தா.பேட்டை ஒன்றியம் பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்து தமிழ் கல்வெட்டுகளை படித்து, படி எடுத்துள்ளனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
தா.பேட்டை அருகே பாப்பாபட்டி கிராமத்தில் பலகைகள் சிற்பங்களில் ஒன்று படம் எடுத்தவாறு நெளியும் பாம்பை காட்சிப் படுத்துவதாகவும் மற்றொன்று இரண்டு பாம்புகளின் பிணைப்பை காட்டுவதாகவும் உள்ளது. பாம்புகளின் உடல் பிணைப்பால் உருவாகியிருக்கும் இரு வளையங்களில் மேலே லிங்கத் திருமேனியும் கீழ் வளையத்தில் மலர் பதக்கத்தையும் சிற்பி செதுக்கி உள்ளார். சதுரமான ஆவுடையார் மீது உருளை பானம் கொண்டு விளங்கும் லிங்கத் திருமேனியில் மலர்ச்சரம் சூட்டப்பட்டுள்ளது. வளையத்தை முழுவதுமாய் நிறைத்துள்ள மலர் பதக்கம் நன்கு விரிந்த இதழ்களுடன் காட்சி தருகிறது. இதை உருவாக்கியவர் அய்யண்ணன் என்பதை சிற்பத்தின் கீழே உள்ள கல்வெட்டுப் பொறிப்பு தெளிவாக்குகிறது. பரப்பின் மேற்பகுதியில் இரண்டு பாதங்கள் செதுக்கப்பட்ட நிலையில் உள்ள பெரும் பாறை ஒன்றின் கீழ் பகுதியை நன்கு செதுக்கி தளத்தை சமன்படுத்தி 14 வரிகள் உள்ள தமிழ் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. சமப்படுத்தபட்டுள்ள தளத்தில் மழைநீர் தேங்காதிருக்க நீர்வடி வழி ஒன்றும் பாறை விளிம்பில் செதுக்கப்பட்டுள்ளது. 14 வரிகளில் ஒருவரி மட்டுமே சற்று நீளமாக அமைந்துள்ளது. விளம்பி ஆண்டு தைத்திங்கள் 14ம் நாள் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு அய்யண்ணன் என்பாரின் தலைமையில் உள்ள வேங்கடேசுவர சுவாமி திருமுன்னுக்கு படி மண்டபம் கட்டியதை அறிய முடிகிறது. பெருமாளின் சேவையிலே தாம் எப்போதும் இருப்பதாகத் தெரிவிக்கும் அய்யண்ணன்படி மண்டபத்தையும், கல்வெட்டையும், காப்பாற்றுவார் தலைமலை இறைவனான மலைராயன் அருளால் பிள்ளை பேற்றுடன் சிறக்க வாழ்வார் என்று வாழ்த்தியுள்ளார்.
இக்கல்வெட்டு குறிப்பிடும் தலைமலை பாப்பாபட்டியில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது. சஞ்சீவிராய பெருமாள் கோயிலாக தற்போது அறியப்படும் இக்கோயில் இம்மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இவ்வழியில் தான் அய்யண்ணன் கட்டியதாக கூறும்படி மண்டபம் உள்ளது. பொதுவாக கட்டமைப்புகள் அமையும் இடத்தில்தான் அவற்றை கட்டியது பற்றிய செய்தி கல்வெட்டாக வெட்டப்படும். ஆனால் இங்கு கட்டடம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூரின் புறப்பகுதியில் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. எனவே படி மண்டபத்தை உருவாக்கிய அய்யண்ணன் பாப்பாபட்டி கிராமத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என கருத செய்கிறது. இக்கல்வெட்டின் அமைப்பை கொண்டு 17ம் நூற்றாண்டாக இருக்கலாம்.