இலங்கையின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார ராஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன் (ஆளும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்) கடந்த திங்கள்கிழமை அன்று யாழ்பாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, “2009-ம் ஆண்டுக்கு முன்னர் நாம் எப்படி இருந்தோம். நாம் தலைநிமிர்ந்து வாழ, தெருவில் சுதந்திரமாக நடமாட, நமது குழந்தைகள் பத்திரமாக பள்ளி சென்று வர தற்போது உள்ள சூழலில் விடுதலை புலிகள் மீண்டும் வந்தால் மட்டுமே சாத்தியம்” என கூறினார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இதனை மேற்கோள் காட்டி பேசிய விஜயகலா, ‘’இதற்காகவா மைத்திரிபால சிறிசேனாவுக்கு நாங்கள் வாக்களித்தோம்’’ என்றார். வடக்கு மாகாண பகுதியில் எந்த வளர்ச்சி திட்டமும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். விஜயகலாவின் இந்த பேச்சு அந்நாட்டு பாராளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆளும் கட்சி விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய கல்வி மந்திரி அகில விராஜ் கரியவாசம், “விஜயகலாவின் பேச்சு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது” என்றார். தனது கட்சியைச் சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன் சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்தார்.
இந்நிலையில், வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ”நாங்கள் எங்கள் உரிமைகள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எங்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று அழைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். வடமாகாணத்தின் தற்கால பாதுகாப்பற்ற நிலையையும் முன்னைய பாதுகாப்பான நிலையையும் பற்றி விமர்சிக்க எவருக்கும் உரிமை உண்டு” என்று குறிப்பிட்டு இருந்தார். அந்த நாள் இன்று வந்திடாதோ என்று விஜயகலா கூறுவதால் அவர் தீவிரவாதி ஆகிவிட முடியாது. புலிகள் காலத்தில் எம் மக்கள் பொதுவாகப் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பது உலகறிந்த உண்மை. ஆகவே, விஜயகலா தனது கடமைகளைத் தொடர்ந்து பணியாற்ற அவரின் கட்சி இடமளிக்க வேண்டும். அவர் தேசியக் கட்சியில் இடம்பெறுவதால் தமிழச்சி என்ற அந்தஸ்தை இழந்தவராகக் கணிக்கக்கூடாது. விஜயகலா-வின் சுதந்திரமும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தனது அறிக்கையில் முதல்வர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் விஜயகலா தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபாலா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோருக்கு நேற்று அனுப்பி வைத்தார். இதுகுறித்து விஜயகலா தனது முகநூல் பக்கத்தில், ”மக்களின் துன்பங்களை பொறுத்துக்கொள்ள முடியாமையினாலேயே குரல் கொடுத்தேன். மக்களுக்காகவே பதவி துறந்தேன். வடக்கில் மக்களின் துன்பங்களை துயரங்களை வெளிக்கொணரும் வகையிலேயே நான் கருத்துத் தெரிவித்திருந்தேன். அத்தகைய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியும் மக்களுக்காகவும் எனது அமைச்சுப் பதவிலியிருந்து ராஜினாமாச் செய்துள்ளேன்.
வடக்கில் குறிப்பாக யாழ்குடாநாட்டில் வன்முறைகளும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. ஆறு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 59 வயதான வயோதிபப் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் கொள்ளையும் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. போதைவஸ்து பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் மக்களின் துன்பங்களைத் தாங்கமுடியாது புலிகளின் காலத்தை நினைவூட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஆறு வயதுச் சிறுமியின் படுகொலை உட்பட வன்முறைகள் குடாநாட்டில் அதிகரித்து வருவதனால் மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியின்றி வாழ்கின்றனர். இந்த நிலையில் மக்களின் துன்பங்களை வெளிக்கொணர வேண்டியது அவர்களது பிரதிநிதியான எனது கடமையாகும். இதனால்தான் மக்களின் துன்பங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் எனது கருத்தினை தெரிவித்திருந்தேன். மக்களின் துன்ப துயரங்களை பறைசாற்றாது மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது. இதனால்தான் வடபகுதி மக்களின் துன்பங்களை எடுத்துக்கூறும் வகையில் உரையாற்றியிருந்தேன். இந்தக் கருத்து தென்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமையால் இவ்விடயம் தொடர்பில் கட்சித்தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளேன்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமரும் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது என்னுடன் தொடர்புகொண்டு எனது கருத்துக் குறித்து கலந்துரையாடினார். இதன்போது எனது நிலைப்பாட்டினை அவருக்கு விளக்கிக் கூறினேன். எனது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் வேண்டுமானால் அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமாச் செய்வதற்கு நான் தயாராகவுள்ளதாக பிரதமரிடம் நான் எடுத்துக்கூறினேன். ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதன் பின்னர் கொழும்பு திரும்பிய நான் புதன்கிழமை மாலை பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வடக்கில் குறிப்பாக குடாநாட்டில் இடம்பெற்று வரும் போதைப்பொருள் பாவனை, வன்முறைகள், படுகொலைகள் தொடர்பில் எடுத்துக்கூறியதுடன் மக்களின் துன்பங்களைப் பொறுக்க முடியாமையால்தான் நான் உரையாற்றியதாக விளக்கமளித்தேன். தற்போது எனது உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமையால் கட்சியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தற்காலிகமாக அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு நான் தயார் என்று பிரதமரிடம் எடுத்துக் கூறினேன்.
இதற்கிணங்கவே நான் எனது அமைச்சுப் பதவியை ராஜினாமாச் செய்துள்ளேன். என்னைத் தெரிவுசெய்த மக்களின் பிரச்னைகளை வெளிக்கொணர வேண்டியது அவசியமானதாகும். மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கின்றபோது நாம் எதனையும் செய்யாது வேடிக்கை பார்க்க முடியாது. இதனால்தான் மக்களின் துன்பங்களில் எடுத்துக்கூற நான் முயன்றேன். இதனால் தென்பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதனால் எனது அமைச்சுப் பதவியினை மக்களுக்காக மகிழ்ச்சியுடன் இராஜினாமாச் செய்துள்ளேன்.
எனது மக்களுக்காக குரல் எழுப்பியமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பிலான எத்தகைய விசாரணைகளையும் எதிர்கொள்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன். வடக்கு மக்கள் எம்மை தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காகவுமே தெரிவுசெய்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் துன்பப்படுமபோது நாம் பேசாதிருக்க முடியாது.
வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைகள் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வறான சூழல் ஏற்படுவதற்கு அரசாங்கமானது உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆறு வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்டமை போன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடரக்கூடாது. மக்களுக்காக அமைச்சுப் பதவியை ராஜினாமாச் செய்துள்ளமை தொடர்பில் நான் பெருமை கொள்கின்றேன்” என்று கூறியுள்ளார்.