தலைவாசல் அருகே புத்தர் சிலையை, புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, தியாகனுார் ஊராட்சியில் பழமை வாய்ந்த புத்தர் சிலை உள்ளது. ஐந்தாம் நுாற்றாண்டை சேர்ந்த இந்த சிலை, அமர்ந்து தியானம் செய்யும் நிலையில் காட்சியளிக்கிறது. தியான நிலையில், தமிழகத்தில் உள்ள சிலைகளில் இதுவே பெரியது. இந்த சிலை, 8 அடி உயரம், 4.5 அடி அகலம் உடையது. சிலையின் மூக்கு மற்றும் வலது கையில் உள்ள பெருவிரல் சற்று சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன், அவ்வூர் மக்களால் புத்தர் கோவில் கட்டப்பட்டது. 30 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட கோவில் கோபுரத்தில் நான்கு உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோவில் முன் பக்கத்தில் புத்தர் உருவம், தெற்கில் கண்ணனின் உருவம், மேற்கில் திருமாலின் நரசிம்ம அவதாரம், வடக்கில் கிருஷ்ண அவதாரம் என சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.அதேபோல, 5 அடி உயரம், 3 அடி அகலமுள்ள, ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த மற்றொரு புத்தர் சிலையும் இங்கு உள்ளது. பல நுாற்றாண்டுகளாக வயல்வெளியில் கிடந்த இந்த சிலைக்கு, தியான மண்டபம் கட்டப்பட்டு, 2013ல், திறக்கப்பட்டது.
சேலம் வரலாற்று ஆய்வு மைய குழு தலைவர் பொன். வெங்கடேசன் கூறியதாவது: தியான மண்டபத்தை சுற்றி, பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பூங்கா அமைப்பதுடன், பார்வையாளர்கள் அமர்வதற்கு கல் திட்டைகள் ஏற்படுத்த வேண்டும். பெரிய சிலை அமைந்துள்ள கோவிலுக்கு, சொந்தமாக நிலங்கள் உள்ளன. பிரகாரத்தை மையப்படுத்தி, கோவிலை விரிவாக்கம் செய்ய வேண்டும். ஆறகளூர் ஏரியில் படகு சவாரி வசதி செய்து, புத்தர் கோவில் பகுதியை சுற்றுலா தலமாக மாற்றும் திட்டத்தை, சேலம் முன்னாள் கலெக்டர் மகரபூஷணம் முயற்சி செய்தார். இத்திட்டத்திற்கு, உயிரூட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.