சிவகங்கை அருகே 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கை அருகே 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கை அருகே கோவானூர் கண்மாயில் 18-ம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டை கொல்லங்குடியை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனரும், தொல்லியல் ஆய்வாளருமான காளிராசா கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- சிவகங்கை ஒன்றியம் கோவானூரில் வசிக்கும் ஆசிரியர் அழகுபாண்டி அளித்த தகவலின் பேரில், கோவானூர் பெரிய கண்மாய் எனப்படும் மேலக்கோவானூர் கண்மாயில் அப்போதைய மக்களால் அளவைக்கல் அல்லது குத்துக்கல் என்றழைக்கப்பட்ட இரட்டைத்தூண் குமிழிமடை காணப்பட்டது. இந்த தூண்களின் உள்பகுதியில் கல்வெட்டு எழுத்து உள்ளது.

கோவானூரில் உள்ள குமிழி மடை கண்மாயின் பள்ளமான நடுப்பகுதியில் இந்த தூண் உள்ளதால், இது குமிழி மடைத்தூண் எனப்படுகிறது. தூணை ஆய்வு செய்த போது, சுண்ணாம்பு செங்கல் காரைக்கட்டு, அரை வட்ட வடிவில் மடைத்தூணிலிருந்து கரையை நோக்கி செல்கிறது. மடைத்தூண் 9 அல்லது 10 அடி உயரமுள்ள 2 தூணிற்கும் இடைப்பட்ட படுக்கைக்கற்கள் உடைந்து கிடக்கின்றன.

பொதுவாக மன்னர்கள் ஆண்ட காலத்தில் மக்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றித்தருவதை முதன்மையான பணியாக கருதியுள்ளனர். அதிலும் வானம் பார்த்த பூமியாக இருந்த இந்த பகுதிக்கு மழை பெய்யும் போது மழைநீரை கண்மாய், ஏரி, குளங்கள் ஆகியவற்றில் தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.

சோழ பாண்டிய மன்னர்கள் காலந்தொட்டு குமிழிமடை அமைப்பு ஏரி, குளங்கள், கண்மாய்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீரையும் வண்டலையும் தனித்தனியே வெளியேற்றுகிற வகையில் இவை அமைந்துள்ளன. ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதிகள் அவர்களின்ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் கண்மாய்கள் பலவற்றை அமைத்ததோடு, சோழர்கள், பாண்டியர்கள் போல மடைத்தூணையும் அமைத்திருந்தனர்.

அந்த மடைத்தூண் கரையோரங்களில் அமைக்கப்பட்டன. ஆனால் கோவானூரில் உள்ள குமிழிமடை கண்மாயின் பள்ளமான நடுப்பகுதியில் இந்த மடைத்தூண் காணப்படுகிறது. பொதுவாக மடைத்தூணின் மேற்பகுதி அரைவட்ட வடிவில் காணப்படும். ஆனால் இந்த தூணின் வெளிப்புறத்தில் முகம் போன்ற அழகிய வடிவமைப்பு 2 தூண்களிலும் காணப்படுவதுடன், அதில் கல்வெட்டும் உள்ளது.

கிழக்கு பகுதியில் உள்ள தூணின் உள்பகுதியில் ‘சகாத்தம் 1630 மேல் செல்லா நின்ற விரோதி ஆண்டு வைகாசி மாதம் 12-ந் தேதி ரகுனாத முத்து வீரத்தேவராகிய பூவண்ணாத தேவர் கட்டி வச்ச ரகுனா’ என்றும், மேற்கு பகுதியில் உள்ள தூணின் உள்பகுதியில் பழவன மடை காளிசுரம் பிள்ளை மணியாச்சில் நட்ட மடை தூண் என்றும் கல்வெட்டாக எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. 2-வது தூணில் உள்ள எழுத்துக்கள் மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>