கனடாவின் நக்கீரன் கேள்விகளுக்கான அக்னி-யின் பதில்கள் இவை (12-12-2018)
<தமிழ்நாடு தமிழர்க்கே என்ற போது நீதிக்கட்சியில் இருந்த தெலுங்கர்கள் அப்படிச் சொன்னால் தாங்கள் அதில் எப்படி இணைய முடியும் என்று பெரியாரிடம் கேட்டார்கள்.
அதன்பின்னர்தான் திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற முழக்கத்தை வைத்தார். கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் திராவிட மொழிகள் என அழைக்கப்படுகின்றன.>
-> கன்னடம், தெலுங்கு, மலையாளம் பேசி வரும் எந்த அண்டை மாநிலங்களிலும் இன்றுவரை திராவிடம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மாறாக இப்பொழுதும் தமிழனையும்-தமிழ்நாட்டையும் எதிர்த்தே வருகின்றனர். தமிழனின் உரிமைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இந்த மாநிலங்களில் தமிழர்கள் இனத்தின் பெயரால் பலமுறை கொல்லப்பட்டுள்ளனர்.
தெலுங்கர்களாலோ மற்ற மொழியினரோ தமிழகத்தில் வாழலாம் – வணிகம் செய்யலாம். எதற்கு தமிழ் நாட்டோடு அவர்கள் இணைய வேண்டும். பிறகு எதற்கு அவரவர் மொழியினருக்கான மாநிலம்?
பெரியாரை, தமிழர்களை தவிர்த்து எந்த மாநில மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை.
<தமிழ் என்ற சொல்தான் மருவி திராவிடம் ஆனது.>
-> அப்படி மருவியிருந்தால், இப்பொழுது நேரிடையாக தமிழை தமிழ் என்றே தமிழர்கள் அழைக்க விருப்புகின்றனர். அந்த விருப்பத்தை ஏன் தடுக்க வேண்டும்.
<திராவிடம் என்ற சொல்லை தாகூர் தனது தேசியப் பண்ணில் பயன்படுத்தியிருக்கிறார்.>
-> தாகூர் வங்க நாட்டை சேர்ந்தவர். அவருக்கு கல்தோன்றி மண் தோன்ற காலத்தே முன்தோன்றியது மூத்த தமிழ் என்பது தெரியாமல் இருக்கலாம்.
<பாரதியை பார்ப்பான் என்றும் பெரியாரைத் தெலுங்கர் என்று யாராவது சொன்னால் அவனது கன்னத்தில் அறைய வேண்டும் என்பார் காசி ஆனந்தன்.>
-> காசி ஆனந்தன் ஈழத்து கவிஞர். அவர் தமிழக அரசியல் சூழலில் வாழ வேண்டுமல்லவா!
பாரதியை பார்ப்பான் என்பதில் என்ன தவறு. அவருடைய வேர் அதுதானே. ஆனால், அவரது செயல்பாடுகளை வைத்தே நாம் அவரை தமிழருக்கு வேண்டிய பார்ப்பனரா – வேண்டாத பார்ப்பனரா என முடிவு செய்ய இயலும். தமிழர்கள் நாம் பாரதியை ஏற்றுக் கொண்டே இருக்கிறோம். அவரது நண்பரான வ.உ.சிதம்பரம் பிள்ளை சென்னை வரும்போதெல்லாம், பாரதி வீட்டில் தான் தங்கினார். அதுபோல, எட்டையபுரம் செல்லும்போது பாரதியும், வ.உ.சி வீட்டில்தான் தங்கியிருந்தார். அவர்களிடம் எந்த வேறுபாடும் இருக்கவில்லை.
<தமிழில் அறிவியல் படைப்புக்கள், நூல்கள் இல்லாத காரணத்தாலேயே பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி பாஷை – ‘தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்!’ எனச் சொன்னார். தமிழர்களுக்கு அப்போதாவது மானம் மரியாதை வருகிறதா என்பதற்ககாக அப்படிச் சொன்னார்.>
-> தமிழன் உலகை ஆண்டவன். தெற்காசியாவில் இன்றும் தமிழனின் அத்துணை அடையாளங்களும் உள்ளன.
