தமிழ் பெண் விமானி அர்ச்சனாவுக்கு டென்மார்க்கில் உள்ள கேர்னிங் நகரில் அமைந்திருக்கும் டிவான் விருந்தினர் கொண்டாட்ட மண்டபத்தில் கடந்த 28.01.2017 அன்று பாராட்டுவிழா ஒன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
பகல் 12.00 மணிக்கு ரெஸ்லா வாகனத்தில் அழைத்து வரப்பட்ட அவருக்கு அவையினர் வரிசையாக நின்று வரவேற்பளிக்க விழா மண்டபத்தை வந்தடைந்தார்.
டென்மார்க் உட்பட கனடா, நோர்வே, சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி, இங்கிலாந்து நாடுகளில் இருந்து விருந்தினர்கள் பங்கேற்றார்கள், இந்த நிகழ்விற்கு அர்சனாவின் பரத நாட்டிய அரங்கேற்றத்தை நடத்திய கலாக்கேந்திரா நடனப்பள்ளி அதிபர் திரு.திருமதி சுகேந்திரா, சுமித்திரா தம்பதியர் பிரதம விருந்தினர்களாக பங்கேற்றனர், நிகழ்ச்சிக்கான அனுசரணையை ரியூப்தமிழ் சார்பில் வல்வை ரவிசங்கர் சுகதேவன் வழங்கியிருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக டென்மார்க்கின் புகழ்மிக்க கலைஞர்கள், கல்வியியலாளர்கள், வைத்தியக்கலாநிதிகள் உட்பட அல ஆற்றலாளர் பங்கேற்றனர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க பிரான்சில் இருந்து அறிவிப்பாளர் எஸ்.கே.ராஜன், ஜேர்மனியில் இருந்து வலண்டைன் ஆகியோர் வந்திருந்தார்கள்.
வரவேற்புரையை ஆசிரியர். கி.செல்லத்துரை வழங்க, சமயத்தின் வாழ்த்துரையை கல்யாணி கணேசசர்மா எடுத்துரைக்க, விநாயகர் துதியை பாடலரசு பார்திபன் பாட விழா ஆரம்பமானது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
முதல் அம்சமாக வல்வை மண்ணில் சாதனை படைத்த அன்னபூரணி, நீச்சல் வீரன் நவரத்தினசாமி, ஆழிக்குமரன் ஆனந்தன் தொடங்கி அனைத்து சாதனையாளர் பெயர்களும் வாசிக்கப்பட்டு அத்தோடு அர்ச்சனாவின் பெயரும் சேர்த்து புகழாரம் தொடுக்கப்பட்டது.
வல்வை துணிச்சல் மிக்க மண் என்பது ஒரு பார்வை ஆனால் அந்த ஊருக்குள் போவதற்கு மிகப்பெரும் துணிச்சல் இல்லாவிட்டால் போக முடியாது என்ற காலமொன்று போருக்கு முன்னரே இருந்தது, அந்தக்காலத்து அனுபவம் என்று அறிவிப்பாளர் வலண்டைன் கூறினார்.
மதியம் 11.30 ற்கு ஆரம்பமான விழா இரவு ஒன்பது மணிவரை தொடர்ந்து நடைபெற்றது, 20ற்கும் மேற்பட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள், நடனங்கள், பாடல்கள், கருத்துக்கள் என்று பலதரப்பட்ட நிகழ்வுகள் அரங்கினை அலங்கரித்தன.
இனிவரும் காலங்களில் நமது விழா அமைப்புக்கள் சாதனை விழாக்களாக மாற்றப்பட்டு, அத்தோடு கலைகளையும் இணைத்து முன்னெடுக்க வேண்டுமென்ற கோணத்தில் விழா கட்டமைவு எழுதப்பட்டிருந்தது.
மேலும் இது ஒரு விருந்துபசார நிகழ்ச்சியாகவும் அமைந்தது, தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான மரியா என்பவர் டென்மார்க் வந்து, டேனிஸ் மொழியில் சமையற்கலையை போதிக்குமளவிற்கு இன்று முன்னேறியுள்ளார், அவருடைய சமையல் இரவுவரை விருந்துபசாரமாக தொடர்ந்தது.
அத்தருணம் அர்ச்சனா பாடிய மறத்தி என்ற இசைத்தட்டும் வெளியிடப்பட்டது, இதற்காகவே கனடாவில் இருக்கும் இசையமைப்பாளர் ஸ் ரீவ் கிளீவ் வருகை தந்திருந்தார், அதில் றப் இசை வழங்கிய கிளியோபாற்றாவும் சுவிஸ் நாட்டில் இருந்து இணைந்து கொண்டார்.
இவர்களுடன் வஸந்தும் இணைந்த இசை நிகழ்ச்சி முக்கிய நிகழ்வாக களைகட்டியது, பாடல்களை எழுதிய பெண் கவிஞர் நர்வினி டேரி அரங்கில் தோன்றி விளக்கமளித்தார்.
பெண்களுக்கு இழைக்கப்படும் சமுதாய அநீதிகளை தன்னைப்போன்ற ஒரு பெண் கவிஞரே பெண்களின் கோணத்தில் இருந்து முன்வைக்க முடியும் என்றும் தெரிவித்தார் பெண்கள் மாட்டுப்பெண்களாக மாறாது மறத்திகளாக மாறி வாள் எடுக்கும் நெருப்பு வரிகளை கொண்டவை இந்த இசைப்பாடல்கள் என்றார்.
இலங்கை முதல் மலேசியா, அவுஸ்திரேலியாவரை இளம் கவிஞர்களின் சங்கமமாக இந்த இறுவட்டு வெளியானது, பிரபல அறிவிப்பாளர் வலண்டைன் வெளியிட்டு வைக்க முதல் பிரதியை திரு. வேலுப்பிள்ளை மனோகரன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் உரையாற்றிய அர்ச்சனா தனது வாழ்வில் இரண்டு இலட்சியங்கள் இருந்தன முப்பது வயதை எட்டித்தொட முன்னதாக நான் ஒரு முதன்மை விமானியாகி வர்த்த சேவை விமானங்களை ஓட வேண்டும், இரண்டு எனது பாடல்கள் அடங்கிய மியூசிக் அல்பம் வெளியாக வேண்டும், இந்த இரண்டையும் நிறைவேற்றியுள்ளேன்.
நமது உடல் ஒரு கார் போன்றது, உள்ளம் அதன் முன்னால் இருக்கும் விளக்குகள் போன்றது அது போக வேண்டிய இடம் முழுவதையும் தனது ஒளியால் காட்டாது குறிக்கப்பட்ட அளவு மட்டுமே காட்டும் நாம் அது காட்டும் இடம்வரை சென்றால் அடுத்த கட்டத்தை அது மேலும் காட்டும், ஆகவே ஒளி வெள்ளமாக நமக்கு வழிகாட்டும் உள்ளுணர்வின் வழி நடப்போம் உன்னதம் பெறுவோம் என்றார், கல்வி நாம் தொடர்வது மற்றவருக்காக நாம் ஒரு காலமும் கற்கப்புறப்படக்கூடாது, அது ஒளியற்ற கல்வி ஆகிவிடும் என்றார்.
பிரதம விருந்தினர் சுமித்திரா சுகேந்திரா தனது உரையில் அர்ச்சனாவின் நடனத்திறனை எடுத்துரைத்தார், அரங்கேற்றத்தில் 30 நிமிடங்களுக்கு மேற்பட்ட வர்ணத்தை அவர் எப்படி வழங்கினார் என்றும், தமது நடனப்பள்ளியில் வீரம் மிக்க நடனங்களுக்கு அர்ச்சனாவையே தேர்வு செய்வோம் என்றும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
சிம்பொனி தேவன் ஒலியமைப்பு செய்ய, அஜிந் வீடியோ ஒளிப்படமாக்க, பிரபல புகைப்படக்கலைஞர் கம்பர்மலை முரளி படங்களை எடுக்க ஆப்கானிஸ்தான் நாட்டு பாவறற் குழுவினர் மண்டப ஒழுங்கினை வழங்க அர்ச்சனாவின் பாடசாலைத் தோழிகள் விமானப்பணிப்பெண்கள் போல உடையணிந்து விருந்தினருக்கு சேவை செய்ய, ஒரு எயாபஸ் விமானத்தில் பயணிப்பது போன்ற காட்சிப்படிமத்தை ஏற்படுத்தி விழா நடத்தப்பட்டது.
நன்றியுரையாற்றிய அர்ச்சனாவின் தாயார் எஸ். பவானி நாம் இலங்கையில் இருந்து இங்கு வந்த காரணத்தால்தான் இந்த வாய்ப்புக்களை பெற முடிந்தது, இதுபோல திறமையுள்ள பிள்ளைகள் எத்தனையோபேர் இன்று எமது தாயகத்தில் வாய்ப்புக்கள் இன்றி இருக்கிறார்கள், அந்தப்பிள்ளைகளையும் நாம் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றார்.
இலங்கையில் உள்ள திறமைமிக்க பிள்ளைகளுக்கு முன்னேற வழி செய்ய வேண்டியதுதான் நம்முன் உள்ள மாபெரும் கடமை என்றார்.!
Pingback: Nava