சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயிருக்கும் பொட்டனேரி கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் புதிதாக, ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
எழுத்துகளில்தான் காலம் உறைந்துகிடக்கிறது. ஒலி வடிவத்தின் வரிவடிவம் எழுத்துகள். ஒரு மொழியின் அடிப்படைக் கூறும் எழுத்துகள்தாம். தமிழ் மொழியின் எழுத்துகள் காலந்தோறும், சித்திர வடிவம், தமிழி, வட்டெழுத்து என மாறிமாறி தற்போது நாம் பயன்படுத்தும் எழுத்துருக்களாக உருமாறியிருக்கின்றன. இவற்றில் வட்டெழுத்துகள் இடைக்காலத்தைச் சேர்ந்தவை.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு, 8 – ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வாணன் வாரமன் என்பவர் ரிஞ்சிக்குடி, பெரிய கல்லியக்குடி, சிறிய கல்லியக்குடி என்ற மூன்று ஊர்களில் நிலம் கொடுத்த செய்தி கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேற்பகுதி காணப்படாததால் நிலம் யாருக்கு, எதற்காகக் கொடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து கொள்ள முடியவில்லை. கல்வெட்டின் இறுதியில் சக்கரம் போன்ற வட்ட வடிவ கோட்டு உருவம் ஒன்று வரையப்பட்டுள்ளது. ஒரு வேளை இது சுருள் வாளாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
கல்வெட்டின் எழுத்தமைதி, 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்தைப் போல் காணப்படுகிறது. வாணர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் சங்ககாலம் முதலே குறுநில மன்னர்களாக அறியப்படுகிறார்கள். வாணர்களின் நடுகல் கல்வெட்டுகள், தர்மபுரி, கிருஷ்ணகிரி, செங்கம் பகுதிகளில் நிறைய கிடைக்கின்றன. 12 – ம் நூற்றாண்டில் இவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறகழூரைத் தலைநகராகக் கொண்டு வாணகோவரையர்கள் எனும் பெயரில் ஆட்சி செய்துள்ளனர். தற்போது கண்டறியப்பட்ட இக்கல்வெட்டின் மூலம், வாணர் பரம்பரையைச் சேர்ந்த வாணன் வாரமன் என்பவர், 8 – ம் நூற்றாண்டில் மேச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியை ஆட்சி செய்த ஒரு குறுநில மன்னன் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
பொட்டனேரி வரதராஜபெருமாள் கோயிலுக்கு அருகே உள்ள விளை நிலத்தில் ஒரு சமணதீர்த்தங்கரரின் சிலை காணப்படுகிறது. ஏற்கெனவே தமிழகத் தொல்லியல்துறை, இதைப் பதிவு செய்திருந்தாலும் தற்போது பாதுகாப்பு, பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் சமணம் செழித்து இருந்தமைக்கு ஆதாரமாக, ஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோயிலில் சமணத்தைச் சேர்ந்த ஒரு தீர்த்தங்கரர், அம்பிகா யட்சி, வெள்ளைக்கல்லால் ஆன ஒரு தீர்த்தங்கரர் ஆகிய சிற்பங்கள் உள்ளன.
பருத்திப்பள்ளி என்ற ஊரில் கிடைத்த பார்சுவநாதர் தீர்த்தங்கரர் சிற்பம், தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது. அதேபோன்று பொட்டனேரி தீர்த்தங்கரர் சிற்பத்தையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.