ஜெயலலிதா இறப்பு அறிவிக்கப்பட்ட பின்பு தமிழக அரசியல் களம், அசாதாரண சூழ்நிலையில் இருந்த வந்தது அனைவரும் அறிந்த ஒன்று.
– ஜெயலலிதாவின் இறப்பின் மர்மம்.
– இடைக்கால முதல்வராக தொடர்ந்த திரு. பன்னீர் செல்வம்.
– அதிமுக இரண்டு பட்டு நின்று ஆட்சியை பிடிக்க முயன்றது.
இப்படிப்பட்ட நிலையில், தமிழக ஆளுநரின் அதிமுக-வின் ஒரு பிரிவினரை அழைத்து, ஆட்சி அமைக்க அனுமதித்து, அவர்கள் பெரும்பான்மையை சட்ட மன்றத்தில் நிருபிக்க சொன்னது முதல், ஆட்சி பீடத்தை பிடிக்க முயற்சி, தமிழகத்தின் சூழலை மேலும் சிக்கலுக்கு கொண்டு சென்றது.
அதிமுக-வின் ஒரு குழுவான, திரு. எடப்பாடி பழனிசாமியின் குழு தங்களுக்கு ஆதரவளித்து வருவதாக சொன்ன 122க்கும் மேற்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்களை சென்னையிலிருந்து 80 கி.மீ தள்ளி ஒரு இடத்தில் ஒரு வாரத்திற்கு மேல் தங்க வைத்து கொண்டு, அவர்கள் சுதந்திரமாக இருந்தார்கள் என்ற மாயையை ஏற்படுத்தியதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த உலகம். சிலர் அங்கு சுதந்திரமாக, எங்களது விருப்பப்படி இருந்தோம் என்று சொல்ல வைத்தாலும், இரு சட்ட மன்ற உறுப்பினர்கள் தாங்கள் தப்பி வந்தோம் என்று வெளிப்படையாக சொன்னது, அங்கு என்ன நடத்திருக்கும் என்ற உண்மையை நமக்கு உரைப்பதாகவே இருந்தது.
இறுதியாக, சட்ட மன்றம் சிறப்புக் கூட்டம் நடத்த 18ம் தேதி பிப்ரவரி தேர்வு செய்யப்பட்டது. அன்று திரு. எடப்பாடி பழனிசாமியின் அதிமுக, குழு தங்களது மேற்பார்வையிலிருந்த 122 சட்ட மன்ற உறுப்பினர்களை தாங்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து நேரிடையாக சட்டமன்றத்திற்கு அழைத்து வந்திருந்னர். இப்படியான நிலையில், பொதுவாக அனைத்து தமிழக மக்களுக்கும் இருந்த ஐயத்தை நினைத்து, திமுக-வின் சட்ட மன்ற உறுப்பினர்கள் 88 பேர்களின் குரலாக, சட்ட மன்றத்தின் பெரும்பான்மையை நிருபிக்க இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அல்லது திரு. எடப்பாடி பழனிசாமியின் மேற்பார்வையிலிருந்த அதிமுக குழுவை சேர்ந்தவர்களை அவரவர் தொகுதிகளுக்கு சுதந்திரமாக விடுவித்து, நான்கு நாட்கள் கழித்து வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். இதனை ஏற்றுக் கொள்ளாத சபாநாயகர் திரு. தனபால் அவர்களுக்கு எதிராக சட்ட மன்றத்திற்குள்ளேயே போராட்டம் நடத்தினர். அந்த சமயத்தில், சலசலப்பு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு, திமுக-வினரை சட்ட மன்றத்தை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டார் சபாநாயகர். திமுக-வின் கோரிக்கையை வலியுறுத்தி, காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-கின் உறுப்பினர்களும் சட்ட மன்றத்தை விட்டு வெளி நடப்பு செய்தனர்.
இதனால், இப்பொழுது சட்ட மன்றத்தில் எதிர்கட்சிகள் இல்லாத நிலை உருவாக்கி, ஜனநாயக முறையை படுகொலை செய்து, அதிமுக-வின் இரு குழுக்களை மட்டும் வைத்துக் கொண்டு வாக்கெடுப்புக்கு சபாநாயகர் இணக்கமானார். கடைசியில் வெற்றியும் பெற வழிவகை செய்யப்பட்டதாகவே கணிக்க முடிகிறது.
வெளியேற்றப்பட்ட திமுக-வினர் ஆளுநரை நேரிடையாக சந்தித்து மறு வாக்கெடுப்பை நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.
உலகத் தமிழர் பேரவையும், சட்டமன்றத்தில் 18ம் தேதி பிப்ரவரி நடைபெற்ற வாக்கெடுப்பு நேர்மையான முறையில் நடத்தப்படவில்லை என்பதை அவதானிக்கிறது. இதனால், உண்மையான, சுதந்திரமான, நேர்மையான முறையில் மறு வாக்கெடுப்பை திரும்பவும் சட்ட மன்றத்தில் நடத்திட வேண்டும் அல்லது அப்படி இயலாதபட்சத்தில், குடியரசு தலைவர் உடனடியாக தலையிட்டு, பொதுவாக தமிழக மக்களின் பெரும்பான்மை மக்கள் விரும்பும் வகையில், மறு தேர்தல் ஒன்றை நடத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை உலகத் தமிழர் பேரவை முன்வைக்கிறது.
Pingback: Shanmuganathan CA