திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசுவாமி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இதுவரை கண்டறியப்படாத ஏழாயிரம் ஆண்டுகள் பழைமையான தொல்தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இக்கள ஆய்வுப் பணியை மேற்கொண்ட அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரியின் முதல்வரும் (பொறுப்பு) முதுகலை வரலாற்றியல் மற்றும் ஆராய்ச்சித்துறை உதவிப் பேராசிரியருமான முனைவர். அ.கலைநேசன், வரலாற்றியல் மற்றும் ஆராய்ச்சித்துறை உதவிப் பேராசிரியர் இல.கணபதி முருகன், ஆகியோர் இது பற்றிக் கூறுகையில்,
முருக வழிபாடு எங்கெல்லாம் காணப்படுகிறதோ அவ்விடங்களில் எல்லாம் பெரும்பாலும் தொல் மனிதர்கள் பயன்படுத்திய தொல் பொருட்களும் கிடைப்பது இயல்பே. அந்த வகையில் திருத்தணியும் வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமையை பெற்றுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தின் அதிரம்பாக்கம், பட்டரை பெரும்புதூர் என்று தொல்லியல் முக்கியத்துவம் பெற்ற பண்டைய நகரங்களுக்கு இணையான புகழை திருத்தணியும் பெற்றுள்ளது. தமிழக தொல்லியல் வரலாற்றின் முன்னோடி என்று போற்றப்படும் இராபர்ட் ப்ரூஸ் பூட் தமிழகத்தின் கொற்றலை ஆற்றங்கரையில் கண்டறிந்த பழைய கற்கால கருவிகளே தமிழக வரலாற்றின் இருண்ட பக்கங்களுக்கு ஒளியூட்டியது எனலாம். பல்லாவரம், குடியம் போன்ற இடங்களில் விரிவான அகழ்வாராய்ச்சிகளை நடத்திய பூட், சென்னை மாகாணத்தை நாகரீகத்தின் தொட்டிலாக வர்ணிக்கிறார்.
உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக….. இங்கு அழுத்தவும்
வரலாற்று முற்கால தொல்லியல் ஆய்வின் முன்னோடியாக கருதப்படும் இராபர்ட் ப்ரூஸ் பூட் தமிழகத்தில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வே, இந்தியாவில் நடைபெற்ற முதல் தொல்லியல் ஆய்வாகும். கி.பி 1863-ல் சென்னையருகே கொற்றலையாற்றுப் படுகையில் பெருங்கற்கால கைக்கோடரிகள் உள்ளிட்ட பழம் பொருட்களை கண்டறிந்தார். இக்கருவிகள் ஆக்கத்திற்குரிய தொழில்நுட்பத்தை, பூட் சென்னை தொழில் நுட்பம் (Madrasian Industry) என்றும் பெயரிட்டார். அவரது ஆய்வு தொடங்கிய நிலவியல் வரம்பெல்லைக்குள்தான் திருத்தணி அரசு கலைக்கல்லூரி வளாகமும் வருகிறது.
பசால்ட் (Basalt), டாலரைட் (Dolerite), எபோடோரைட் (Epodorite), நைஸ் (Gneiss), மற்றும் சிஸ்ட் (Chist) ஆகிய கல்வகைகள் தொல்மனிதர்களின் கற்கருவிகள் ஆக்கத்திற்கு மூலப் பொருளாக பயன்படுத்தப்பட்டன. திருத்தணியில் இம்மூலக்கற்கள் அளவிலா அளவில்கொட்டிக் கிடப்பதால் இங்கே தொல்மனிதர்கள் தங்களது குடியிருப்புகளை அமைத்திருக்க முன்னுரிமை கொடுத்திருக்கின்றனர். ஏன், திருத்தணி மலையில் காணப்படும் பாறை வகையே இப்மூலப் பொருட்களால் நிரம்பியதுதான். ஆகவே ஒருபுறம் கொற்றலையாற்று வளமான நீர், மறுபுறம் வாழ்க்கைத் தேவைக்கு தேவையான கற்கருவிகள் என்று தொல்தமிழரின் தேவைகள் இங்கு பூர்த்தியாகியபடியால் செழித்தோங்கிய நாகரீகமாக கொற்றலையாற்று நாகரீகத்தை தொல்குடியினர் இப்பகுதியில் வளர்த்தெடுத்துள்ளனர்.
கல்லூரி வளாகத்திற்குள்ளும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் நுண்கற்கால புதிய கற்கால கருவிகள் தொடர்ச்சியாக அகப்பட்டு வருவதைஉற்று நோக்கி ஆராய்ந்த போது தொல் தமிழரின் இறந்த உடல் புதைக்கப்பட்ட கல் வட்டங்கள் (Cairn Circle) நிரம்பிய ஈமக்காடாக கல்லூரி வளாகம் அமையப்பட்டுள்ளதை அறிய முடிந்தது. இதனை உறுதிப்படுத்தும் வண்ணம் ஆய்வு மாணவர்களைக் கொண்டு மேலும் கள ஆய்வுத் தகவல்களை சேகரித்த போது அரிய செய்திகளை உணர முடிந்தது.
கல்லூரி வளாகத்தின் வாயில் பகுதியிலும், சுற்றுப்புறங்களிலும் 3 மீட்டர் முதல் 13 மீட்டர் வரையிலான 16 கல் வட்டங்கள் முழுமையானதாக கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இன்னும் பல கல் வட்டங்கள் கால வெள்ளத்தில் சிதைந்த நிலையில் ஆங்காங்கே உள்ளன. இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வட்டங்கள் திருப்பெரும்புதூர், திருப்போரூர், நார்த்தாமலை போன்ற இடங்களில் காணப்படுகின்ற ஈமக் கல்வட்டங்களை ஒத்துக் காணப்படுகின்றன.
மாண்டவர் உடல் அடக்கம் செய்யப் பட்ட குழியின் (Pit burial) மீது மண்மேடு அமைக்கும் மரபை பெருங்கற்படைச் சின்னத்தின் எளிய தொடக்கமாக கருதலாம். இத்தகு மேடு கற்களைக் குவித்து அமைக்கப்படுவது கற்குவை (Cairn) எனப்படும். குவித்து வைக்கப்பட்ட மண் அல்லது கற்கள் சிதறாமல் இருக்க சிறிய அல்லது பெரிய கற்கள் மண்மேட்டைச் சுற்றிலும் வட்டமாக பதிக்கப்படும். இதுவே கல்வட்டமாகும் (Cairn Circle). காலப்போக்கில் நடுகல் வழிபாடு இதிலிருந்தே தோற்றம் பெற்றது.இத்தகைய கற்குவைகளைக் கொண்டு கல்லறையின் புறத் தோற்றத்தை கொண்டு கல்லறையின் வகையைத் தீர்மானிக்க முடியாது. ஏனெனில் மண்மேட்டின் உட்புறத்தில் குழி அடக்க முறையோ, கற்பலகைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட கல்லறையோ, தாழி அல்லது பேழை அடக்க முறையோ காணப்படலாம்.
இங்கு கண்டறியப் பட்டுள்ள கல்வட்டங்கள் குழிவீடுகள் (Pit Dewlling) அமைப்பில் இருக்க பெரும் வாய்ப்புள்ளது.அதாவது இதனை முழுமையாக தோண்டிப் பார்க்கும்போது உள்ளே கல்லிலாலான அறைகள், உடலை நீள வாக்கில் கிடத்துகின்ற வகையிலான பலகையமைப்பு அல்லது உடல் எச்சப் பொருட்களுடன் கூடிய முதுமக்கள் தாழிகள் போன்றவை காணப்படவும் வாய்ப்புண்டு.
கல்லூரி வளாகத்தில் எண்ணற்ற அளவிலான குறுணிக்கால (நுண்கற்கால) கருவிகளும் அகப்பட்டு வருகின்றன. பெருங்கற்காலத்திலும், அதன் பின்னர் வந்த நுண்கற்காலத்திலும் காட்டு விலங்குகளை அருகிலிருந்து தாக்குவதற்கு நுண்ணிய கற்கருவிகளை பயன்படுத்தி வந்தனர். வில், அம்பு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இதன் தேவை குறைந்தது. பெருங்கற்காலத்தில் கையில் கிடைத்த கல்லை கருவியாக பயன்படுத்திய தொல்குடியினர் பின்னர் மூலக் கல்லிலிருந்து (Core) தேவையற்ற பகுதிகளை தட்டி நீக்கிவிட்டு பளபளப்பான கல்லாகவும், கூரிய முனை கொண்ட கல்லாகவும் மாற்றிப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதற்காக தொல்குடியினர் மூலகல்லை நெருப்பில் இட்டுச் சுட்டு கற்சம்மட்டியால் தட்டி பல குறுணிக் கற்கருவிகளை உருவாக்கி பயன்படுத்தினர். இத்தகைய கூரிய கற்களைக் கொண்டு முகச்சவரம் செய்யும் அளவுக்கு நுண் கற்களின் தொழில்நுட்பம் வியக்கும் வண்ணம் இருந்தது.
திருத்தணி சுற்று வட்டாரப் பகுதிகளில் புதிய கற்கால கைக்கோடரிகள் மக்களால் இன்றளவும் வழிபடப்பட்டு வருவது கள ஆய்வில் தெரிய வந்தது. புதிய கற்கால கைக்கோடரிகள் என்று இவை சொல்லப் பட்டாலும் உண்மையில் இக்கருவிகள் அவர்களது முன்னோர்களான பெருங்கற்கால மக்கள் பயன்படுத்தியவையாகும். மூதாதையரை வழிபடும் பொருட்டு கைக்கோடரிகளை வணங்கி வருகின்ற வழக்கம் இன்றும் திருத்தணி சுற்று வட்டார மக்களிடம் காணப்படுகிறது.இவ்வாறு எல்லா விதத்திலும் கற்களை பயன்படுத்திய தொல்குடிமக்கள் நீத்தார் சடங்கிலும் கற்களைக் கொண்டே பிணத்தை மூடி அதனைச் சுற்றி கல் பரப்பி வழிபட்டனர்.கல் அழியாப் பொருளாதலால் இறந்தாரின் ஆவியைக் கல்லில் நிலை நிறுத்த இயலும் எனும் நம்பிக்கையும் கற்கள் கொண்டு கல்லறைகள் அமைக்கப்படக் காரணமாகும். பிற்காலங்களில் கட்டுமானக் கோயில்களின் கருவறைகளையும் பெருங்கல்லறை மரபின் தொடர்ச்சியாகவே கருதலாம்.
இத்தொல்லியல் கண்டுபிடிப்பினைப் பற்றி பேராசிரியர்கள் மேலும் தெரிவிக்கையில் இப்பகுதியில்வாழ்ந்த மக்களின் பண்பாடு சிந்து வெளி மக்களின் பண்பாட்டிற்கு முந்தைய தொல்தமிழரின் பண்பாடாகும். ஏற்கனவே இதே பகுதியில்தான் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மண்ணில் புதையுண்ட நிலையில் ஈமப் பேழை தொகுதியும், அதனைத் தொடர்ந்து சிறிய குழந்தையின் உடலைக் கிடத்தும் தொட்டில் பேழையும் எங்களது குழுவால் கண்டறியப்பட்டு தொல்லியல் துறை வாயிலாக அவற்றின் பழைமையும் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இத்தகைய தொல் தமிழரின் கல் வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அரசு கலைக்கல்லூரி வளாகம் முழுவதுமே, வரலாற்றுப் பொக்கிஷம் நிரம்பியதாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
கல்லூரி வளாகத்தில் தொல் தமிழர்களின் குழி அடக்க முறை, தாழி அடக்க முறை என்ற இரண்டுமே உள்ளதை ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. சுருங்கக் கூறின் பெருங்கற்காலம், நுண் கற்காலம் அதனைத் தொடர்ந்து எழுந்த புதியகற்காலம் என இங்கு வாழ்ந்த தொல் தமிழர் பயன்படுத்திய பொருட்கள் கல்லூரி வளாகத்தில் கிடைப்பதைக் கொண்டு இங்கு வசித்துவந்த பூர்வீக மக்களுக்கு தொடர்ச்சியான வரலாறு இருப்பதை அறிய முடிகிறது.
பெருங்கற்காலத்திலும், நுண்கற்காலத்திலும் கல்லூரி அமைந்திருக்கும் பகுதி கொற்றலையாற்று சமவெளியில் அமைந்திட்ட, தொல் தமிழரின் பெருங்குடியிருப்பாக இருந்திருத்தலை ஐயமின்றி உணரமுடிகிறது. குடியம், அதிரம்பாக்கம் போன்றவிடங்களில் சம காலத்தில் காணப்பட்ட தொல் மக்களுடன் இவர்களும் நெருங்கிய தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்பதை எங்களது ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன.“ இத்தகைய கொற்றலையாற்று நாகரீகத்தை, சிறப்பை வெளிக்கொணரும் நோக்கில் எங்களது வருங்கால ஆய்வுகள் இருக்கும் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்”என்று பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
- தினமணி