சிறையில் தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டு விடுவதாக மிரட்டிய, இலங்கை அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிறைச்சாலைகள் துறை இணையமைச்சராக இருந்தவர் லோஹன் ரத்வத்தே, கடந்த 12ம் தேதி மாலை இலங்கையில் உள்ள அனுராதபுரம் சிறைச்சாலையை பார்வையிட சென்றார். அப்போது, சிறைக்குள் கைதிகளை பார்வையிட்ட அவர், அங்கிருந்த 2 தமிழ் அரசியல் கைதிகளை மட்டும் அழைத்து அவர்களை மண்டியிட வைத்து தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இலங்கை முழுவதும் இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.
இலங்கைக்கான ஐநா பிரதிநிதியான ஹன்னா சிங்கர் ஹம்டியும் ரத்வத்தேவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி சர்வதேச அளவில் இலங்கை அரசுக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து, பதவியை ராஜினாமா செய்யும்படி ரத்வத்தேவுக்கு இத்தாலிக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது. இது வெளியான சிறிது நேரத்தில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு லோஹன் ரத்வத்தே தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.
சர்ச்சை அமைச்சர்
* சிறைக்குள் செல்பவர்கள் யாராக இருந்தாலும், தனது சொந்த பாதுகாப்புக்கான ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்பது சட்டம். ஆனால், அதை மீறி தனது கைத்துப்பாக்கியை ரத்வத்தே சிறைக்குள் எடுத்துச் சென்றுள்ளார்.
* அனுராதபுரம் சிறைக்கு செல்வதற்கு முந்தைய நாள் நள்ளிரவு தனது நண்பர்களை அழைத்துச் சென்று, கொழும்பு பிரதான சிறையில் கைதிகளை தூக்கிலிட பயன்படுத்தப்படும் தூக்கு மரத்தை ரத்வத்தே காட்டியதும் சர்ச்சையாகி இருக்கிறது.
நன்றி : தினகரன்