தமிழ் மொழி பாடசாலைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் வைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக ஊவா மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
ஊவா மாகாணத்தில் 203 தமிழ் மொழி பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில், முதற்கட்டமாக 140 பாடசாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, மலையக பெருந்தோட்ட மக்களுக்காக சேவையாற்றி உயிர் நீத்த அரசியல் தலைவர்கள் மூவரின் பெயர்கள் மூன்று பாடசாலைகளுக்கு சூட்டப்பட்டுள்ளன.
01. பதுளை கோணமுட்டாவ தமிழ் வித்தியாலயம், பதுளை சந்திரசேகரன் தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
02. பதுளை கம்பஹா தமிழ் வித்தியாலயம், பதுளை வேலாயுதம் தமிழ் மகா வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
03. பண்டாரவளை பூணாகலை தமிழ் மகா வித்தியாலயம், ஸ்ரீ சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ஊவா மாகாண சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தமிழ் பாடசாலைகளின் பெயர்களை மாற்றும் நடவடிக்கைக்கு கடந்த காலங்களில் சில தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில், ஊவா மாகாண சபை கடந்த 8 ஆம் தேதி கலைக்கப்பட்ட நிலையில், அன்றே தமிழ் பாடசாலைகளின் பெயர்களை மாற்றும் வர்த்தமானி அறிவித்தலில் மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் கையெழுத்திட்டிருந்தார்.
மாகாண சபை கலைக்கப்படும் தருணத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தல் கையெழுத்திட்டமை சில தரப்பினரால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- பதுளை ஊவாக்கலை தமிழ் வித்தியாலயம், பதுளை சுவாமி விவேகானந்தர் தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
- பதுளை கொக்காகளை தமிழ் வித்தியாலயம், பதுளை விவேகானந்தர் தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
- மொனராகலை கமேவெல தமிழ் மகா வித்தியாலயம், மொனராகலை திருவள்ளுவர் தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
- பதுளை டைரபா தமிழ் வித்தியாலயம், பதுளை பாரதி தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
- பதுளை ரோஹம்டன் தமிழ் வித்தியாலயம், பதுளை பெரியார் தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
- பதுளை நாயபெத்த இலக்கம் 1 தமிழ் வித்தியாலயம், பதுளை ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தில் வேற்று மொழிகள் மற்றும் இலக்கங்களில் அடையாளப்படுத்தப்பட்ட தமிழ் பாடசாலைகளின் பெயர்கள், தமிழ் மொழியில் மாற்றப்பட்டமைக்கு சர்வதேச அளவில் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.