காவேரிப்பட்டணம் அருகே 400 ஆண்டு பழமையான சுடுமண் விநாயகர் சிற்பம்: வரலாற்று குழுவினர் ஆய்வு

காவேரிப்பட்டணம் அருகே 400 ஆண்டுகள் பழமை வாயந்த சுடுமண் விநாயகர் சிற்பத்தை வரலாற்று ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், காவேரிப்பட்டணம் அருகே கீழ்பையூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில், கோவிந்தசாமி என்பவர் வீட்டில் சுடுமண் விநாயகர் சிற்பம் இருப்பதைக் கண்டறிந்தனர்.

இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இந்த சுடுமண் விநாயகர் சிற்பம் 400 ஆண்டு பழமையானது. இரண்டு அங்குல உயரம் உள்ள இந்த விநாயகர், இரண்டு கைகளை மட்டுமே கொண்டுள்ளார். தலையின் உச்சியில் குடை செறுகுவதற்கான துளையும் உள்ளது. துதிக்கை வலம்புரியாக உள்ளது. குழந்தை போல் அமர்ந்துள்ளார். அடிப்பகுதி குழிவாக உள்ளது. விநாயகர் சிற்பங்கள் பொதுவாக கல் அல்லது உலோகத்திலேயே அதிகம் காணப்படும். சுடுமண் சிற்பம் என்பது அரிதான ஒன்றாகும்.

மாவட்டத்தில் பல இடங்களில் சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன. 400 ஆண்டு பழமையான இந்த சுடுமண் விநாயகர் சிற்பம் இம்மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, வரலாற்றுக்குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், ஆசிரியர் ரவி, தொல்லியல் ஆய்வாளர் சுகவனம் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

நன்றி : தினகரன்

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: