செஞ்சி அருகே, பென்னகர் கிராமத்தில் 12–ம் நூற்றாண்டை சேர்ந்த வீரப் பெண் நடுகல் கண்டுபிடிப்பு!

செஞ்சி அருகே, பென்னகர் கிராமத்தில் 12–ம் நூற்றாண்டை சேர்ந்த வீரப் பெண் நடுகல் கண்டுபிடிப்பு!

செஞ்சி அருகே, பென்னகர் கிராமத்தில் 12–ம் நூற்றாண்டை சேர்ந்த வீரப் பெண் நடுகல் கண்டுபிடிப்பு!

செஞ்சி அருகே பென்னகர் கிராமத்தில் வீரப் பெண் நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் பென்னகர் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் கள ஆய்வில் ஈடுபட்டபோது வீர நடுகல் ஒன்றை கண்டுபிடித்தனர்.

150 செ.மீ. உயரமும் 64 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு பலகைக் கல்லில் பெண் வீராங்கணை ஒருவர் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளார்.
பெண்களுக்கே உரித்தான நளினமான உடல்வாகுடன் கூடிய அச்சிற்பம் திரிபங்க நிலையில் நின்றவாறு தன் இடது காலை முன்புறம் நோக்கி வைத்தும் தனது இடது கையில் வில் ஒன்றை முன்னோக்கிப் பிடித்தவாறும் தனது வலது கையால் வில்லின் நானில் அம்பு ஒன்றை ஏற்றி எதிரியை குறி வைத்து எய்த தயாராய் உள்ள நிலையில் செதுக்கப் பெற்றுள்ளார். வீர மங்கையின் தலை முடி அழகிய முறையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காதுகளில் காதணி அலங்காரம் செய்கிறது. இடை ஆடை கால்கள் வரை பரவி அணி செய்கிறது. கீழே கால்களை பாத சரம் அலங்கரிக்கிறது.
கால் பகுதியில் நாய் காணப்படவில்லை என்பதால் இவ்வீர மங்கை காவல் வீராங்கனை இல்லை என்றும் எதிரிகளை எதிர்த்துப் போரிடுகிறார் என்றும் அறிய முடிகிறது. வில்லேந்தி போரிடுவதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டான இவ்வீரப் பெண்ணின் நடுகல் போன்றவை நமக்கு மிகவும் அரிதாகவே கிடைக்கிறது. இவ்வீர நடுகல்லை ஆய்வுக்கு உட்படுத்துகையில் இது 11 அல்லது 12–ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

பென்னகர் கிராம மக்கள் இந்த வீரப் பெண்ணின் நடுகல்லை அல்லி கல் என்று பெயர் வைத்து அழைக்கின்றனர். அருகில் ஒரு பெரிய குளம் வெட்டி அதற்கு அல்லிக் குளம் எனப் பெயர் வைத்துள்ளனர். இந்தப் வீரப் பெண்ணின் நினைவாகவே இந்த கிராமத்திற்கு பென்னகர் என பெயர் வைத்திருக்கக்கூடும் என நினைக்கத் தோன்றுகிறது. வீரப் பெண் நடுகல் உள்ள பாதை வழியாக செல்வோர் இன்றும் கைகூப்பி வணங்கி மரியாதை செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

வேந்தனுடைய ஆட்சிப் பரப்பில் அடங்கிய நிலம் ஊர், நாடு, கோட்டம், மண்டலம் என பிரிக்கப்பட்டு முறையே கிழார்கள், வேள், சிற்றரசர், மன்னர் அல்லது மாமன்னர் என்போரால் ஆளப்பட்டனர். இவர்கள் தத்தம் நிலைக்குத் தக்கவாறு தம் படைக்கு ஆள் சேர்த்து பயிற்சி அளித்தும் படையை ஒழுங்கமைத்தும் பேணியும் வரவேண்டும் என்பது பொறுப்பு. நிலக்கட்டுப்பாடு ஆதிக்கமே பெரும்பாலும் போருக்கு வழிகோலின. நாடுபிடிச் சண்டைக்கு ஆநிரைப் போர் ஓர் தொடக்கச் சடங்காக வழி வழி மரபாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. மண்ணிற்காக இடும் இப்போர்களில் வீர மரணமடைந்த மறவர்களை சிறப்பித்தும் தெய்வம் என தொழவும் அது பொருட்டு மாண்ட வீரரின் உறவினர்களால் அல்லது ஆண்டைகளால் அவர் நினைவில் நிறுத்தப்பட்டவையே நினைவுக்கற்கள் அல்லது நடுகற்கள் ஆகும். சமய எழுச்சி காரணமாக தமிழகத்தில் சோழர் ஆட்சியில் நடுகல் வழக்கம் குன்றிவிட்டது. ஆனால் அடித்தட்டு மக்களிடம் நடுகல் ஒரு வழிபாடாக இன்றும் நிலவி வருகின்றது. தமிழ்நாட்டில் கிடைத்த பெரும்பாலான நடுகற்கள் பல்லவர் காலத்தவை. இது சங்க கால நடுகல் மரபின் இடையறா தொடர்ச்சியின் விளைவே எனலாம் என ஆய்வாளர்கள் விளக்கி கூறினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: