இலங்கை வடக்கு மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகிய விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டணிக்கு போட்டியாக தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய அணியை தொடங்கியுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மாகாண கவுன்சில் பதவிக்காலம் நேற்றுடன் (23/10/2018) முடிவடைந்தது. இதையடுத்து வடக்கு மாகாண முதல்வராக பதவி வகித்த விக்னேஸ்வரன் இன்று (24-10-2018) முறைப்படி பதவி விலகினார். இதைத் தொடர்ந்து நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு சென்ற அவர் தமிழ் தேசியக் கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் புதிய கட்சி ஒன்றை தொடங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
‘‘இலங்கையில் 2015-ம் ஆண்டு புதிய அரசு பதவியேற்றது. அது மக்கள் நல அரசாக திகழும் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்தது. ஆனால் முந்தைய அரசுக்கும் இந்த அரசுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசை திருப்ப கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே எடுத்தது. 60 தமிழர்கள் இன்னமும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் வசிக்கின்றனர்.
தமிழர்களின் கோரிக்கைக்காகவே நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்து ஒன்றுபட்ட தமிழர் நிலமாக விளங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். தமிழர்களின் எண்ணத்தை பிரதிபலிக்க தமிழ் தேசியக் கூட்டணி தவறி விட்டது. எனவே தமிழ் தேசியக் கூட்டணியில் இருந்து விலகுகிறேன். தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய அணி உருவாக்கப்படும். தமிழர் சார்ந்த கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழ் மக்கள் கூட்டணி செயல்படும்’’ என தெரிவித்தார்.