– காடாரம் – காடா மாநிலமாக இன்றும் மலேசியாவில் உள்ளது.
– தமிழ் மொழி சொற்கள் இன்றும் சைனா, கொரியா, ஜப்பான் மொழிகளில் புலக்கத்தில் உள்ளன.
-தாய்லாந்தில் அரசர் பதிவியேற்கும் போது, இன்றும் திருமந்திரம் – தேவாரம் பாடப்படுகிறது.
-காம்போடியாவில் உள்ள ஆங்கோர்வாட், உலகின் பெரிய இந்து கோயிலில் தமிழினின் எழுத்துக்கள் காணப்படுகின்றன.
இதுபோல எண்ணற்ற பெருமைகளையுடைய தமிழனை கருங்காலிகள் என்பதை மானமுள்ள எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
பெரியார் முதலில் அவரது மொழிக்காரர்கள் உள்ள கர்னாடகாவிலும் – ஆந்திராவிலும் ஜாதி வெறி, தீண்டாமை போன்றவையை ஒழித்து விட்டு, தமிழகத்தில் வந்து மான – மரியாதை குறித்து பேசியிருக்க வேண்டும். அங்கு இன்றும் தங்களது பெயருக்கு பின்னால், சாதி பெயர்களை இட்டே வருகின்றனர். உ.ம் சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் – இவர்கள் எல்லாம் அந்த மாநில முதல்வர்கள்…. இதுபோல் ஆயிரத்திற்கு மேல் உ.ம் காட்ட இயலும்.
<இன்று கூட எத்தனை விழுக்காடு தமிழர்களுக்கு தமிழ்ப் பற்று இருக்கிறது? பிள்ளைகளின் பெயரில் தமிழ் இருக்கிறதா? வெளிவருகிற திரைப்படங்களின் பெயர் தமிழா? திருமணம் என்ன தமிழிலா நடைபெறுகிறது? தமிழ்நாட்டு ஊடகங்களில் ஆங்கிலம் + சமற்கிருத மேலாண்மை இருக்கிறதா இல்லையா? திரைப்பட நட்சத்திரங்கள் தமிங்கிலத்தில் பேசுகிறார்களா இல்லையா? கடைகளின் பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்கிறதா? எனக்கே சில சமயங்களில் தமிழன் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இருக்கிறது!
சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்கு தமிழில் உள்ள பற்றைவிட ஆங்கிலம், சமற்கிருதப் பற்றுத்தான் அதிகமாக இருக்கிறது. கருணாநிதி குடும்பத்திலேயே பெரும்பான்மை தமிழ் இல்லை!>
-> இதெல்லாம், 1,000 ஆண்டுகளாக பல மொழியினரின் மொழி கலப்பால் தமிழகத்தில் நிகழ்ந்து வருபவை. எமது முன்னோர்கள் விட்ட தவறு. இதை உடனடியாக ஒரு நொடியில் சரி செய்ய இயலாது. காலம் எடுக்கலாம். அதற்காக தமிழையும், தமிழ் இனத்தையும் ஏசிப்பவரை நாம் தூக்கி வைத்து கொண்டாட வேண்டியதில்லை. காலப்போக்கில் இவைகள் அனைத்து சரி செய்யப்படும்.
கருணாநிதியே தமிழர் அல்ல. அவர் குடும்பத்தில் தமிழ் இல்லை என்பது ஆச்சரியமல்ல. மாறாக கருணாநிதி தமிழுக்கு நன்மை செய்ததை விட, தீமை செய்ததே அதிகம்.
<எப்படி வீரமாமுனிவரால் தமிழ் நிமிர்ந்ததோ (அவர்தான் எழுத்துக்களின் வடிவத்தை மாற்றியமைத்து புள்ளிகள் இடுவதை நடைமுறைப் படுத்தினார்) அப்படியே தமிழனை மானமுள்ள தமிழனாக நிமிர்த்தியவர் பெரியார்.>
-> பிற மொழியினர் தமிழை மேம்படுத்தலை நாம் காலத்திற்கேற்க ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. வீரமாமமுனிவர் அப்படிப்பட்டவர்.
