுதி, கீழ்பகுதி மூன்று யாளி அமர்ந்த நிலையில் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. பீடத்தின் மையத்தில் சதுர அமைப்பில் துளை காணப்படுகிறது. இது சிலையை பொருத்தும் துளையாக இருக்கலாம். பீடத்தின் அளவிற்கு 4 முதல் 5 அடி உயரமுள்ள சிலை பீடத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது இங்கு சிலை காணப்படவில்லை. இந்த சிலை இப்பகுதியில் கோயில் அல்லது வேறு இடங்களில் மாற்றுப்பெயரோடு வழிபாட்டில் இருக்கலாம்.

சக்கம்பட்டிக்கு சற்று தொலைவில் மங்களம் என்ற கிராமத்தில் உள்ள அரவாயி அம்மன் கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வாளர்களால் புத்தர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.எனவே இப்பகுதியில் பவுத்த சமயம் ஒரு காலத்தில் செல்வாக்கோடு திகழ்ந்துள்ளது தெரிய வருகிறது. மேலும் தா.பேட்டை என்பதன் விரிவாக்கம் தாத்தையங்கார்பேட்டை ஆகும். ஐயன், சாஸ்தா, முனி போன்ற சொற்கள் புத்தரை குறிக்கும். அந்த வகையில் சாத்தன், ஐயன், பேட்டை என்று பிரித்தோமானால் ஐயன் புத்தரது விகாரை குறிப்பதாக கருதலாம்.

பின் இப்பெயர் மறுவி தாத்தையங்கார்பேட்டையாக மாறியிருக்கலாம். இந்த பீடத்தின் அமைப்பில் இலங்கையில் உள்ள பவுத்த விகாரில் உள்ள புத்தர் சிலையின் பீடப்பகுதியையும், மங்களம் புத்தருடைய பீடப்பகுதியையும் ஒத்துள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். அதுபோல சில சமணர் சிலைகளின் பீடமும் யாழிகள் சிற்பமாக வடிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு கிடைத்துள்ள பீடம் பவுத்த சமயத்தை சேர்ந்தது என கூறலாம். இந்த பீடத்திலிருந்த சிலை தற்போது எங்குள்ளது என ஆய்வு செய்து கண்டறிந்து அவற்றை பாதுகாப்பது அவசியமாகும் என்று கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: