ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, மீள்பார்வை :
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பெறுகின்றன. 30 வருடகால போர் மிகவும் கொடூரமாக முடிவடைந்த முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
இறுதிக் கட்ட யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள திறந்தவெளி தரை பகுதியில் கூடாரங்களைக் கட்டி, பொதுமக்கள் தங்கியிருந்தனர்.
குறிப்பாக, வட பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் வசமிருந்த அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள், இறுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டதாக அந்த பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு கீழ், பதுங்கு குழிகளை அமைத்து, தங்கள் உயிர்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது, பதுங்கு குழிகளை அமைப்பதற்கான மணல் மூடைகளை செய்ய, மக்கள் தங்கள் பழைய ஆடைகளை பயன்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னி நிலப்பரப்பில் இருந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள், இறுதிக் கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியிலேயே ஒன்று திரண்டிருந்தனர்.
ஓர் ஊசியை போட்டலும், நிலத்தில் அது விழாத வண்ணம் மக்கள் நெரிசல் காணப்பட்டதாக இறுதிக் கட்ட யுத்தத்தின் உயிர்தப்பியவர்கள் நினைவு கூர்கின்றனர்.
இவ்வாறு நெரிசலாக காணப்பட்ட மக்களின் மீதே இறுதியாக ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, பல லட்சக்கணக்கான மக்கள் உயிர் நீத்ததாக அந்த பகுதியில் யுத்தத்தை எதிர்கொண்டவர்கள் தெரிவித்தனர்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிரிழந்த மக்களின் நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதை காண முடிந்தது. இந்த நினைவு தூபியை தவிர்த்து, அவ்வளவு உயிர்கள் அந்த இடத்தில் பலியானதற்கான வேறு எந்த அறிகுறியும் இல்லாமல்தான் அந்தப்பகுதி வெறிச்சோடிய நிலையில் இருந்தது. இலை உதிர்ந்த நிலையிலான மரங்கள், வறண்ட நிலம், கடும் தட்பவெப்பம் என்ற நிலைமையே அந்த இடத்தில் காணப்படுகின்றது. எனினும், இந்த நினைவு தூபிக்கு சற்று தொலைவில் சில வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
வீட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிலை, பல அர்த்தங்களை வெளிகொணரும் வகையில் இருக்கின்றது.
வயோதிகர் ஒருவர், யுத்தத்தில் காயமுற்று மயங்கிய அல்லது உயிரிழந்த நிலையிலுள்ள பெண்ணொருவரை தனது கைகளில் ஏந்தியவாறு, ஒரு சிறுவனுடன் முன்னோக்கி வரும் வகையில் அந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அப்பகுதியிலுள்ள கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரினால் ஸ்தாபிக்கப்பட்டதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
வீடுகள் கட்டப்பட்டு மக்கள் குடியேற்றப்பட்ட போதிலும், தம்மை சூழ இன்றும் பாதுகாப்பு படையினர் அங்கு நிலைகொண்டிருக்கும் காரணத்தால் தாங்கள் இன்னும் பீதியின் பிடியிலேயே இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இறுதிக்கட்டப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட, தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் இன்னமும் உறவுகளைத் தேடித்திரியும் உறவினர்கள் மே மாதம் 18ஆம் தேதி இந்த நினைவுத்தூபிக்கு முன்பாக வந்து தங்களது உறவுகளை நினைத்தபடி முள்ளிவாய்க்கால் நிலத்தை கண்ணீரால் நனைத்தபடி கதறியழும் காட்சிகளை மறக்கமுடியாது.
2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தக் காலத்தில் முள்ளிவாய்க்கால், நந்திக்கடல், வட்டுவாகல் ஆகிய பகுதிகளில் வானைப் பிளக்கின்ற யுத்தச் சத்தங்கள், பூமியை இரத்தக் கறையாக்கியிருந்தன.
நந்திக்கடலில் உயிர்நீத்து வீழ்ந்துகிடந்த பலருடைய சடலங்களுக்கு மேலே, உயிர் தப்ப முயற்சித்த ஏராளமான தமிழர்கள், தங்கள் குழந்தைகள், உறவினர்களுடன் பதைபதைப்புடன் ஓடும் காட்சிகளும், மரண ஓலங்களும் மறக்கமுடியாத வடுவாக இன்றும் மறையாமல் இருப்பதா அகதி முகாம்களில் வாழ்ந்த பலர் கூறுகிறார்கள்.
- பிபிசி