தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிப்பு!

தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிப்பு!

தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிப்பு!

தூத்துக்குடி திரேஸ்புரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சென்ற நாட்டுப் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ச்சியாக சிறைப் பிடித்து வருகின்றனர். தற்போது வரை சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர்கள் 29 பேர், இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 177 படகுகள் இலங்கை அரசின் பிடியில் உள்ளன. இந்நிலையில், பாக் நீரிணையில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படையினர் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினருக்கு கோரிக்கை விடுத்திருப்பதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை, வரும் 31-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த மரிய பாக்கியத்துக்குச் சொந்தமான நாட்டுப்படகில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, தங்கு கடல் மீன்பிடிக்க திரேஸ்புரம் அந்தோணி, ரூபின்சன், வில்பிரட், விஜய், ரமேஷ், ஆரோக்கியம், முனியன், இசக்கி முத்து ஆகிய 8 பேர் சென்றிருந்தனர். இவர்கள், தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து 70 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்றனர்.மேலும், மீனவர்கள் சென்ற நாட்டுப்படகையும் பறிமுதல் செய்தனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்திய இலங்கைக் கடற்படையினர், இலங்கை கல்பட்டி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் நாளை புத்தளம் மாவட்ட மீன்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது. வழக்கமாக, பாக் நீரிணைப் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை சிறைப்பிடிக்கும் இலங்கைக் கடற்படையினர், தற்போது மன்னார் வளைகுடா கடல் பகுதியிலும் தங்களது கைது நடவடிக்கைகளைத் துவக்கியிருப்பது, தென்கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: