வாணியம்பாடி அருகே 15-ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

வாணியம்பாடி அருகே 15-ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வடசேரி கிராமத்தில் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு உடன்கட்டை நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சதுரவடிவில், படித்துறைகள் நிரம்பிய சித்திரக்குளம் ஒன்று வடசேரியில் உள்ளது. குளத்தின் நடுவே கிணறு ஒன்றும் இருக்கிறது. தற்போது நீரின்றி வறண்டு, பாதுகாப்பின்றி காட்சித் தரும் குளம் கி.பி 15-ம் நூற்றாண்டு நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

தமிழர்களின் சிற்பக் கலையை எடுத்துரைக்கும் விதத்தில் அரசர்களின் தோற்றம், ஆண் பெண் காதல், நீண்ட பாம்பின் வடிவம், ஆமை, மீன் உருவங்கள் என்று ஏராளமான சித்திரங்களைத் தாங்கியவாறு இந்தக் குளம் திகழ்கிறது. குளத்தின் மேற்பகுதியில் உள்ள கோயிலுக்கு அருகே நாயக்கர் காலத்தைச் சேர்ந்த இரண்டு உடன்கட்டை நடுகற்களும் உடைந்த நிலையில் ஒரு நடுகல்லும் காணப்படுகின்றன.

இரண்டு நடுகற்களும் அழகான பெரிய பலகைக் கல்லில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. வீரன் ஒருவன் வலது கையில் வாள் ஒன்றினை ஏந்திய நிலையிலும் இடது கையில் குறுவாள் ஒன்றைத் தாங்கியும் நிற்கிறான். அவன் அருகில் வீரன் இறந்ததற்காகத் தானும் உடன்கட்டை ஏறி உயிர் விட்டதற்கான அடையாளத்தோடு பெண் ஒருத்தி இடது கையில் தாமரை மொட்டு போன்ற குறியீட்டையும் வலது கையில் கள்குடம் ஒன்றைத் தாங்கியும் நிற்கிறாள்.

இரண்டாவது நடுகல்லும் இதே போன்ற உடன்கட்டை ஏறுதலைக் குறிக்கும் நடுகல்தான். இவ்விரு வீரர்களும் படைத் தலைவர்களாக இருந்திருக்க வேண்டும். இவ்வூரில் நடைபெற்ற போரின்போது வீரமரணம் அடைந்து, அவரின் மனைவியும் உயிர்விட்ட செய்தியை இந்த நடுகற்கள் விளக்குகின்றன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: