தலைவாசல் அருகே ஆறகளூர் வெளிப்பாளையம் பகுதியில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதுசேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆறகளூரில் சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வுக்குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வெளிப்பாளையம் அருகே விளை நிலம் ஒன்றில் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ஆய்வு செய்தபோது அந்த கல்வெட்டின் முன்பக்கம் 16 வரிகளும், பின்பக்கம் 23 வரிகளும், பக்கவாட்டில் 9 வரிகளும் கல்லின் மூன்று பக்கங்களிலும் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. 17ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டானது ஸ்வஸ்திஸ்ரீ மகா மண்டலேசுவரர் என துவங்குகிறது. ஆறகளூரை மலாடாகிய ஜனநாத வளநாட்டு ஆற்றூர் கூற்றத்து ஆறகளூர் என இதுவரை கண்டறியப்பட்ட எல்லா கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன.
ஆனால், இந்த கல்வெட்டில் மலாடாகிய ஜனநாத வளநாட்டு மகதை மண்டலத்து நரையூர் கூற்றத்து தென்கரை சீர்மையான ஆறகளூர் என குறிப்பிடுகிறது. சோழர்கள், வாணகோவரையர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசு நாயக்கர்கள் கல்வெட்டுகள் மட்டுமே இதுவரை இப்பகுதியில் கிடைத்துள்ள நிலையில் வாண்டையார்களின் கல்வெட்டு தற்போதுதான் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வாண்டையார்கள் நாயக்க மன்னர்களின் கீழ் அதிகாரிகளாக பணியாற்றியுள்ளனர். குமாரமுத்து கிருஷ்ணப்ப வாண்டையார் ஆறகளூர் திருகாமீசுரமுடைய தம்பினார் கோயிலுக்கு குமாரபாளையம் என்ற ஊரை தானமாக கொடுத்துள்ளார். இந்த தானத்தையும் கட்டளையையும் மீறுபவர்கள் ஒன்றுமில்லாமல் போவார்கள் என கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் அருகே ஒரு நவகண்ட சிற்பமும் காணப்படுகிறது. போரின் போது தன் நாடு வெற்றி பெற தன் உடலின் ஒன்பது பாகங்களை அரிந்து தன்னைதானே பலி கொடுத்துக் கொண்ட வீரனுக்காக வைக்கப்பட்டுள்ள நவகண்ட சிற்பம் இதுவாகும்.
இந்த வயல்வெளியில் பானை ஓடுகள் காணப்படுகின்றன. எனவே, இந்த இடம் முன்பு மக்கள் வாழ்விடப்பகுதியாக இருந்தது உறுதியாகிறது. இந்த பகுதியில் மேலும் ஆய்வுகள் மேற்கொண்டால் பல வரலாற்று சான்று கிடைக்கும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.