கீழடியில் பழைமையான ஈமக்காடு; 6-ம் கட்ட அகழாய்வில் மற்றொரு சிறப்பு!

சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள், மத்திய தொல்லியல்துறை சார்பாக நடத்தப்பட்டன. அதற்குப் பின் 4 மற்றும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தமிழகத் தொல்லியல் துறை சார்பாக நடத்தி முடிக்கப்பட்டன.

கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணி முடிந்ததைத் தொடர்ந்து அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருள்கள் மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டதும் கிடைக்கப்பட்ட பொருள்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்படும்.

இந்நிலையில் நேற்று (19.2.2020) கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. கீழடி மட்டுமன்றி கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு செய்யப்பட உள்ளது.

கொந்தகையில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பழைமையான ஈமக்காட்டில் அகழாய்வுப் பணி நடைபெற உள்ளது. இந்த ஈமக்காடு தனியார் பட்டா இடத்தில் உள்ளதால் உரிமையாளரின் அனுமதியுடன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஈமக்காடு, கொந்தகை கால்நடை மருத்துவமனைக்கு முன்பாக சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த ஈமக்காட்டை தமிழக தொல்லியல்துறை அகழாய்வுப் பணி மேற்கொள்ள குறியீடு செய்துள்ளது. அங்கு உள்ள புதர்களில் ஏராளமான அடையாளச் சின்னங்களை வெளிப்படையாகக் காண முடிந்தது.

எனவே, இந்த இடத்தில் முழுமையாக அகழாய்வு செய்யும்போது தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தும் விதமாகப் பல்வேறு பொருள்கள் கிடைக்கலாம் எனத் தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

  • விகடன்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: