மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்புக்கு இணங்க விடுவிக்கப்பட்டுள்ளார்.
“அண்மையில் பொதுமன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்தப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் நீதிமன்றத்தில் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், சிறை வைக்கப்பட்டிருந்த ராணுவத்தினர் 34 பேரும் அடங்குகின்றனர். அதிலும் குறிப்பாக, மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தறுத்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் வைத்து 19 டிசம்பர் 2000ஆம் ஆண்டு ராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட எட்டு தமிழர்களின் சடலங்கள், கழுத்தறுக்கப்பட்ட நிலையில், மலசலக் குழியொன்றிலிருந்து மீட்கப்பட்டன. மேற்படி நபர்கள் கடத்தப்பட்ட மறுநாள் 20ஆம் தேதி இந்தப் படுகொலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எட்டுப் பேரில் 05 வயது சிறுவனும், பதின்ம வயதுடைய மூவரும் அடங்குவர். இதனையடுத்து இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்டார்கள் எனும் குற்றசாட்டில் ராணுவத்தைச் சேர்ந்த ஐவர், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25ஆம் தேதி, ராணுவத்தில் சார்ஜன் தரத்திலிருந்த சுனில் ரத்நாயக்க என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சந்தேக நபர்களான ஏனைய ராணுவத்தினர் நால்வருக்கும் எதிராக, போதியளவு ஆதாரங்கள் இல்லை என்கிற காரணத்தினால், அவர்களை குறித்த வழக்கிலிருந்து விடுவிப்பதாகவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.