உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான்!

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான்!

சர்வேதச துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி கடலூரில் இளவேனில் வளரிவான் பிறந்தார். இவர் தனது இரண்டாவது வயதில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதிக்கு குடி பெயர்ந்தார். அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். இவர் 2012ஆம் ஆண்டு தனது 13ஆவது வயதில் முதல் முறையாக துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார். முதலில் இவர் இதனை ஒரு பொழுது போக்காக நினைத்து மேற்கொண்டார். ஆனால் தற்போது அது அவரது வாழ்க்கையின் சிறந்த லட்சியமாக மாறியுள்ளது.

பிரேசிலின் ரியோ டி ஜெனரியோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 72 நாடுகளைச் சேர்ந்த 541 வீரர், வீராங்கனைகள் இந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்று உள்ளனர். அவர்கள் பதக்கத்துக்கு மட்டும் போட்டி போடவில்லை. 2020-ம் ஆண்டு டோக்கியோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம் என்பதால் இந்தத் தொடர், அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வளரிவான் 251.7 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இளவேனில், உலகக் கோப்பை தொடரில் இந்தப் பிரிவில் தங்கப்பதக்கம் வெல்லும் 3 வது இந்தியர் ஆவார். முன்னதாக அபூர்வி சந்தேலா, அஞ்சலி பகவட் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

20 வயதே ஆன வீராங்கனை இளவேனில், சீனியர் பிரிவில் தனது முதலாவது பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். முன்னதாக முனிச் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் 4 -வது இடம் பிடித்து பதக்கத்தைத் தவறவிட்டவர் இந்தமுறை அசத்திவிட்டார்.

இளவேனில் சீனியர் பிரிவில் தங்கம் வெல்வது இதுதான் முதல்முறை என்றாலும் ஜூனியர் பிரிவில் இந்தியாவுக்காகத் தங்கப்பதக்கம் பெற்று தந்திருக்கிறார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதலில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

இளவேனிலுக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பதக்கம் வென்ற ககன் நரங், “தேசிய விளையாட்டு தினம் இனிப்பான தினமாகியுள்ளது. இளவேனில் சீனியர் பிரிவில் தன்னுடைய முதலாவது தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: