வரிச்சியூர் செல்வத்திடமிருத்து திடீரென 15 – 20 ஆண்டுகளுக்கு முன் எனது கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. அண்ணா, என்னை என்கெளவுன்டர் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. என்னை காப்பற்றவும்.
அவர் என்னோடு பேச பயன்படுத்திய கைப்பேசி எண், எனது மறைந்த நண்பர் பெங்களூர் ரங்கநாத்-தினுடையது. ரங்கநாத், இராஜீவ் வழக்கில் தூக்கு தண்டனை பெற்று விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது நான் மனித உரிமை அமைப்பொன்றை தலைமையேற்று நடத்தி வந்தேன். எனது உதவியால் அவர் உயிரை காப்பாற்ற இயலும் என நம்பியதால் எனது உதவியை நாடினார். அவருக்கு சில ஆலோசனை சொல்லி, பிறகு ஒரு நாள் நேரில் வந்து என்னை பார்க்க சொல்லியிருந்தேன். அவரும் வருகிறேன் என்றார். ஆனால், இதுவரை வந்து சந்திக்கவில்லை. வரிச்சியூர் செல்வத்தை நேரில் சந்தித்ததுமில்லை.
ஆனால், பின்னர் வரிச்சியூர் செல்வம் இந்திய ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் அவர்களோடு விமான பயணத்தின் போது செல்பி எடுத்து முகநூலில் போட்டார். டுபாக்கூர் அமெரிக்க முகவரியை வைத்துள்ள மதுரையை சேர்ந்த ஒருவரின் தமிழ் பல்கலைக்கழத்தில் டாக்டர் பட்டம் பெற்றதை அந்த பல்கலைக்கழக வேந்தரோடு நின்ற புகைப்படத்தை வெளியிட்டார். காமெடி நடிகர் என தன்னை கூறிக்கொண்டு, பண மோசடியில் பல முறை சிறைக்கு சென்று வந்த பவர் ஸ்டார் என்பவரோடு வேறு புகைப்படமெடுத்து வெளியிட்டார்.
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மட்டும் லேசு பட்டவரல்ல. இவர் மீது தமிழகம் முழுவதும் பல வழக்குகள் உள்ளன. மூன்று முறை என்கவுன்டரிலிருந்து கடைசி நேரத்தில் தப்பித்துள்ளார். தற்போது குற்றச்செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ்வதாக அவர் கூறினாலும், மறைமுகமாக பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் கூறி வருகிறார்கள்.
பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த வரிச்சியூர் செல்வம், வி.வி.ஐ.பி வரிசையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்தது எப்படி என சர்ச்சையை இப்பொழுது ஏற்பட்டுள்ளதை பார்த்தால், அத்தி வரதரின் சக்தியை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது.
அக்னி சுப்ரமணியம்