ஜல்லிக்கட்டு வெற்றி விழாவை நடத்தி, தமிழக அரசிற்கு விருது வழங்க உலகத் தமிழர் பேரவை கோரிக்கை!

இன்றைய தமிழக நாட்டு மாடும், 5000 ஆண்டுக்கு முன் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட காளையும்

இன்றைய தமிழக நாட்டு மாடும், 5000 ஆண்டுக்கு முன் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட காளையும்

ஜல்லிக்கட்டு – உலகின் எந்த மூலையில் இருப்பினும், இப்பெயரை தமிழர்கள் கேட்டால் வீரம் கொப்பளிக்கும். நாகரிகம் பெற்ற தமிழ் இனம் தோன்றியதிலிருந்து காளை மாட்டோடு மரபு வழி குல விளையாட்டுக்களில் தனது உணர்வையும், வாழ்வை இரண்டற கலந்து, அதனுடன் வீரம் செறிந்த, பாரம்பரியமான விளையாட்டை நடத்தி வருபவர்கள் தமிழர்கள். அந்த விளையாட்டு இன்றும் கிராமங்களில் தொடர்கிறது. எப்படி மனித குலத்தை, இந்த பூமிப்பந்திலிருந்து பிரிக்க முடியாதோ, அவ்வாறே காளையோடு இறுக்கமாக இணைந்து கொண்டுள்ள தமிழனின் வாழ்வையும் பிரிக்க இயலாது. தெய்வத்திற்கு இணையாக வணங்கியும், தனது வீட்டு பிள்ளைகளில் ஒருவனாக பார்த்துப் பாராட்டுபவர்கள் தமிழர்கள். இன்னும் சொல்லப்போனால், 5000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் நாகரிகம் என்று போற்றப்படுகிற, சிந்து சமவெளி நாகரிகத்தின் எச்சங்கள் கிடைத்தபோது, அதில் மிக முக்கியமான ஒரு ஆவணமாக கிடைக்கப் பெற்றது, காளையின் சின்னம் என்பதை இன்றும் உலகம் ஒப்புக் கொண்டிருக்கிறது. பண்டைய தமிழ் இலக்கிய நூல்களான கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை-யில் ஜல்லிக்கட்டு குறித்த பாடல்களும், இப்பொழுது கிடைக்கப்பெறும் பழங்கால கல்வெட்டுகளிலும் ஜல்லிக்கட்டு குறித்த செய்திகள் காணக் கிடைக்கின்றன. ஜல்லிக்கட்டு, என்பதை ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு, சல்லிக்கட்டு (50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது. மாட்டை பிடிக்கும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது) என தமிழகத்தில் பல இடப்பெயர்களாக அழைக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டிற்க்கும், தமிழர் உணர்வுகளுக்கும் இடையே உள்ள நீண்ட உறவை புரிந்து கொள்ள உலகத் தமிழர் பேரவையின் பயணம்:

ஜல்லிக்கட்டிற்க்கும், தமிழர் உணர்வுகளுக்கும் இடையே உள்ள நீண்ட உறவை புரிந்து கொள்ளும் பொருட்டு, நமது உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டார். அந்த சமயம், ஜல்லிக்கட்டிற்கு உச்சநீதி மன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னையிலிருந்து 2017, ஜனவரி 14ம் தேதி இரவு விமானம் மூலம் மதுரை புறப்பட்டு, இரு தினங்கள் மதுரையில் தங்கி, உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் உள்ள மக்களை சந்திப்பது திட்டம். திருவள்ளுவர் தினத்தையொட்டி, 15ம் தேதி காலையில் மதுரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விட்டு தடை சட்டத்தை மீறி பாலமேடு கிராமத்தில் நடக்க உள்ள ஜல்லிக்கட்டை காண நண்பர்களோடு பயணப்பட்டனர். ஆயிரக்கணக்கான காவல்துறையினரின் படையோடு, இந்திய நாட்டின் அனைத்து தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகவியலாளர்களும் ஜல்லிக்கட்டை எதிர்நோக்கி காத்திருந்தனர். அன்று காலையே 3-4 காளைகளை அவிழ்த்து விட்டிருந்தபடியால், காவல்துறையினர் கடுமையான பாதுகாப்போடு உச்சநீதி மன்ற தடையை மீறி நடவா வண்ணம் கண்காணித்து கொண்டனர். அக்கிராமத்தில் ஜல்லிக்கட்டு பொதுவாக நடக்கும் ஆற்றுப்படுகையின் பக்கவாட்டில் உள்ள கிராம சந்துகளில் உள்ளே சென்றால், கிராம மக்கள் அசைவ உணவுகளை விருந்து படையல் வேலைகளில் மும்முறமாக ஈடுபட்டிருந்தனர். அருகிலேயே சாமி காளைகள் என்று சொல்லப்பட்ட (காங்கேயம்) காளைகள் கட்டுகளை மீறி திமிறிக் கொண்டும், உறுமிக் கொண்டும் இருந்தன. அதன் அருகில் செல்ல முடியாவண்ணம் இருந்தது. காவல்துறை கெடுபிடியால், ஜல்லிக்கட்டு நடைபெறுவது சந்தேகத்தை அளித்து வந்த வேளையில், பாலமேட்டிலிருந்து 35 கி.மீ. தொலைவில் திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் அருகில் அமைந்துள்ள உலுப்பங்குடி என்னும் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, மகிழுந்தை எடுத்துக் கொண்டு உலுப்பங்குடியை நோக்கி நகர்ந்தனர். அந்தி சாயும் நேரம் மாலை 5.30 மணிக்கு ஊர் பொதுவில் உள்ள கோவில் மைதானத்தில் காளைகள் வாடிவாசல் வழியே அவிழத்து விடப்பட்டன. சீறி வந்த காளைகளை அங்கிருந்த மாடு பிடி வீரர்கள் கூடியிருந்த மக்களின் பெரும் ஆராவாரத்திற்கிடையில் பிடிக்க முயன்றனர். ஊர் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்ததை காண கூடியதாக இருந்தது. உலுப்பங்குடியில் செய்தியாளர்களோ, காவல்துறையோ பெயரளவில் கூட காணப்படவில்லை என்பது ஆச்சிரியத்ற்குரியது. அங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலரும், ஜல்லிக்கட்டை காண வந்திருந்தனர். ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில், அடுத்த நாள் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெறுமா என ஐயத்தோடு அன்று இரவு அங்கு பயணப்பட்ட போது, ஊர் முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது வெளிப்படையாக தெரிந்தது. நண்பர்களின் உதவியோடு ஊரில் உள்ள மாடு பிடி வீரர்களை பார்த்தபோது, உயிரைக் கொடுத்தாவது ஜல்லிக்கட்டை நடத்துவோம் என உணர்ச்சியோடு சூளுரைத்தது, நமது காதுகளில் ரீங்காரமிட்டது. ஒருங்கிணைப்பாளர் சென்னை திரும்பியிருந்த வேளையில், அடுத்த நாள் 16ம் தேதி கிராமத்து இளைஞர்களும், ஜல்லிக்கட்டு தமிழார்வலர்களும் அலங்காநல்லூரில் முற்றுகைப் போராட்டம் தடையை மீறி நடத்தியதால், கைது செய்யப்பட்டதை அறிந்து, ஒட்டு மொத்த தமிழகத்தையும் கோபமடைய செய்தது.

ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை :

காலம், காலமாக தமிழ் மக்களின் உணர்வோடு இணைத்துக் கொண்டுள்ள காளை மாடு மற்றும் தமிழனின் வாழ்வியலில், இந்திய பேரரசின் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி காளையோடு விளையாடுவதை, இந்திய அரசின் அங்கமாக இருக்கும் சில அமைப்புகளும், பன்னாட்டு அரசு சாரா நிறுவனமான பீட்டா (PETA) போன்றவைகளின் சூழ்ச்சியால், ஜல்லிக்கட்டிற்கு வரும் நாட்டு மாடுகளை துன்புறுத்தப்படுகிறது என்ற காரணத்தை காட்டி, இந்திய உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து இடைக்கால தடை ஏற்படுத்தினர். (11-07-2011 இந்திய அரசு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும் சல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் ஆகியவற்றை தடை செய்ய காளைகளை ‘காட்சிப்படுத்தாத கொடிய விலங்குகள்’ பட்டியலில் சேர்த்து ஆணை பிறப்பித்தது. அதனடிப்படையில் இந்திய உச்ச நீதிமன்றம் 07.05.2014 இல் சல்லிக்கட்டு மற்றும் வடமாநில ரேக்ளா பந்தயம், எருதுகள் போட்டி ஆகியவற்றிற்கு நிரந்தர தடை ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் இந்திய அரசு 07.01.2016 அன்று தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்தவும், ரேக்ளா பந்தயம் நடத்தவும் காளைகளை கொடிய விலங்காகக் கருதக்கூடாதென ஆணை G.S.R.13(E)-ஐ பிறப்பித்தது. உடனே பீட்டா அமைப்பு மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்திரவை அவமதித்தாக நடவடிக்கை கோரியும் அரசாணைக்கு தடை கோரியும் உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு W.P.24/2016-ஐ தாக்கல் செய்தது. உச்சநீதி மன்றத்தில் 12.01.16 அன்று தடை ஆணை பிறப்பித்து, மத்திய அரசின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாதென கேட்டு விசாரணை அறிக்கை அனுப்பியது அனைவரும் தெரிந்ததே.)

ஆனால், இந்த அமைப்புகள், நாட்டு மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதை எதிர்க்க முன்வரவில்லை. தடைக்கான காரணத்தை ஆழமாக பார்ப்போமேயானால், நாட்டு மாடுகள், அடி மாடுகளாக்கப்பட்டு, அதன் எண்ணிக்கைகளை குறைத்து, வெளிநாட்டு ஜெர்சி மாடுகளின் இறக்குமதி வியாபாரத்தை ஊக்குவிக்கும் இராசதந்திர சூழ்ச்சி மூடி மறைக்கப்பட்டிருப்பது புரிந்து கொள்ள இயலும்.

மக்கள் எழுச்சி :

சில ஆண்டுகள் பொறுத்துப் பார்த்த தமிழர்களால், ஆலங்காநல்லூரில் நடத்த போராட்டத்தை நிறுத்த எடுத்த முயற்சியின் காரணமாக, சில காலமாக சமூக வலைதளங்கள் மூலம் அறக்கூவல் விடுத்து வெகுண்டெழுந்தது மாணவர்களும், இளைஞர்களும், ஜனவரி 17, 2017ம் தேதி காலையில் சென்னை மெரினா கடற்கரையில் கூட தொடங்கியதை கேள்வியுற்ற பிற மாவட்ட மாணவர்களும், இளைஞர்களும் பொது இடத்தில் குவியத் தொடங்கினர். உலகில் புரட்சி வரலாற்றில் இதுவரை எழுதப்படாதவாறு, வழிகாட்டுதலுக்கு தலைவன் இல்லாமலேயே, ஒரு மக்கள் பிரச்சனைக்காக லட்சக்காணக்கில், தமிழகம் முழுக்க கூடிய கூட்டம் இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

நாட்கள் நகர, மாணவர்கள், இளைஞர்களோடு, பொதுமக்களும் அறவழியில் போராட்டத்தில் பங்கெடுத்தது, ‘மக்கள் புரட்சி’யாகவே எல்லோராலும் வர்ணிக்கப்படுகிறது. உலகில் உள்ள ஊடகங்களின் பார்வை தமிழகம் நோக்கி திருப்பியதால், உலக மக்களிடத்தில் போராட்ட செய்தி எளிமையாக கொண்டு செல்லப்பட்டதாலும், போராட்டம் விரிவடைந்தது. நடிகர்கள் இன்னும் பிற சமூக ஆர்வலர்கள் என பலரும் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் பேசியது, மேலும் ஊக்கத்தை அளித்தது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் ஆங்காங்கே இந்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெடுங்காலமாக ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் அமைப்பினரும், போராட்டகாரர்களோடு கைகோர்த்துக் கொண்டனர்.

போராட்டத்தில் புல்லுருவிகளா?

இந்த வேளையில், போராட்டத்தின் வலிமையை பயன்படுத்த பல திரைப்பட பிரபலங்கள் ஊடுருவியதாக சொல்லப்படுகிறது. அத்தோடு, அந்த பிரபலங்கள் பகல் நேரங்களில் போராட்டக்காரர்களோடு கழித்து விட்டு, அந்தி மாலை பொழுது அவர்களது வீடுகளுக்கு சென்று முழுமையான ஒய்வெடுத்து விட்டு திரும்பவும் அடுத்த நாள் போராட்டத்தில் கலந்து கொண்டு, தாங்களால் தான் போராட்டதை வழி நடத்தப்படுவதாக ஒரு மாய பிம்பத்தை உலகுக்கு காட்டி வந்தனர். சமூக விரோதிகள் சிலர், போராட்டத்திற்கு தொடர்பற்ற பல பதாதைகளை கையில் ஏந்தி, போராட்டத்தின் நோக்கத்தை திசை திருப்ப பார்த்தனர். சிலர் இந்த மிகப் பெரிய மக்கள் திரளை, தங்களுக்கு சாதகமாக்க எண்ணி செயல்பட்டனர். உலக வெளிக்கு ஏற்கெனவே தெரிந்திருந்த அரசியல்வாதிகளை போராட்டக்காரர்கள் முழுமையாக புறக்கணிதிருந்தனர் என்பது குறிப்பித்தக்கது. இந்த காரணங்களால், மாநிலத்தில் உள்ள அரசுக்கும், மத்திய அரசுக்கும் மிகுந்த நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

தமிழகம் முழுக்க, 22ம் தேதி வரை போராட்டக்காரர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு பணியை அமைதியாகவே செய்து வந்தனர். ஆனால், கட்டுப்படுத்தக் கூடிய அளவிலான புல்லுருவிகளை கணக்கில் கொண்ட, உளவுத்துறை, மிகப்பெரிய சதி நடக்கப்போவதாக அரசுக்கு எச்சரிக்கை அறிக்கை கொடுத்தது. இதுவே, பின்னர் கலவரத்திற்கு துணை போனது.

சட்டத்தை தெளிவு படுத்தாத அரசு – காவல்துறையினரின் அத்துமீறல்கள் :

இரும்பு மனிசியாக தமிழகத்தை ஆட்சி செய்து வந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தமிழக முதல்வர் பதவியை தக்கவைத்துள்ள தமிழரான திரு. பன்னீர் செல்வம் மத்திய அரசுக்கு தமிழக நிலையை சொல்லி, பிரதமரை சந்தித்ததன் பயனாக, மாநில அரசு அவரச சட்டம் கொண்டு வந்தால், உறுதுணையாக இருப்போம் என்ற வாக்குறுதியை பெற்று தமிழகம் திரும்பினார். இச்செய்தியை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், போராடும் மக்களிடத்தில் கொண்டு செல்லாமல், அரசின் காவல்துறையிடம் ஒப்படைத்ததுதான் பெரும் வேதனை. 22ம் தேதி இரவு, ஜல்லிக்கட்டு அமைப்பினரும், காவல்துறை உயர் அதிகாரிகளும் வாய் மொழியாகவே, முதல்வரின் பயணம் குறித்து கூடியிருந்த முக்கிய போராட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடத்தில் விளக்கியுள்ளனர். இதை ஏற்றுக் கொண்ட ஒரு சிறு பகுதியினர், மெரினாவை விட்டு சென்று விட்டனர். அடுத்த நாள் அதிகாலை, காவல்துறையின் உயர் அதிகாரிகள் உரிய அங்கிகாரம் பெற்ற ஆவணம் இல்லாமல், 23ம் தேதி காலை 6 மணியளவில், ஒரு சிறு அளவிளான கூட்டத்தினரிடையே போராட்டத்தின் நோக்கம் நிறைவேறி விட்டதாக பேசி விட்டு, சிறிதும் அவகாசம் கொடுக்காமல், உடனடியாக மெரினாவில் கூடியுள்ளோர் அனைவரும் கலைய வேண்டும் என கட்டளை பிறப்பித்தனர். அமைதியாக ஆறு நாட்கள் அறவழியில் நடந்து வந்து போராட்டத்தை, போராட்டக்காரர்களுக்கு சரிவர புரிய வைக்காமல், அவசரப்பட்டு சமூக விரோத கும்பல் கூட்டத்தினரிடையே புகுந்து விட்டனர் என சொல்லி, மாணவர்களையும், இளைஞர்களையும், குழந்தையோடு இருந்த பெண்களையும், வலுக்கட்டாயமாக ஆயுதப்படை காவலர்களின் உதவியோடு இழுத்து வெளியேற்றினர். இதில் சமாதானம் அடையாத ஆயிரக்காணக்கான மாணவர்களும், இளைஞர்களும் கடலில் இறங்கி காவலர்களோடு முன்டியடித்துள்ளனர். கடலில் இறங்கி போராடும் வீரர்களுக்கு, அருகில் வசித்து வரும் மீனவர்கள் தங்களது படகுகளை கொண்டு வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனிடையே மெரினாவின் ரோட்டிற்கு விரட்டப்பட்ட சிலர் சென்னை ஔவை சண்முகம் சாலையில் ஓடி காவலர்களை நோக்கி கல்லை எறிந்துள்ளனர். காவலர்களும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிருபிக்க, அவர்களும் கற்களை எடுத்து எறிந்தும், பின்னர் கண்ணீர் புகை குண்டை வீசி கூட்டத்தினரை கலைக்க முற்பட்டனர். இதில் சில போராட்டக்காரர்கள் அருகில் உள்ள மீனவர்கள் குடியிருக்கும் நடு குப்பத்தில் அடைக்கலமாகி உள்ளார்கள். அந்த நடு குப்பத்தில் ஒதுங்கியவர்கள் சமூக விரோதிகள் என காவல்துறையினர், குப்பத்தினுள் நுழைந்து, மீனவர்களின் விற்பனையகங்களை தீ வைத்து விட்டு, அங்கு சந்தேகம் கொள்ளும் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு இருப்பதையெல்லாம் எடுத்து உடைத்தும், வீசியும் உள்ளனர். தடுத்த மீனவ பெண்களை கேவலமாக திட்டியும், லத்தியால் அடித்தும் விரட்டியுள்ளனர். தற்போது அரசு, மீனவர் விற்பனையகங்களை புதுப்பித்த தருவதாக செய்திகள் வருகிறது.

சென்னை செயலற்றுப்போக காரணம் என்ன?

இதே வேளையில் மக்கள் நலக் கூட்டணியை சேர்ந்த சில தலைவர்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல முற்பட்டபோது சென்னை இராதாகிருஷ்ணன் சாலையில் காவல்துறையால் தடுக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த தலைவர்கள் உடனே சாலை மறியலில் ஈடுபட்டு போக்குவரத்தை தடை செய்துள்ளனர். இச்செய்தி பரவலாக சென்னை முழுக்க சென்றடைந்த வேளையில், ஆங்காங்குள்ள எதிர் கட்சியினரும், அவர்களது தோழர்களும் சென்னையின் முக்கிய இடங்களில் தடையேற்படுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதன் விளைவாக, சென்னையின் போக்கு வரத்து மொத்தமாக செயலற்று, வாகனங்கள் சாலைகளில் ஆங்காங்கே நின்றது. சாலையில் நின்றிருந்து ஒரு சில காவலர்களும் செய்வதறியாது, நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது, பொது மக்களிடத்தில் ஒரு பாதுகாப்பின்மையை உணரக் கூடியதாக இருந்தது.

காவல்துறையினரும் இதற்கு விதி விலக்கல்ல என்பதைப் போன்று, குழுவாக சென்ற காவல்துறையினர் கடற்கரையை அண்மித்துள்ள மீனவர் குப்பத்தில் இளைஞர்களை குறி வைத்து வேட்டையாடினர். அத்தோடு, பொதுமக்களது சொத்துக்களை பாதுகாக்க வேண்டியவர்கள், அதாவது, ‘வேலியே பயிரை மேய்ந்த’ கதை போல, காவலர்களே பொது மக்களுடைய சொத்துக்களுக்கு தீ வைப்பதும், மக்களது சொத்துக்களை உடைப்பதும், இளைஞர்களை காட்டுமிராண்டித்தனமாகவும், கண் முடித்தனமாகவும் அடிப்பதும் பொது மக்கள் தங்களது செயல்பேசிகளில் எடுத்திருந்த காணொளி வாயிலாக உலகுக்கு சொல்லப்பட்டுள்ளது. அதுபோலவே காவல்துறையினர் சொல்வதுபோல, சில சட்ட விரோத கும்பல், காவல்துறை உயர் அதிகாரியின் மகிழுந்தை நடு சாலையில் அடித்து நொருக்குவதையும் காணொளியில் காணக் கூடியதாக இருக்கிறது.

இந்நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நேரிலை செய்திகளாக தொலைக்காட்சி ஊடகங்கள் காட்டி வந்தன. இதனால், தமிழகத்தின் பல மாவட்ட தலைநகரங்களில் உள்ளவர்கள் செய்வதறியாது, உண்மை நிலையை தெரிந்து கொள்ள முயற்சித்துள்ளனர். சில மாவட்டங்களில், காவல்துறை உயர் அதிகாரிகள் தெளிவாக எடுத்து சொல்லி, விளக்கியதன் விளைவாக போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். சில மாவட்டங்களில் கலைந்து செல்ல மறுத்ததினால், அவர்கள் கைது செய்யப்பட்டு, வழக்குகள் இல்லாமல் அன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு தடையை உடை :

23ம் தேதி, மாலையில், தமிழக சட்ட மன்றத்தில் ஒரு மனதாக ஜல்லிக்கட்டிற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்ததாக அறிவித்த தமிழக முதல்வர்வரின் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. உடனடியாக மத்திய அரசின் துறைகளுக்கும் அந்த சட்டத்தின் நகல்கள் அனுப்பப்பட்டன. இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அபிஷேக் மனு சிங்க்வி பீட்டா சார்பில் ஜல்லிக்கட்டிற்கான அவசர சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமென்று மனுத்தாக்கல் செய்து, பின்னர் தானாகவே அதிலிருந்து பின்வாங்கி கொண்டார் என சொல்லப்பட்டது. மத்திய அரசும், உச்சநீதி மன்றத்திற்கு காளைகளை ‘காட்சிப்படுத்தாத கொடிய விலங்குகள்’ பட்டியலிலிருந்து எடுத்து விட்டதாக மனு செய்துள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டிற்கு இருந்து வந்த தடைகள் உடைக்கப்பட்டன. இந்திய ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின்னர் இனி ஜல்லிக்கட்டிற்கு எவ்வித தடையுமின்றி நடத்த ஏதுவாகும் என்பது திண்ணமாகிறது.

மக்கள் புரட்சியில் கிடைக்கப் பெற்ற மாபெரும் வெற்றியாக இந்நிகழ்ச்சி கருதப்படுகிறது.

உலகத் தமிழர் பேரவையின் பரிந்துரைகள் :

1. காணொளி வாயிலாக இன்று உலகுக்கு தெரிய வந்திருக்கும் கலவரத்தில் மனிதநேயமற்று செயல்பட்ட காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை தமிழக காவல்துறைத் தலைவர், எவ்வித தயவும் காட்டாமல், எந்த வித உயர் பதவியில் இருந்தாலும், உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உரிய தண்டனையும், பொது சொத்திற்கு சேதம் விளைவித்த காவலர்களிடம் அதற்குரிய நட்ட ஈடு பெறப்பட வேண்டும்.

2. தமிழகத்தில் நேர்மையான பணியில் உள்ள உயர்நீதி மன்ற நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்றை உடனடியாக நியமித்து, விசாரணைக்கு உத்தரவிட்டு, 23ம் தேதியும் அதன் பின்பும், சென்னையின் கலவரத்திற்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு, உரிய தண்டனை வழங்கிட வேண்டும்.

3. கலவரத்தில் ஈடுபடாதோர் எவரேனும் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதை நீதிபதிகள் குழு விசாரணையில் கண்டறிந்தால், அவர்களை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அப்படிபட்டவர்களின் சொத்துக்கள், காவல்துறையின் அத்துமீறல்களால், சேதமடைந்திருந்தால், அவர்களுக்கு உரிய நட்ட ஈட்டை அரசு தர உத்தரவிட வேண்டும்.

4. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியான தமிழக முதல்வர் அவர்கள் ஜல்லிக்கட்டு பிரச்சனையில் அறவழியில் ஈடுபட்ட முக்கிய பிரதிநிதிகளை அழைத்து, வெற்றி விழாவினை மிகப் பெரிய அளவில் அரசு சார்பில் கொண்டாட வேண்டும். அதே விழாவில், இப்பிரச்சனையை மத்திய அரசோடு இணைந்து இணக்கமாக செயல்பட்ட, தமிழக அரசின் ஈடுபாட்டை பாராட்டும் விதமாக தமிழக முதல்வருக்கு தமிழார்வலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு அமைப்பினர்கள் சேர்ந்து விருது ஒன்றிணை வழங்கப்பட வேண்டும்.

5. விலங்குகள் நலத்தில் அக்கறை கொண்டுள்ள, பீட்டா அமைப்பின் தலைமையகம் வெளிநாட்டில் செயல்பட்டு வந்தாலும், அந்த அமைப்பின் இந்திய கிளை, இந்திய மத்திய அரசின் அனுமதியோடு பல ஆண்டுகளாக இங்கு செயல்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு பிரச்சனைக்காக பலர் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என கோரி வருகின்றனர். இந்நிலையில் பீட்டாவின் அனைத்து நடவடிக்கைகளை உச்சநீதி மன்ற மனித உரிமை நீதிபதிகள் அடங்கிய குழு முழுமையாக விசாரிணைக்குட்படுத்தி, குற்றமிருப்பின் உரிய தண்டனை வழங்க ஏற்பாடு மத்திய அரசால் செய்யப்பட வேண்டும். விசாரணை முடியும் வரை இவ்வமைப்பை உள்நாட்டு பிரச்சனைகளின் தலையீட்டில் காட்டுபாடுகளோடு செயல்பட அனுமதிக்கலாம்.

6. அரசு அனுமதியுடன் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்வில் வீரமரணம் அடையும் தியாகிகளுக்கு, தமிழக அரசு, ‘வீரத்தமிழன்’ விருதும், அவர்தம் குடும்பத்துக்கு உதவித்தொகை மற்றும் அரசு வேலை வழங்கி விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>