சுவிஸ் காவல் துறையினரால் சுட்டு கொல்லப்பட்டதால் தனது தந்தையை இழந்து இலங்கை புதுக்குடியிருப்பில் தவிக்கும் பிள்ளைகளுக்கு யார் பதில் சொல்ல போகிறார்கள்?
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை சுப்ரமணியம் கரன் (வயது 38) அன்மையில் சுவிற்சலாந்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாம் ஒன்றில் சுவிஸ் காவல்துறையால் சுட்டு கொல்லபட்டிருக்கிறார்.
இவர் தங்கியிருந்த இடைத்தங்கல் முகாமில் சக அகதிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றிய நிலையில் அங்குள்ள சக அகதிகளால் காவல்துறைக்கு முறையிடப்பட்டுள்ளது. அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த ஈழத்தமிழன் மீது சரமாரியாக துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் தலத்திலேயே அந்த நபர் பரிதாமாக பலியாகியுள்ளார்.
காவல்துறை என்பது மக்களை பாதுகாப்பதற்கே என்பதல்லாமல், இப்படி காவு எடுப்பதற்கு இல்லை! தாயகத்தில் சிங்கள அரசின் கொடுமை தாங்க முடியாமல் அகதிகளாக புலம்பெயர்ந்து வந்த நிலையில், இங்கும் இப்படி பாதுகாப்பு இல்லை எனில் எங்கு செல்வார்கள் என்பது கேள்விக் குறியாகிறது?
கடந்த 2015 ஆம் ஆண்டு தஞ்சம் கோரி சுவிஸ் நாட்டுக்கு சென்ற சுப்ரமணியம் கரன் கடந்த 2 வருடங்களாக சுவிஸ் நாட்டின் டிசினோ மாகாணத்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இயல்பாகவே சாதரண சுபாவத்தை கொண்ட இவர் போரால் மிகவும் கடுமையான பாதிப்புக்களை சந்தித்த புதுக்குடியிருப்பில் ஆனந்தபுரம் என்னும் கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர்.
இறுதிப்போரில் அனைத்து உடமைகளையும் இழந்து உறவுகளையும் இழந்து வாழ்ந்த இவர், 2015 ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டுக்கு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தஞ்சம்கோரி சென்றார்.
இந்த நிலையில் அன்மையில் சக அகதிகளுடன் ஏற்பட்ட மோதல் முற்றிய நிலையில் அங்கு வந்த சுவிஸ் நாட்டு காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். தமது தந்தை இங்கு இருக்கும் போதும் பாரதூரமான எந்த விதமான குற்றங்களிலும் ஈடுபடாதவர் என கூறும் இவரது பிள்ளைகள் சுட்டுக் கொல்லும் அளவுக்கு எமது தந்தை எந்த தவறும் செய்திருக்க மாட்டார் என உறுதிபட தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கி பிரயோகம் குறித்து சுவிஸ் நாட்டு அரசால் நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு தமக்குரிய பதில் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை இவரின் உறவினர்கள் விடுத்துள்ளனர்.
இருந்தபோதும் சுவிஸ் அரசின் காவல்துறையின் மீது எவ்விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது. அத்தோடு மட்டுமல்லாது, குற்றவாளிகளை காப்பாற்றும் முகமாகவே செயல்பட்டு வருகிறது. புதிய புதிய கதைகளை கூறி பாதிப்புக்குள்ளான தமிழன் மீது வீண் பழிகளை சுமத்தி கபட நாடகம் ஆடிவருகிறது.
எதுவாக இருந்தாலும் சுவிஸ் அரசு இந்த உயிர் பலிக்கு என்ன பதில் கூற போகிறது?