ஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஜவ்வாது மலையில் குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் க.மோகன்காந்தி, மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசியர் ரே.கோவிந்தராஜ், காணிநிலம் முனிசாமி உள்ளிட்டோர் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில், புதூர் நாட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் மலைப்பகுதியில் உள்ள ஊர் சேம்பரை என்னும் மலை ஊர். ஜவ்வாது மலையிலுள்ள மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்று சேம்பரை. இம்மலை ஊரில் ஊரின் நடுவிலுள்ள கோயிலுக்கு வெளியே 5 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்ட பெரிய கல்வெட்டு ஒன்றை தெய்வமாக இந்த ஊர் மக்கள் வணங்குகின்றனர். இக்கல்வெட்டு தெய்வ சக்தி உடையதாக மக்கள் நம்புகின்றனர். இக்கல்வெட்டைப் படியெடுத்து படித்தபோது, பல வரலாற்றுச் செய்திகள் தெரிய வருகின்றன.

இப்பெரிய பலகைக் கல்லில் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. கல்வெட்டு வாசகம் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.

ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்து
ங்க சோழ தேவற்கு யா
ண்டு 49 ஆவது ஜயங்
கொண்ட சோழ மண்டல
த்து பங்கள நாட்டு தெற்கில்
வகை மேல் வேழ நாட்டு
நவிரமலை புனா நாடுடையன்
உடையான் மாதன் மகனான
தனாந வீர சோழ நவிரமலை
. . . ஆ சிவறனை
யா .. அண்ணாமலை
ட்டு கா . . றும் மே வரு வேண
ழுன் தாராவிட் டநன் – என்று கல்வெட்டு முடிவடைகிறது.

சோழ வம்சத்தின் மிக முக்கியமான அரசர்களுள் முதலாம் குலோத்துங்கனும் ஒருவர். இவர் ராஜேந்திர சோழனின் மகள் வயிற்றுப் பேரன் ஆவார். சோழ மன்னன் ராஜேந்திரனின் மகளுக்கும் மேலை சாளுக்கிய மன்னனுக்கும் மகனாகப் பிறந்தவர் குலோத்துங்கன். வீரராஜேந்திரன் போன்றோருக்குப் பிறகு தமிழகத்தை ஆட்சி புரிந்தவர். இவர் சாளுக்கிய இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அரசியலில் இன ரீதியாக ஏகப்பட்ட எதிர்ப்புகள் இருந்தன. இவருடைய காலம் கி.பி. 1070-இல் இருந்து கி.பி. 1,120 வரையிலான கால கட்டமாகும். இந்தக் கல்வெட்டு இம்மன்னனின் 49-ஆவது ஆட்சியாண்டு என்று கூறுவதால் 1,119- ஆம் ஆண்டு வெட்டப்பட்ட கல்வெட்டு என அறியலாம். இம்மன்னன் தனது ஆட்சிக் காலத்தில் சுங்க வரியைத் தவிர்த்தார். எனவே இவர் சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கப்படுகிறார்.

மேலும், இக்கல்வெட்டு, ஜயங்கொண்ட சோழ மண்டலத்தில் இருந்த பங்கள நாட்டுத் தெற்கில் வகை மேல் வேழ நாட்டு நவிரமலை என்று நாட்டுப் பிரிப்பு முறையை அழகாக எடுத்துரைக்கிறது.

சோழ மண்டலம் என்பது பெரும் நிலப்பரப்பையும், அதில் அமைந்திருந்த பங்கள நாடு என்பது வேலூர், போளூர், செங்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். வடக்கு பங்கள நாடு என்பது வேலூர் பகுதியையும் நடு பங்கள நாடு என்பது போளூர் பகுதியையும் தென் பங்கள நாடு என்பது செங்கம், ஜவ்வாதுமலைப் பகுதியையும் குறித்திருக்கிறது.

அதிலும், குறிப்பாக மேல் வேழ நாட்டு நவிரமலை என்னும் வாசகம் செங்கத்துக்கு மேற்கில் இருக்கும் வேழ நாட்டு நவிரமலை, அதாவது வேழ நாடு என்றால் யானைகள் கூட்டம் மிகுந்த நவிரமலை என்று பொருள். சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான மலைபடுகடாம் நவிரமலை, நன்னன் சேய் நன்னனின் மலை எனக் கூறுகிறது. எனவே இன்றைய ஜவ்வாது மலைக்கே சங்க காலத்தில் நவிரமலை என்று பெயர் இருந்தது என்பதை இக்கல்வெட்டு உறுதிபட எடுத்துரைக்கிறது.

அதிலும் குறிப்பாக இன்றைக்கு வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட புதூர் நாடு, புங்கம் பட்டு நாடு, நெல்லி வாசல் நாடுகள் அமைந்துள்ள ஜவ்வாதுமலைக்கே நவிரமலை என்று பெயர் இருந்ததை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. இதுவரை நவிரமலை என்பது போளூருக்கு அருகேயுள்ள பருவதமலை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் ஜவ்வாதுமலையே நவிரமலை என்பது உறுதியாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக பருவதமலையில் கிடைத்துள்ள ராஜராஜ சோழனின் கல்வெட்டு, பருவதமலையே பருவதங்கிரி என்று வழங்குவதால், பருவதமலை வேறு நவிரமலை வேறு என்ற புதிய வரலாற்றுக் குறிப்பு இக்கல்வெட்டு மூலம் வெளிப்பட்டுள்ளது. வேழ நாட்டு நவிரமலை என்று இம்மலை அழைக்கப்பட்டதை நோக்குவது அவசியமாகிறது. ஏனென்றால் வேழம் என்பது ஆண் யானைக்கு வழங்கப்படும் செந்தமிழ்ச் சொல்லாகும். இங்கு வேழம் என்று ஆண் யானையைக் கூறுவதை விட, பொதுநிலையில் யானைகளின் கூட்டம் நிறைந்த நவிரமலை என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். மலைபடுகடாம் என்பது கூட யானையின் பிளிறல் ஒலி எனும் பொருளிலேயே வருகிறது. எனவே சங்க இலக்கியம் யானைக் கூட்டம் நிறைந்த நவிரமலை என்று கூறுவது இந்த ஜவ்வாது மலைப் பகுதியே என்பது இக்கல்வெட்டு மூலம் உறுதிப்படுகிறது.

மேலும் உடையான் மாதன் என்பவர் அண்ணாமலைக்கு (திருவண்ணாமலை) தானமாகக் கொடுத்த செய்தியாக இருக்கலாம். இறுதியாக சில கல்வெட்டு வாசகங்கள் பொறிந்துள்ளதால் சரியாகப் பொருள் கொள்ள முடியவில்லை.

இக்கல்வெட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக அரசியல் வரலாற்றை அறிய உதவும் ஆவணமாகும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: