கல்யாண வீடு என்ற ஒரு நெடுந்தொடர் நாடகம் சன் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு (இந்திய நேரம்) ஒளிபரப்பாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் அரசு நடத்திய தமிழர் விழாவில் கல்யாண வீடு தொடரின் இயக்குநர் திரு. திருமுருகன் கலந்து கொண்டு சிறப்பித்தும் உள்ளார்.
அவர் இயக்கும் கல்யாண வீடு தொடரில் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார். தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூரில், அத்தொடர் கடந்த சில நாட்களாக எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது அங்கு எடுக்கப்பட்டு வரும் தொடரில், சிங்கப்பூர் தமிழர்களை உண்மைக்கு மாறாக கேவலமாகவும், தமிழனுக்கு எதிராகவும் சித்தரித்து காட்டப்பட்டு வருவதாகவும் சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் தமிழர்கள் சிலர் எமது உலகத் தமிழர் பேரவையை தொடர்பு கொண்டு வருத்தப்படுகின்றனர். இவ்வகை செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி – திருத்திக் கொள்ள வேண்டுமாய் எமது உலகத் தமிழர் பேரவை அந்த தொடரின் தொடர்புடைய நிறுவனத்தை கேட்டுக் கொள்கிறது. அப்படியும் இனி இது போன்று உண்மைக்கு மாறான பொய் செய்திகளை அத்தொடரில் ஒளிபரப்பப்பட்டு வந்தால், உயர்நீதி மன்றத்தை நாடி, தொடருக்கு தடை பெற வேண்டி வரும் என எச்சரிக்கை செய்கிறோம்.
உலகத் தமிழர் பேரவை – உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் பணியினை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வேளையில், இதுபோன்று தமிழர்களிடையே நல்லிணக்கம் குழைக்கும் வகையில் நடந்து வரும் தொடர்கள் நிறுத்தப்பட்டு, ஒற்றுமையை விதைக்கும் நல்ல கருத்துக்கள் அடங்கிய தொடர்களை எடுக்க முன்வர வேண்டும் என்று திரைத்துறை மற்றும் சின்னத்திரை கலைஞர்களை உலகத் தமிழர் பேரவை கேட்டுக் கொள்கிறது.
அக்னி
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com