ஆனால், பெரியாரின் எழுத்து சீர்திருத்தம் என்பது தவறானதாக நிருபிக்கப்பட்டுள்ளது. உ.ம். ஐ என்பதை அய் என எழுதினார். இதில் மாத்திரையளவு வேறுபடுகிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஆதனால், பெரியாரின் எழுத்து சீர்திருத்தம் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.
<சாதியை அவர்போல் யாரும் எதிர்த்ததில்லை. இன்று சூத்திரன் நீதிபதியாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பெரியார்.>
-> சாதி – வேர் என்பதை ஓரிரு வரிகளில் விளங்க வைக்க இயலாதது. சாதி குறித்து பிறகு விரிவாக பேசுவோம்.
ஆனால், இட ஒதுக்கீடு என்பதை 1900 காலங்களிலேயே ஆங்கலேயன் இந்தியாவில் நடைமுறைபடுத்தி விட்டான். பெரியார் அதை மேம்படுத்தினார் என வேண்டுமெனில் சொல்லலாம். ஆனால் அவரால்தான் இட ஒதுக்கீடு வந்தது என சொல்ல முடியாது.
* * * * * * * * * * * *
தமிழனைப் பற்றி பெரியார் : தமிழர்கள் சிந்திக்க….
– 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் பங்கெடுத்த பெரியாரோ நீதிக்கட்சிக்கு தலைவரானவுடன் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ முழக்கத்தை கை கழுவினார். ‘திராவிடநாடு திராவிடருக்கே’ என்று திசை மாற்றிப் பேசினார்.
– நீதிக்கட்சி தலைவர் பொப்பிலி அரசரிடமிருந்த தெலுங்கு தேசிய உணர்ச்சியைப் போல் பெரியாருக்கு தமிழ்த் தேசிய உணர்ச்சி ஏற்படவில்லை.
– நீதிக்கட்சிக்குள் இருந்த சில தெலுங்கர்களின் முடிவுக்கு பெரியார் அடிபணிந்து 1940 இல் நடந்த திருவாரூர் நீதிக்கட்சி மாநாட்டில் திராவிடநாடு தீர்மானத்தை நிறைவேற்றினார்.
– கி.ஆ.பெ.விசுவநாதம் கருத்துக்கு மதிப்பளிக்கத் தயாராக இல்லாத பெரியார் அவர்கள் கட்சியில் செல்வாக்குடன் இருந்த அண்ணாவோடு இணக்கம் கொண்டார். அடுத்த கட்டமாக திராவிட நாடு கோரிக்கையோடு நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றவும் முடிவு செய்தார்.
– நீதிக்கட்சி பொதுச் செயலாளராக இருந்த கி.ஆ.பெ.விசுவநாதம் பெரியாரின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக குரல் கொடுத்தார்.
– தமிழைக் காட்டுமிராண்டி பாஷை – ‘தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்!’ – ஈ வெ ராமசாமி நாயக்கர்
– சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் தமிழ்நாடு என்ற பெயரில் மாநிலம் அமையச் செய்த அறப்போராட்டங்களை அறவே வெறுத்து வந்தார் ஈவேரா. ‘தமிழ், தமிழர், தமிழ்நாடு’ என்று முழக்கமிட்டு வந்தது ஈவேராவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது.
– “தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என்பதும், தமிழரசு, தமிழர் ஆட்சி, தமிழ் மாகாணம் என்றும் பேசப்படுவனயெல்லாம் நம்முடைய சக்தியைக் குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப் படுகின்ற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.” – 11.4.1947 தேதியிட்ட விடுதலையில் ஈவேரா எழுதியது.
– ‘தமிழர் என்பதும், தமிழர் கழகம் என்பதும், தமிழரசுக் கட்சி என்பதும், தமிழர் ராஜீயம்
என்பதும், தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச்சிகள்’ என்று பெரியார் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார். ‘தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்காலிகள்’ என்று எழுதியும், பேசியும்
வருகிறார்கள். தமிழ், தமிழர், தமிழ்நாடு தமிழ் அரசு என்று கூறக்கூடாதென்றும், திராவிடம், திராவிடர், திராவிடக் கழகம், திராவிட நாடு, திராவிட அரசு என்றே கூற வேண்டும். (25.1.1948 அன்று தமிழர்நாடு என்ற ஏட்டில் வரைந்த முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கட்டுரை. )