ரணில் விக்ரமசிங்க தலைமையில் அக்டோபர் 26 ஆம் தேதிக்கு முன்பிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீளமைப்பதற்கு தாம் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு, இக்கூட்டமைப்பு அனுப்பி வைத்த கடிதத்தில் இவை குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள போதும், மேற்படி கடிதத்தில் நாடளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் எஸ். வியாழேந்திரன் ஆகியோர் கையெழுத்திடவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் பொருட்டு அண்மையில் அணி மாறி, பிரதியமைச்சுப் பதவியினைப் பெற்றுக் கொண்டார்.
அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும், அண்மைக்காலமாக கட்சியுடன் முரண்படும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில்; ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட, நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையினைப் பெறக் கூடியவர் என, நீங்கள் கருதும் நபரை, பிரதம மந்திரியாக நியமிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், புதிய பிரதமர் கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி நியமிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்து விட்ட போதும், நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை உள்ளமையை நிரூபித்துக் காட்ட முடியாதவராக, அவர் உள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமராக இருப்பதற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள், கடந்த 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.