காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் – முடிவில்லாத துயரக் கதை!

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் – முடிவில்லாத துயரக் கதை!

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் ஒருபக்கம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருக்க அந்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் உள்ள காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு அருகில் அமர்ந்து கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக போராடிவரும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு நீண்ட, துயரமான கதை இருக்கிறது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடந்த 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு – கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது.

வெளியே சென்று வீடு திரும்பாதவர்கள், ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பாதவர்கள், கடத்திச் செல்லப்பட்டவர்கள், 2009ல் போர் முடிவுக்கு வந்தபோது சரணடைந்தவர்கள் என காணாமல்போன இவர்களது உறவினர்கள் கடந்த 30 ஆண்டுகளாக நம்பிக்கை இழக்காமல் தங்கள் உறவுகளைத் தேடி வருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துத் தரக்கோரி நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. வவுனியாவில் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாகவும் யாழ்ப்பாணத்தில் 50 நாட்களுக்கு மேலாகவும் காணமல் போனவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலருக்கு தங்கள் உறவினர்கள் இன்னும் உயிரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தம் வாழ்வின் இறுதிக் கட்டத்திலாவது அவர்களைப் பார்த்துவிட மாட்டோமா என காத்திருக்கிறார்கள்.

காணமல் போனோர் குறித்து விசாரிப்பதற்காக கடந்த 2017ல் சாலிய பீரிஸ் தலைமையில் காணமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகம் 2019லிருந்து யாழ்ப்பாணத்திலும் செயல்பட்டு வருகிறது.

ஆனால், காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்களைப் பொறுத்தவரை இந்த அலுவலகத்தின் செயல்பாடுகளை அவர்கள் ஏற்கவில்லை. அதனை மரணச் சான்றிதழ் வழங்கும் அலுவலகம் என குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைப் பொறுத்தவரை, முழுமையான விசாரணை நடந்து சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். 

காணாமல் போனவர்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் மட்டும் 2000க்கும் அதிகமான முறைப்பாடுகள் பெறப்பட்டிருக்கின்றன. அங்குள்ள காணாமற்போன ஆட்களுக்கான அலுவலகம் இது குறித்து பேசுவதற்கு மறுத்துவிட்டது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: