வந்தவாசி அருகே தேசூரில், 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூரில், பாழடைந்த நிலையில் உள்ள ஒரு மசூதி போன்ற கட்டடமும், அதன் அருகில் ஐந்து நடுகற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்தவை. இதில், தமிழ் மொழியில் இரு வரியில் எழுதப்பட்டுள்ளன. ‘சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக் கிழார்’ என்றும், மற்றொன்றில் ‘சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக் கீழார் மகன் சீலன்’ என்றும் குறிப்பிட்டுள்ளன. இதில், வீரனின் கையில் கத்தியும் கேடயமும் வைத்திருப்பது போன்ற அமைப்பில் நான்கு அடி உயரத்தில் அமைந்துள்ளது. சீயமங்கலத்தில் பாணரைசரு ஆண்ட காலத்தில், கொற்றம்பாக் கிழார் அவ்வூரை தாக்கியிருக்க வேண்டும்.
இவர்களுக்கிடையே, மாடுபிடி மோதலோ அல்லது ஊர்களுக்கிடையே மோதலோ ஏற்பட்ட பூசலில், கொற்றம்பாக்கிழாரும் அவருடைய மகன் சீலனும் இறந்துவிட, அவர்கள் நினைவாக இந்நடுகற்களை வைத்துள்ளது தெரியவந்தது. சீயமங்கலத்தில், பல்லவர் கால, குடைவரை கோவில் உள்ளது. இவை தேசூருக்கு அருகில், 2 கி.மீ., தூரத்தில் உள்ளது. இவ்வூரில் கிடைக்கப்பெற்ற இந்த நடுகற்களில் உள்ள, கல்வெட்டுகள் மூலம், ஊரில் நடந்த பூசலில் தந்தையும் அவருடைய மகனும் இறந்ததின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல்லாகும். என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.