வந்தவாசியை அடுத்த தேசூரில் கோட்டைப் பகுதியில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், முனைவர் சுதாகர் ஆகியோர் அண்மையில் அங்கு ஆய்வு செய்தனர்.
அப்போது, அப்பகுதியில் பாழடைந்த நிலையில் மசூதி போன்ற ஒரு கட்டடமும், அதனருகில் 5 நடுகற்களும் இருப்பது கண்டறியப்பட்டன.
கண்டறியப்பட்ட 5 நடுகற்களில் 2 நடுகற்களில் மட்டும் 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் 2 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு நடுகல்லில் சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக்கிழார் என்றும், மற்றொரு நடுகல்லில் சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக்கிழார் மகன் சீலன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
வீரனின் கையில் கத்தியும் கேடயமும் வைத்திருப்பது போன்ற அமைப்பில் சுமார் 4 அடி உயரத்தில் இந்த நடுகற்கள் உள்ளன. இதனருகில் காலத்தால் பிற்பட்ட மற்ற 3 நடுகற்களும் உள்ளன.
சீயமங்கலத்தில் பாணரைசர் ஆண்ட காலத்தில் கொற்றம்பாக்கிழார் அந்த ஊரை எறிந்திருக்க (தாக்கியிருக்க) வேண்டும். இவர்களுக்கிடையே மாடுபிடி மோதலோ அல்லது ஊர்களுக்கிடையேயான மோதலோ ஏற்பட்டிருக்கலாம். அவ்வாறு ஏற்பட்ட மோதலில் மேற்குறிப்பட்ட கொற்றம்பாக்கிழாரும், அவருடை மகன் சீலனும் இறந்துவிட, அவர்களது நினைவாக இந்த நடுகற்களை வைத்துள்ளனர்.
ஏற்கெனவே இந்தப் பகுதியில் சீயமங்கலத்து பாணரைசர் என்ற வாசகத்துடன் ஒரு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த நடுகற்களிலும் சீயமங்கலம் என வருவதால், இந்தப் பகுதி, பாணரைசர்கள் ஆண்ட பாணாடாக இருக்க வேண்டும். இது வடமொழியில் பாணராட்டிரம் என்று அழைக்கப்பட்டது. இந்த நாடு கடலூர் வரை பரவியிருந்தது என்று கருதலாம்.