அகதிகளாக வாழ்ந்து, அகதிகளாகவே, சாக வேண்டுமா? – இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் குமுறல்!

அகதிகளாக வாழ்ந்து, அகதிகளாகவே, சாக வேண்டுமா? – இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் குமுறல்!

‘இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நிலையை நினைத்தாலே இதயத்தில் ரத்தம் கசிகிறது’ – சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வேதனை பொங்க தெரிவித்த கருத்து இது.

திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவரும் ஜெகதீஸ்வரன், யோகேஸ் வரன் உள்ளிட்ட 65 இலங்கைத் தமிழர்கள், இந்திய குடியுரிமை வழங்கக்கோரி கடந்த 2009-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கிய போதுதான் நீதிபதி இப்படிச் சொன்னார்.

இந்த வழக்கில், ‘16 வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்க வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட, அதுதொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் ஈழத் தமிழர்கள்.

திருச்சி, கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் தனது அடையாளத்தை மறைத்துக் கொண்டு நம்மிடம் பேசிய ஈழத்தமிழர் ஒருவர், ‘‘ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தமிழகத்திலிருந்து லட்சக் கணக்கான தமிழர்களை, தோட்ட வேலைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்படிக் குடியேறிய தமிழர்களை, இலங்கை விடுதலை அடைந்த பிறகு திருப்பி அனுப்பிட அந்நாட்டு அரசு முடிவெடுத்தது. 1964-ல் இந்திய அரசும் இலங்கையும் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வந்தார்கள். பாதி பேர், திரும்பிவர மனமில்லாமல் அங்கேயே தங்கிவிட்டார்கள்.

கடந்த 1983-ம் ஆண்டு, இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரம் மற்றும் போர் காரணமாக, தமிழர்கள் பலர் உயிரைப் பாதுகாத்திட நினைத்து, கடல் மார்க்கமாக குடும்பத்தோடு இந்தியா வந்தோம். எங்களைச் சிறப்பு முகாம்களில் தங்க வைத்தனர். இங்கு வந்து 36 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்னமும் அகதிகளாகவே உள்ளோம். நாங்கள் அகதிகளாக வாழ்ந்து, அகதிகளாகவே சாக வேண்டுமா?

நாங்களும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள்தான். வயிற்றுப்பிழைப்புக்காக எங்கள் முன்னோர் தோட்ட வேலைக்குச் சென்று அங்கு குடியேறினார்கள். அதைக் கருத்தில் கொண்டு எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். இந்தக் கோரிக் கையை வலியுறுத்தி, கடந்த 10 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்திவருகிறோம்.

இதுவரை வழக்கை இழுத்தடித்த தமிழக அரசு, நாங்கள் சட்ட பூர்வமாக இந்தியா வரவில்லை என்றும், அதனால் எங்களுக்குக் குடியுரிமை பெறத் தகுதியில்லை என்றும் நீதி மன்றத்தில் கூறியது. இங்கே வந்து 36 ஆண்டுகளாக குடும்பத்தினருடன் வசிக்கும் எங்களை, வாழ்நாள் முழுக்க அகதிகளாகவே வைத்திருக்க நினைக்கிறார்கள் போல.

எங்கள் வலிகளையும், வேதனைகளையும் புரிந்து கொண்ட நீதிபதி, இந்திய குடியுரிமை பெற புதிய விண்ணப்பம் வழங்க வேண்டும் என்றும், அந்த விண்ணப்பங்களை மத்திய அரசுக்கு அனுப்பி, 16 வாரங்களில் நடவடிக்கை எடுத்து குடியுரிமை வழங்கிட வேண்டும் என்றும், திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட் டார். இதன் பிறகாவது எங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் வருமா எனக் காத்திருக்கிறோம்’’ என்றார்.

தமிழகத்தில் 115 அகதிகள் முகாம்கள் இருக்கின்றன; 1,05,043 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். முகாம்களில் 73,241 பேரும், வெளியில் 31,802 பேரும் உள்ளனர். தற்போது உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

முகாம்வாசிகளில் உயர்கல்விக்குச் செல்வோர் எண்ணிக்கை மிகக்குறைவு. இவர்களால் வீடோ நிலமோ வாங்க முடியாது. வெளியூர் சென்று சில நாள்கள் தங்க முடியாது. அந்தளவுக்குக் கண்காணிப்பும் கட்டுப்பாடும் இருக்கிறது.

இந்தியாவில் பிறந்த அகதிகளின் குழந்தைகளுக்கு, பிறப்பின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமை வழங்கப்படவேண்டும் என்பது விதி. ஆனால், இந்திய அரசு அவர் களை இந்தியக் குடிமக்களாக ஏற்கவில்லை. அவர்களையும் அகதிகளாக்குகிறார்கள்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு தமிழர். அவர் வெளியுறவுத்துறையில் பணி யாற்றியதால், இலங்கையில் நடந்த விவகாரங்கள் குறித்தும் போரின் துயரங்கள் குறித்தும் முழுமையாக அறிவார். ஆகையால், 36 வருடங்களாகக் குடியுரிமைக் கேட்டுப் போராடும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்.

மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவுபடி, அனைத்து அகதிகள் முகாம்களுக்கும் அரசு அதிகாரிகளை அனுப்பி, உரிமை கோரும் விண்ணப்பங்களை அரசு தரவேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இதற்காகச் சிறப்பு பிரிவு ஏற்படுத்தி, பெறப்படும் விண்ணப்பங்களை விரைவாக மத்திய அரசுக்கு அனுப்பி குடியுரிமை கிடைக்க வழி செய்ய வேண்டும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: